Published:Updated:

ஒரு மலை... ஒரு கதை !

டி.அருள் எழிலன்

ஒரு மலை... ஒரு கதை !

டி.அருள் எழிலன்

Published:Updated:

'' 'சொமயாளு முன்னால... 

கவ்வாத்தாளு பின்னால...

அட்டக்கடி காட்டுக்குள்ள...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆன வர்ற பாதையில...

எம் பொழப்பு தேயுதய்யா

ஏல மல வாழுதய்யா

எட்டு வெச்சுப் போகுதைய்யா...’  

- சுமை ஆட்களின் சோகம் சொல்லும் பாடல் இது. காட்டையும் நிலத்தையும் நம்பி வாழும் மக்களின் வாழ்க்கைப்பாடுதான் 'மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் பேசுபொருள். படத்தில் வரும் சுமை ஆட்கள் யார்... அவர்களுக்கும் நிலத்துக்குமான தொடர்பு என்ன? இப்படி, பல கேள்விகளில் இருந்து உருவானதுதான் இந்தப் படம்'' - எந்த அலங்காரமும் இல்லாமல் இயல்பாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் லெனின் பாரதி. கோம்பை மலைப்பிரதேசங்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கோடம்பாக்கத்தில் இறுதிக்கட்ட வார்ப்பில் இருக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள்... விஜய் சேதுபதியும் அவரது நண்பரும்.  

ஒரு மலை... ஒரு கதை !

''பண்ணைப்புரம் பக்கம் உள்ள கோம்பைதான் என் சொந்த ஊர். அது மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம். அங்கே நிலத்தை நம்பி வாழும் மக்கள், மலைக்கு மேலே வாழும் மக்கள்... இரு தரப்பின் வாழ்க்கைதான் படத்தின் கதை. அந்த மக்களின் வாழ்க்கையில் நிலமும் மலையும்தான் முக்கியக் கதாபாத்திரங்கள். மேற்குத் தொடர்ச்சி மலைதான் தமிழ்நாட்டையும் கேரளாவையும் இணைக்கும் இணைப்புப் பாலம்; பிரிக்கும் தடுப்புச் சுவரும்கூட. இந்தப் புவியியல் புரிதலோடு படத்தைப் பார்த்தால் மட்டுமே, அந்த மக்களின் வாழ்க்கை நமக்குப் புரியும். அந்தப் பகுதி மக்கள் கீழே இருந்து மலைக்காடுகள் வழியே நடந்து மேலே போய், அங்கே விளையும் ஏலக்காயைக் கீழே இறக்கிட்டு வர்றாங்க. அப்படிப்பட்ட மனிதர்களின் பாடுகளும்,  கேரளத்தின் உடும்பன்சோலை எனும் பகுதியை  ஒட்டிக் குடியேறிய தமிழ்த் தொழிலாளர்களின் வாழ்க்கையும்தான் படத்தின் மையம். ஏலக்காயோ அது விளையும் நிலமோ, அவர்களுக்குச் சொந்தமானது இல்லை. ஒருகாலத்தில் நிலம் வைத்திருந்தவர்கள் எல்லாம் வசதியானவர்கள் என்ற நிலை இருந்தது. ஆனால், கடந்த 20 வருடங்களில் நில உரிமையாளர்கள்கூட தங்களின் நிலங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். அவர்களின் நிலங்கள் எப்படிப் பறிக்கப்பட்டன, அந்த நிலத்தை நம்பியிருந்த தொழிலாளர்களின் வாழ்வு எப்படி வதைக்கப்பட்டது என்பதை உண்மைக்கு நெருக்கமான சினிமாவா பண்ணியிருக்கேன்!

ஒரு மலை... ஒரு கதை !

விஜய் சேதுபதி சின்னச்சின்ன கேரக்டர்களில் நடிச்சுட்டிருந்தப்ப இருந்தே எனக்குப் பழக்கம். அவர் ஹீரோவான பிறகும் அந்த நட்பு தொடர்ந்தது. 'உங்ககிட்ட கதை சொல்லவரும் சின்ன தயாரிப்பாளர்களிடம் என்னை அறிமுகப்படுத்துங்க. என் கதையைச் சொல்லிப்பார்க்கிறேன்’னு அவர்கிட்ட சொல்லியிருந்தேன். ஆனா, கதையைக் கேட்டவர் 'நானே தயாரிக்கிறேன்’னு ஆர்வமாக முன்வந்து நண்பரோடு சேர்ந்து தயாரிச்சுட்டிருக்கார். மேற்குத் தொடர்ச்சி மலை ஏறிட்டோம்!

தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் பகுதிகளில்தான் படப்பிடிப்பு. ஒரு மக்கள் கூட்டத்தின் ரத்தமும் சதையுமான  வாழ்க்கையைப் பேசும் கதை என்பதால், நிறைய முன்தயாரிப்புகள் பண்ணினோம். 'களவாணி’, 'வெண்ணிலா கபடிகுழு’ படங்களில் சின்னச்சின்ன கேரக்டர்கள்

செய்த ஆண்டனிதான் ஹீரோ.  காயத்ரினு ஒரு பொண்ணை ஹீரோயினா அறிமுகப்படுத்துறோம். கோம்பைப் பகுதி மக்களின் வாழ்க்கையை இவங்க புரிஞ்சுக்கணும்னு அந்த மக்களோடு அவங்களையும் வேலைக்கு அனுப்பினோம்.  நாள் கூலி 50 ரூபாய்க்கு வேலை பார்த்தாங்க. அந்த அனுபவம் அவங்களுக்குள் ஓர் இயல்பான உடல்மொழியை உருவாக்கின பிறகுதான் படப்பிடிப்புக்குப் போனோம். மத்தபடி படத்தின் பெரும்பாலான  கதாபாத்திரங்களில் அந்தப் பகுதி மக்களே நடிச்சிருக்காங்க. இந்த மக்களின் வாழ்க்கையை உணர்ந்த, அனுபவித்த  ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், எடிட்டர் காசி விஸ்வநாதன், கலை இயக்குநர் ஜெயச்சந்திரன்... இவங்க படக் குழுவினரா கிடைச்சது பெரிய சந்தோஷம். ரொம்ப முக்கியமா கோம்பைப் பகுதி மக்களின் வாழ்க்கையை உள்ளும் புறமும் அனுபவித்த இளையராஜா, படத்துக்கு இசையமைக்க சம்மதிச்சிருக்கார். அதோடு ஒரு பாடலும் அவர் பாடணும்கிறது என் ஆசை. அவரோட இசை, குரலைத் தவிர வேற எதுவும் இந்தப் படத்துக்கு யதார்த்தம் சேர்த்திடாது!''

ஒரு மலை... ஒரு கதை !

''ஏன் அவ்வளவு தீர்மானமா சொல்றீங்க?''

  ''அது ஒரு பெரிய கதை! பண்ணைப்புரம், கோம்பைப் பகுதிகள்ல அந்தக் காலத்துல சம்சாரிகளுக்கு நிலம்தான் வாழ்க்கையின் ஒரே நம்பிக்கை. அப்படி ஒரு சம்சாரிதான் என் அப்பா ரங்கசாமி. கோம்பை கன்னிகா பரமேஸ்வரி பள்ளியில் படிச்சவர். அவரின் பள்ளித் தோழர்தான் இளையராஜா. பள்ளி மாணவர் விழாவில் ரெண்டு பேரும் சேர்ந்து பங்கேற்பாங்களாம். அந்தக் காலத்தில் பிரபலமா இருந்த 'டல்லு... டல்லு’ பாட்டை அப்பா பள்ளி விழாவில் பாடி, பரிசு ஜெயிச்சிருக்கார். அதனால அவரை 'டல்லு ரங்கசாமி’னுதான் கூப்பிடுவாங்க. பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பாட்டு, நாடகம், பிரசாரம்னு செயல்பட்டவர். அப்பா பாட, இளையராஜா  தாளமிட்டு ஆட, அவங்க இளமைக்காலம் உற்சாகமும் உத்வேகமுமா இருந்திருக்கு. கம்யூனிஸ்ட் கட்சிக்காக உழைச்ச அப்பா ஒருகட்டத்தில் சென்னைக்கு வந்து சினிமாவில்  கதாசிரியராக இருந்த பி.கலைமணிகிட்ட உதவியாளரா சேர்ந்தார்.  திரைப்பட இயக்குநர் ஆகணும்னு அவருக்கு ஆசை. ஆனா, அந்த ஆசை நிறைவேறாமலே  இறந்துட்டார்.

ஒரு மலை... ஒரு கதை !

நானும் உதவி இயக்குநராக சில படங்களில் வேலை செய்தேன். அப்படி ஒரு படத்தில் வேலை செஞ்சுட்டிருந்தப்போ, இளையராஜாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு தருணத்தில் அவர் என்னைப் பற்றி விசாரிக்க, சொந்த ஊர் 'கோம்பை’னு தெரிஞ்சதும், 'கோம்பையில் யார் மகன் நீ?’னு கேட்டார். 'ரங்கசாமி மகன்’னு சொன்னேன். 'யாரு... டல்லு ரங்கசாமியா?’னு ஆச்சர்யப்பட்டவர், 'ஏன் என்னை நீ முதல்லயே வந்து பார்க்கலை?’னு கேட்டார். நான் அவருக்கு அப்பாவைப் பத்தி சொன்னேன். அப்புறம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, 'சினிமாவில் ஜெயிக்காம என்னை வந்து பார்க்கக் கூடாதுங்கிற பிடிவாதத்தோடு இருந்து, என்னைச் சந்திக்காமலேயே இறந்துட்டான் என் நண்பன் டல்லு ரங்கசாமி’னு அப்பா பற்றின நினைவுகளைப் பகிர்ந்துகிட்டார். இந்தப் பின்னணியோடு, கோம்பைப் பகுதி மக்களின் வாழ்க்கையை அணுஅணுவாக அனுபவிச்சவர்  இளையராஜா. அதான் இந்தப் படத்துக்கு அவர் இசையமைக்கணும்னு கேட்டேன். ஒரு தலைமுறை கடந்து என் குடும்பத்தின் சினிமாக் கனவு பல போராட்டங்களுக்குப் பிறகு நிறைவேற நான் போராடிட்டிருக்கேன். ஏன்னா, சினிமா பண்ண ணும்கிறது மட்டும் என் கனவோ, ஆசையோ இல்லை. இது என் அப்பாவின் கனவு. நான் பிறந்த மண்ணின் கதையை ரத்தமும் சதையுமாகச் சொல்லவேண்டியது என் கடமை.''

ஒரு மலை... ஒரு கதை !

''இது 'ஃபெஸ்டிவல் சினிமா’வா?''

''தமிழில் இப்போ வெளிவர்ற பல படங்கள் ஃபெஸ்டிவல் படங்கள்தான். ஏன்னா, இப்போ ஆர்ட் ஃபிலிம், கமர்ஷியல் படம்கிற வித்தியாசம் குறைஞ்சுட்டே வருது. அந்த வகையில் நம் ரசிகர்களுக்கான அச்சு அசல் யதார்த்த சினிமா பண்ணியிருக்கேன். அதே சமயம் படத்தை உலகின் முக்கியமான பல திரைப்பட விழாக்களுக்கு அனுப்பவும் திட்டம் இருக்கு. இந்தப் படம் நிச்சயம் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். உழைப்பாளிகளைக் கொண்டாடாத தேசம் எங்கே இருக்கு?''