Published:Updated:

உலகின் நம்பர் ஒன் உளவாளி !

கார்க்கிபவா

உலகின் நம்பர் ஒன் உளவாளி !

கார்க்கிபவா

Published:Updated:

ரே கதாநாயகன், கிட்டத்தட்ட ஒரே கதை, கிட்டத்தட்ட ஒரே திரைக்கதையும்கூட... தொழில்நுட்பங்களும் இடங்களும் மட்டும் மாறும். இந்த 'ஃபார்முலா’ சுமார் 20 வருடங்களாக ஹிட். 'மிஷன் இம்பாசிபிள்’ படத்தின் ஐந்தாம் பாகம் 'ரோக் நேஷன்’ அகில உலகத்திலும் தெறி ஹிட்! 

'டாம் க்ரூஸ்’ என்ற ஒற்றை மனிதனின் அசால்ட் சாகசங்களைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். உலகத்தின் சூப்பர் ஸ்பை பட்டத்தை மிக அழுத்தமாகத் தக்கவைத்திருக்கிறான் 'ஈதன் ஹன்ட்’!  

ஐந்தாம் பாகத்தின் கதை என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'சிண்டிகேட்’ எனப்படும் ஒரு ரௌடி அமைப்பு, கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அந்த அமைப்பின் பின்னணியைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார் டாம் க்ரூஸ். அப்போது டாம் அணியினரின் அமைப்பான 'ஐ.எம்.எஃப்’-ஐ முடக்குகிறது சி.ஐ.ஏ. டாம் தேடப்படும் நபர் ஆகிறார். இந்தச் சிக்கல்களுக்கு நடுவே, சிண்டிகேட் அமைப்பைக் கண்டுபிடிப்பதோடு 'ஐ.எம்.எஃப்’ அமைப்பையும் டாம் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை!

உலகின் நம்பர் ஒன் உளவாளி !

ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களின் அதிரடி அம்சமே... ஆரம்ப சேஸிங்தான். இந்தப் படத்தில் அதை 'அதுக்கும் மேலே’ லெவலுக்குக் கொண்டுசென்றுவிட்டார் டாம். தரையில் இருந்து பறக்கத் தயாராகும் விமானத்தில் தொங்கியபடி பயணித்து, ரசிகர்களின் பி.பி-யை எகிறவைத்து அப்ளாஸ் அள்ளுகிறார். 'மிஷன் இம்பாசிபிள்’ படங்களில் தவறாமல் இடம்பெறும் செம சாகசத் திருட்டு முயற்சி, இந்த முறை அதிவேகமாகத் தண்ணீர் பாயும் சேம்பருக்குள் நடக்கிறது. இப்படி நெருப்பைத் தவிர நீர், நிலம், வானம், காற்று என நான்கு பூதங்களுடனும் டூப் போடாமல் மல்லுக்கட்டி மஸ்து காட்டியிருக்கும் டாமுக்கு வயது 53.

ஆச்சர்யமாக... படத்தின் இறுதிக் காட்சி தவிர மற்ற சமயங்களில் டாம் சொதப்பிக்கொண்டே இருக்கிறார். அப்போது எல்லாம் ஜெயிப்பவர், படத்தின் ஹீரோயின் ரெபேக்கா. 'உன் உயிரை ரெண்டு தடவை காப்பாத்திட்டேன். மூணாவது தடவையும் சிக்குனா... மவனே சட்னிதான்!’ என ரெபேக்கா சொல்லும்போது, அமைதியாகக் கேட்டுக்

கொள்கிறார் டாம். ஒரு காட்சியில் உயரமான கட்டடத்தில் இருந்து டாமும் ரெபேக்காவும் குதிக்க வேண்டும். சட்டென டாமிடம் தன் ஹை ஹீல்ஸ்களைக் காட்டி, 'ஷூஸ்... ஷூஸைக் கழட்டு’ என்கிறார் ரெபேக்கா. ஷூக்களை அமைதியாகக் கழட்டுகிறார் டாம். மோட்டார் பைக் சேஸிங்கில் டாமையே கவிழ்த்துப்போட்டுப் பறக்கிறார். இப்படிச் சிக்கும்போது எல்லாம் டாமைச் சிதைத்து

அனுப்புகிறார் ரெபேக்கா. பின்னர் டாமுக்கு என்னதான் வேலை? பழைய பன்ச்தான்... 'வெள்ளித் திரையில் காண்க’!

உலகின் நம்பர் ஒன் உளவாளி !

'இதுதான் ட்விஸ்ட்டா இருக்கும்’ என நாம் ஒன்றை நினைத்தால், யூகிக்கவே முடியாத வேறு ஒரு திருப்பத்தைக் கொடுத்து அசத்துகிறார் படத்தின் இயக்குநர் கிறிஸ்டோஃபர் மெக்குவார்ரி. 'ஆக்‌ஷனை எல்லாம் டாம் பார்த்துக்கொள்வார் என எனக்குத் தெரியும். திரைக்கதைதான் முக்கியம்’ என, பட வெளியீட்டுக்கு முன் அவர் கொடுத்த பேட்டிகளின் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. ஆனால், முந்தைய பாகங்களைவிட வளவளவெனப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். 'என்னடா... தொண்டையைக் கவ்வுது’ என நினைக்கும்போது, ரணகள ஆக்‌ஷனோ, செமத்தியான சேஸிங்கோ வந்து டாப் கியர் தட்டுகிறது. அதுவும் அந்த பைக் சேஸின்போது கேமரா புயல் எனப் புகுந்து புறப்படும் கோணங்கள்... அடி தூள்!

ஜேம்ஸ்பாண்டு படங்கள் அளவுக்கு படா பிரமாண்டமாக இருக்காது 'மிஷன் இம்பாசிபிள்’ படங்கள். டாமின் மதியூகமும் ஆக்ஷன் வியூகங்களும்தான் இந்தப் படங்களின் ஸ்பெஷல். அதனாலேயே டாமின் சொந்தத் தயாரிப்பாக வரும் படங்களின் பட்ஜெட் மிகக் குறைவாகத்தான் இருக்கும். இந்த ஐந்தாம் பாகத்தின் பட்ஜெட்கூட 150 மில்லியன் டாலர்.  ஆனால், அதை முதல் வார இறுதியிலேயே அள்ளிவிட்டது படம். 'ரொம்பவும் டெக்னாலஜியை வைத்து சித்துவிளையாட்டு  காட்டுகிறார்கள்’ என 'மிஷன் இம்பாசிபிள்’ படங்களைச் சின்னதாக விமர்சிப்பார்கள். ஆனால், இந்தப் பாகத்தில் விமானத்தில் ஃபுட்போர்டு, தண்ணீருக்குள் தம் கட்டு, செம சேஸ் பைக் ரேஸ் என அதகளப்படுத்தியிருக்கிறார் டாம். மற்ற ஆக்ஷன் ஹீரோக்களுக்கு டாம் கொடுத்திருக்கும் 'மிஷன் இம்பாசிபிள்’ சவால் இது!

சின்ன தயாரிப்பாளர் டாம்!

நண்பன் வாக்னருடன் இணைந்து டாம் தொடங்கிய க்ரூஸ்/வாக்னர் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த படங்கள் அனைத்தும் வசூலில் கில்லி. இசை, உடைகள், கேம்ஸ் என, பல வழிகளிலும் 'மிஷன் இம்பாசிபிள்’ படங்கள் பணத்தை வாரிக் குவிக்கின்றன. அதிலும் எதிர்பாராத அளவுக்கு பணத்தை டி.வி.டி மூலமே இந்தப் படங்கள் வசூலில் குவித்ததால், டாம் க்ரூஸுக்கும் 'மிஷன் இம்பாசிபிள்’ படத்தை வெளியிட்ட பாரமவுன்ட் நிறுவனத்துக்கும் சண்டை வந்தது தனிக் கதை!