Published:Updated:

"நான் தமிழ் சினிமாதான் எடுப்பேன் !”

ஆ.விஜயானந்த்

"நான் தமிழ் சினிமாதான் எடுப்பேன் !”

ஆ.விஜயானந்த்

Published:Updated:

''பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை வாழ்ந்துபார்க்கணும்னு நான் பல நாட்கள் பிளாட்பாரத்தில் இருந்தேன். ரொம்பக் கலவையான உணர்வுகள் கிடைச்சது. அது படத்துல நடிக்கிற ஹீரோவுக்கும் கிடைக்கணும்னு விஜய் ஆண்டனிகிட்ட சொன்னேன். பின்னாடி டிரெய்ன் கடக்கிற மாதிரியான பிளாட்பாரத்தில் அவரைப் படுக்கவெச்சு 'டெஸ்ட் ஷூட்’ பண்ணலாம்னு  திட்டமிட்டோம். ஒரு ஞாயித்துக்கிழமைதான் அவரால வர முடிஞ்சது. அழுக்கு மேக்கப் போட்டுட்டு பிச்சைக்காரர்களோடு படுக்கவெச்சோம். ஞாயிற்றுக்கிழமைகளில் 45 நிமிஷத்துக்கு ஒரு முறைதான் டிரெய்ன் வரும். அதுவரை அவர் பிச்சைக்காரர்களோடு பேசிச் சிரிச்சுட்டு, தூங்குற மாதிரி படுத்துட்டிருந்தார். பக்கத்துக் கடைக்காரர்கள்கிட்ட போய் பிச்சையும் எடுத்தார். அதுல சிலர், 'யோவ்... இவ்ளோ டீசன்ட்டா இருக்க. ஆளும் நல்லாத்தானே இருக்க. ஏன் பிச்சை எடுக்குற?’னு விரட்டிட்டாங்க. அந்த அனுபவம் கொடுத்த உணர்வுல, 'படத்துல நான் ஹீரோவா மட்டும் பண்ணலாம்னு இருந்தேன். இப்போ மியூசிக்கும் நானே பண்றேன்’னுட்டார்.  படத்துக்கு சூப்பர் டேக்-ஆஃப் கிடைச்சிருச்சு'' - வழக்கம்போல தன்மையாகப் பேசுகிறார் இயக்குநர் சசி. இந்த முறை 'பிச்சைக்காரன்’ கதை சொல்ல வருகிறார்.  

"நான் தமிழ் சினிமாதான் எடுப்பேன் !”

''ஒரு பிச்சைக்காரர் பத்தி நான் படிச்ச செய்தியின் பாதிப்புதான் இந்தக் கதை. கதைப்படி ஹீரோ மிகப் பெரிய பணக்காரன். ஆனா, ஒரு காரணத்துக்காக சென்னையில் பிச்சை எடுக்கவேண்டிய சூழல். அப்போ அவனுக்குக் கிடைக்கிற அனுபவங்கள்தான் படத்தின் திரைக்கதை. 'டிஷ்யூம்’ படத்துக்கு விஜய் ஆண்டனிதான் மியூசிக். அப்போதிருந்தே அவர் நல்ல பழக்கம். அவர் நடிச்ச 'சலீம்’ எனக்கு ரொம்பப் பிடிச்சது. கூப்பிட்டுப் பாராட்டிட்டு, 'உங்க கேரக்டர் தனி ஸ்டைலா மாறிருச்சு’னு சொன்னேன். அதை எல்லாம் காதுலயே வாங்கிக்காம, 'நாம எப்ப சார் படம் பண்ணப்போறோம்?’னு கேட்டார். ஒருநாள் போய் கதை சொன்னேன். ரொம்பப் பிடிச்சுப்போய், 'நானே தயாரிக்கிறேன். 'பிச்சைக்காரன்’னு தலைப்பு வெச்சுக்கலாமா?’னு கேட்டு சம்மதம் வாங்கிட்டு படபடனு பட வேலைகளை ஆரம்பிச்சுட்டார். படத்தில் மொத்தம் மூணு பாடல்கள்தான். இரண்டாம் பாகத்தில் பாட்டே இருக்காது. 'நம்ம படம் ஒரு கொரியன் படம் மாதிரி வரணும்னு’ விஜய் ஆண்டனி சொன்னார். 'நான் விருது வாங்கணும்கிறதுக்காக தயாரிப்பாளரான உங்களுக்கு நஷ்டம் கொடுக்க விரும்பலை. நான் படத்தை தமிழ்ப் படம் மாதிரிதான் எடுப்பேன்’னு சொன்னேன். சொல்லப்போனா என் ஃபிலிம் மேக்கிங் நடைமுறைகளில், சின்னச்சின்ன சமரசங்களைப் பண்ணிட்டுத்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கேன்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இப்போ சினிமாவே மாறிடுச்சே... யார் யார் உங்களை ஈர்த்திருக்காங்க?''

'' 'மெட்ராஸ்’ இரஞ்சித். எல்லாருக்கும் ஜெர்க் கொடுக்கிற ரெண்டாவது படத்துல செம ஸ்கோர் பண்ணி, ரஜினி படத்துக்கு இயக்குநர் ஆகியிருக்கார். ரொம்பப் பெரிய விஷயம். அப்புறம் 'காக்கா முட்டை’ மணிகண்டன். கிரியேட்டர்களையே சாதாரண ரசிகர்களாக்கி அசரவெச்சிருக்கார்!''

''உங்க முதல் படம் வெளியாகி 17 வருஷமாகிருச்சு. இதுவரை ஏழு படங்கள்தான் எடுத்திருக்கீங்க. ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக்குறீங்க?''

''சுந்தர ராமசாமி ஒரு படைப்பை எழுத ரொம்பக் காலம் எடுத்துக்குவார். அதுவே, எஸ்.ரா., ஜெயமோகன் போன்றவர்கள் சரசரனு ஒரு படைப்பைக் கொடுத்துருவாங்க. அது எல்லாமே கிளாசிக்தான். அந்த வேகமும் அவங்க அணுகுமுறையில் ஒரு விஷயம். இதை நான் ரொம்பத் தாமதமாத்தான் புரிஞ்சுக்கிட்டேன். இனி இடைவெளி இல்லாம குறிப்பிட்ட டெட்லைன் வெச்சு படம் பண்ணணும்னு தீர்மானிச்சிருக்கேன்!''

"நான் தமிழ் சினிமாதான் எடுப்பேன் !”

''உங்க படங்களில் ஹீரோவை மென்மையா காட்டுவீங்க... ஹீரோயினை சுதந்திரமா காட்டுவீங்க. ஆனா, முந்தைய '555’ படத்தில் உங்க ஃபார்முலாவில் இருந்து ஆக்ஷன் சினிமாவுக்கு மாறியிருந்தீங்க. இப்போ உங்க மனநிலை என்ன?''

'' 'பூ’ மாதிரி ஒரு படம் எடுத்தவனால, '555’ மாதிரி ஒரு ஆக்ஷன் படம் எடுக்க முடியுமானு ஒரு முயற்சிதான் அந்தப் படம். நல்லவேளை, 'சசிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’னு யாரும் சொல்லலை; படம் மோசம்னு யாரும் சொல்லலை. அது பெருசா போகலை... அவ்வளவுதான். ஆனா, 'பிச்சைக்காரன்’ படத்தில் இப்படி எந்தக் குறையும் இருக்காது. கச்சிதமான இடத்தில் களைகட்டுற ஆக்ஷன் இருக்கும். சேத்னா டைட்டஸ்னு ஒரு கேரளப் பொண்ணுதான் ஹீரோயின். என் படங்களின் ஹீரோயின் முக்கியத்துவம் அவங்க கேரக்டருக்கு இருக்கும். அதுபோக சில ஆச்சர்ய அப்டேட்களும் இருக்கும்!''