Published:Updated:

"நம் அத்தைகளும் சித்திகளும்தான் இறைவி !”

டி.அருள் எழிலன்

"நம் அத்தைகளும் சித்திகளும்தான் இறைவி !”

டி.அருள் எழிலன்

Published:Updated:

''லவ்வு கிவ்வுனுலாம் ஒரு மண்ணும் கிடையாது. என்னை கிளாஸ் கவனிக்கவிடாம டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தா. அதான் அடிச்சேன்'' - பாபி சிம்ஹா வசனம் பேசிவிட்டு, திரும்பிப் பார்க்க, ''பாபி 'லவ்வு கிவ்வு’ங்கிறப்போ உங்க லுக் ஷிஃப்ட் ஆகணும். அது மட்டும் பண்ணிட்டா ஓ.கே... ரீடேக்!'' என மும்முரமாகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். 

த்ரில்லர் 'பீட்சா’, கிரைம் 'ஜிகர்தண்டா’ என  இரு துருவ ஹிட்ஸ் தந்த கார்த்திக் சுப்புராஜ், இப்போது 'இறைவி’ என, தலைப்பிலேயே சுவாரஸ்யம் சேர்க்கிறார். விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா என செம ஸ்டார் காஸ்ட்டிங்கில் உருவாகும் படத்தின் இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜிடம் பேசினேன்...

''ம்ம்ம்.... 'இறைவி’னு பேர் பிடிச்சுட்டோம். கதை பிடிச்சுட்டோம். வேலைகள் ஆரம்பிச்சுட்டோம். இப்போ விடிய விடிய ஷூட்டிங் போறப்போதான் தெரியுது, ஒரு குடும்பப் படம் பண்ணிட்டிருக்கோம்னு. அம்மா, சித்தி, அத்தை, பெரியம்மா, தங்கைனு நிறையப் பெண்களுக்கு மத்தியில் வளர்ந்தவன் நான். படிச்சு முடிச்சு ஐ.டி-யில் வேலை பார்த்தப்பவும் என்கூட வேலை பார்த்தவங்க, ஃப்ரெண்ட்ஸ்னு நிறையப் பெண்களுடன் பயணிச்சிருக்கேன். அப்போ ஒண்ணும் தோணலை. ஆனா, அப்புறம் யோசிச்சப்ப ஒரு விஷயம் உறைச்சது. இன்றைய தலைமுறை பெண்களுக்குக் கிடைக்கிற வாய்ப்புகளும் வசதிகளும் நம்ம அம்மா, அத்தை, சித்திகளுக்கு ஏன் இல்லாமப்போச்சு? கதவுக்குப் பின்னாடி நின்னுட்டே அவங்க காலம் கழிஞ்சுருச்சே! இன்னைக்குக் கிடைக்கிற சந்தோஷங்களும் சுதந்திரங்களும் அவங்களுக்கு இல்லாமப்போச்சே. இதை எல்லாம் மனசுல போட்டு யோசிச்சுட்டே இருந்தப்பதான் இந்தக் கதையைப் பிடிச்சேன்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"நம் அத்தைகளும் சித்திகளும்தான் இறைவி !”

'' 'இறைவி’னு தலைப்பு, பெண்கள் பெருமை பேசும் கதை, ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள படமா?''

''ஆண் - பெண்... அப்படினு பிரிச்சுப்பார்க்கலை. பெண்களின் உலகம் எப்படி மாறியிருக்கு, பெண்களால் ஆண்களின் உலகம் எப்படி மாறுது, நடுவில் கொஞ்சம் காதல்... இதுதான் படம். நம் சித்திகளின் கதையை, நம்ம தலைமுறைப் பெண்களின் விஷயமா மாத்தியிருக்கேன். பெண்களை ரொம்ப உயரத்துல வெச்சுப் பார்க்க ஆசைப்பட்டேன். தமிழில் சில ஆண்பால் சொற்களுக்கு இணையான பெண்பால் சொற்கள் இல்லையோனு தோணுது. படத்துக்கு ரொம்ப நாளா டைட்டில் தேடினேன். திருப்தியா எதுவும் கிடைக்கலை. கடைசியில, இறைவனுக்கு இணையான பெண்பால் சொல்லா 'இறைவி’னு பேர் வெச்சோம். சித்திகளையும் அத்தை களையும் நான் 'இறைவி’ ஆக்கியிருக்கேன். ஏன்னா, நம் வாழ்க்கையின் கதாநாயகிகளை இதைவிட சிறப்பா அடையாளப்படுத்த முடியாது!''

"நம் அத்தைகளும் சித்திகளும்தான் இறைவி !”

''sசித்திகளின் கதைனு சொல்றீங்க. ஆனா, படம் முழுக்க ஹீரோக்கள்தான் ஜாஸ்தியா இருக்காங்க?''

''ஹீரோக்கள் முகம் தெரிந்தவர்களா இருக்காங்க. படத்துல ஏழு பேருக்கு முக்கியமான ரோல் இருக்கு. எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ராதாரவி, கமாலினி முகர்ஜி, அஞ்சலி, கருணாகரன். இவங்க போக இன்னும் ஒரு ஹீரோயின் இருக்காங்க. அவங்க யாருனு இன்னும் முடிவுபண்ணலை. நானே சொல்றேனே... இது ஒரு குடும்பக் கதைதான். ஆனா, நீங்க கற்பனை பண்ற மாதிரி எதுவும் இருக்காது. 'கார்த்திக் சுப்புராஜ் படம்னா இப்படித்தான் இருக்கும்’னு ஒரு டோன் வந்துடக் கூடாது. அதான் ஒவ்வொரு படத்துக்கும் வேற வேற கேன்வாஸ். அதே சமயம் பணம் போட்ட தயாரிப்பாளருக்கு, போட்ட காசு திரும்ப வந்திரணும்னு உறுதியா இருக்கேன். ரெண்டு படங்கள் பண்ணின பிறகு சினிமா தொழில் கொஞ்சம் கத்துக்கிட்டேன்னு தோணுது. ஆனா, இன்னும் பயம் இருக்கு. முதல் படம் மாதிரிதான் இந்தப் படத்தையும் பண்றேன்!''  

"நம் அத்தைகளும் சித்திகளும்தான் இறைவி !”

'' 'ஜிகர்தண்டா’ பட 'அசால்ட்’ சேது கேரக்டர்ல ரஜினி நடிக்க ஆசைப்பட்டார்னு சொல்லியிருந்தீங்க. 'ஜிகர்தண்டா’ இரண்டாம் பாகத்தை ரஜினியை வெச்சு பண்ணுவீங்களா?''

''ரஜினி சாரின் பாதிப்போடுதான் அந்த கேரக்டரையே எழுதினேன். 'முள்ளும் மலரும்’ காளியின் சாயலை 'அசால்ட்’ சேதுகிட்ட பார்க்கலாம். 'ஜிகர்தண்டா’ பார்த்துட்டு ரஜினி சார் வாழ்த்தினார். நானும் பாபியும் அவரைச் சந்திச்சப்ப ஒன்றரை மணி நேரம் பேசிட்டிருந்தார். சேது கேரக்டர் '16 வயதினிலே’ பரட்டை மாதிரியான கேரக்டர்னு சொன்னார். அப்போ, 'உங்களை மனசுல வெச்சுத்தான் அதை எழுதினேன்’னு நான் சொல்ல, 'அப்போ என்கிட்டயே கேட்டிருக்கலாமே... நானே அதில் நடிச்சிருப்பேனே’னு சொன்னார். என்னை உற்சாகப்படுத்த அவர் அப்படிச் சொல்லியிருந்தாலும்கூட, அதுவே எனக்குப் பெரிய சந்தோஷம். ரஜினி சாரை வெச்சு ஒரு படம் பண்ண எனக்கும் ஆசைதான். அது  'ஜிகர்தண்டா’ இரண்டாம் பாகமா இருந்தாலோ அல்லது வேற படமா இருந்தாலோ... எதுவுமே எனக்கு ஓ.கே-தான்!''

''திடுக்னு 'பீட்சா’ படம் கொடுத்து பேய் பட டிரெண்டை நீங்கதான் ஆரம்பிச்சுவெச்சீங்க. 'பீட்சா’வுக்கு அடுத்து வந்ததுல உங்களுக்குப் பிடிச்ச பேய் படம் எது?''

''உண்மையைச் சொல்லணும்னா, நான் பேய் படங்களின் தீவிர ரசிகன் இல்லை. 'ஜிகர்தண்டா’வை முதல் படமா பண்ண பட்ஜெட் அனுமதிக்கலை. அதனால, ரெண்டு மணி நேரம் போரடிக்காம இருக்கிற மாதிரியான ஒரு படம் பண்ணுவோம்னு 'பீட்சா’ பண்ணோம். அதுலயும் அந்த  க்ளைமாக்ஸ் ரொம்ப ரிஸ்க். ஆனா, ரசிகர்கள் ஏத்துக்கிட்டாங்க. இப்போ வர்ற பேய் படங்கள் ரெண்டு விதமா வருது. ஒண்ணு... திகில் படங்கள். இன்னொண்ணு திகில் காமெடி படங்கள். அதுல எனக்குப் பிடிச்சது 'டிமான்ட்டி காலனி’. அது ஒரு நேர்மையான பேய் படம்!''

"நம் அத்தைகளும் சித்திகளும்தான் இறைவி !”

''நடுவுல 'ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சு குறும்படங்களை தியேட்டர்ல ரிலீஸ் பண்ணீங்களே... என்ன ரெஸ்பான்ஸ்?''

''அது ஒரு கூட்டு முயற்சி. லாபத்தை  எதிர்பார்த்து நாங்க அதைப் பண்ணலை. அடுத்த புராஜெக்ட் ரெடி. அதுக்கு 'அவியல்’னு பேர் வெச்சிருக்கோம்.  அஞ்சு குறும்படங்களைச் சேர்த்து 'அவியல்’னு ரிலீஸ் பண்றோம். அடுத்து குறும்படங்கள் தயாரிக்கப்போறோம். திரைப்படங்கள் மாதிரி குறும்படங்களுக்கும் மார்க்கெட் உருவாக்கணும். அதான் எங்க நோக்கம்!''

''உங்க குடும்பம் பத்தி சொல்லுங்க?''

''எனக்குப் பெரிய ஆதரவே என் குடும்பம்தான். நான் ஐ.டி வேலையை விட்டுட்டு சினிமாவுக்குப் போறேன்னு சொன்னதும் அம்மா, அப்பா  பயந்தாங்க. ஆனா, நான் பண்ண சில குறும்படங்களைப் பார்த்துட்டு, 'இவன் மரியாதையான படங்கள் பண்ணுவான்’ நம்பி சினிமாவுக்கு அனுப்பினாங்க. காதல் மனைவி சத்திய பிரேமா. டென்டிஸ்ட். சினிமா கொடுக்கிற எல்லா அழுத்தங்களில் இருந்தும் என்னை மீட்டெடுக்கிறது அவங்கதான்!''

"நம் அத்தைகளும் சித்திகளும்தான் இறைவி !”

''சின்ன வயசுல பெரிய விஷயங்கள் பண்ணிட்டீங்க. ஆனா, பெருசா வெயிட் போட்டுட்டீங்களே... கொஞ்சம் வெயிட் குறைக்கலாமே?''

(சிரிக்கிறார்...) ''நான் ஒரு சோம்பேறி சார். படிக்கும்போதும் சரி இப்பவும் சரி, விளையாட்டு, உடற்பயிற்சினு எதிலும் ஆர்வம் இல்லை. உடல் உழைப்பு ரொம்பக் கம்மி. அதான் வெயிட்டுக்குக் காரணம். ஆனா, இப்போ டயட் இருந்து 10 கிலோ குறைச்சிருக்கேன். ஆல் நியூ கார்த்திக் பிரதர்!''