நா.சிபிசக்கரவர்த்தி
'' 'வாழ்க்கை என்பது சூதாடிப் பெறுவது அல்ல / போராடிப் பெறுவது / இதுவரை நான் இருந்தது தவம் / இனிமேல்தான் எனக்கான யுகம்! ’ - இது நான் எழுதின கவிதை. இதுதான் நான் வாழ்ந்த வாழ்க்கையும்கூட'' - அசத்தல் அறிமுகம் கொடுக்கிறார் ஜோ மல்லூரி. கவிஞர், உதவி இயக்குநர் எனப் பல முகங்கள் இருந்தாலும், இப்போது நடிகர் என்பதுதான் இவரின் அழுத்தமான அடையாளம். 'கும்கி’யில் கிராமத்துத் தலைவராக, 'காக்கா முட்டை’யில் பழரசமாக அழுத்தமான முத்திரை பதித்து நடிப்பைத் தொடர்கிறார்...
''பத்தாப்புல தோத்ததை வாழ்க்கையின் முதல் வெற்றியா நினைச்சுட்டு, தேனியில இருந்து பையைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்துட்டேன். திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி படிச்சேன். 90-களில் சினிமாவுல நுழையுறது ரொம்ப சிரமம். வலம்புரிஜான் எழுத்துக்கள் என் கவனத்தை வாசிப்புப் பக்கம் திருப்பின. அந்த இலக்கியப் பரிச்சயம் 'ஜோசப்’ என்ற என் பேரை 'ஜோ மல்லூரி’னு மாத்திக்கவெச்சது. கங்கை அமரன் மூலமா இளையராஜா அறிமுகம் கிடைச்சது. அவர் மூலமா பாரதிராஜா. 'பொம்மலாட்டம்’ படத்தில் அவர்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்தேன்.
'மைனா’வில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு இயக்குநர் பிரபு சாலமன்கிட்ட 'நல்லதோர் தமிழ் செய்வேன்’ என்ற என் புத்தகத்தைக் கொடுத்தேன். அதன் அட்டையில் பெரிய தாடியோட இருந்த என் போட்டோவைப் பார்த்துட்டு, 'நீங்க நடிக்கலாமே?’னு கேட்டார். திடீர்னு நடிக்கக் கேட்டதும் குழப்பம். 'நடிக்கத்தானே வந்தீங்க. அப்புறம் என்ன? நடிங்க’னு உற்சாகப்படுத்தி 'கும்கி’யில் நடிக்கவெச்சார். தயக்கத்தோடு ஆரம்பிச்ச 'கும்கி’ பயணம் அபார தன்னம்பிக்கையோடு முடிஞ்சது. படம் வெளியான முதல் மாசத்துல மட்டும் ஆயிரத்துக்கு மேல் தொலைபேசி அழைப்புகள். படம் பார்த்த ரஜினி சார், 'யார் அந்த ஊர்ப் பெரியவர்? பிரமாதமா நடிச்சிருக்கார்’னு பாரதிராஜாகிட்ட கேட்க, 'அவன் பெரியவன்லாம் இல்லை... பொடியன்’னு சொல்லி சிரிச்சிருக்கார். அந்த வருஷமே மொத்தம் 12 படங்களில் நடிச்சேன். பிரபு சாலமனுக்கு நன்றி!

'ஜில்லா’வில் மோகன்லால், விஜய்கூட நடிச்சது பிரமாதமான அனுபவம். அவங்ககிட்ட என் கவிதைப் புத்தகங்களைக் கொடுத்தேன். விஜய்க்கு, என் கவிதைகள் ரொம்பப் பிடிச்சிருச்சு. 'ரம்மி’யில் நடிச்சுட்டிருந்தப்ப ஐஸ்வர்யா, ' 'காக்கா முட்டை’னு ஒரு படத்துல நடிக்கக் கேட்டிருக்காங்க. சூப்பர் படம். சினிமா மாதிரியே இல்லை’னு சிலாகிச்சுச் சொன்னாங்க. அப்படித்தான் நானும் அந்தப் படக்கதைக் கேட்டு 'பழரசம்’ கேரக்டரில் நடிச்சேன்.''

''அடுத்து என்ன?''
''இப்போ 'அ’னு ஒரு புத்தகம் எழுதி முடிச்சுட்டேன். அப்புறம் 'கும்கி அல்ல பட்டத்து யானை’னு ஒரு புத்தகம். அதில் கங்கை அமரன், பாரதிராஜா, இளையராஜாவுடன் பணியாற்றிய அனுபவம் தொடங்கி விஜய், சூர்யா படங்களில் நடிச்சது வரை சுவாரஸ்யமா எழுதிட்டிருக்கேன்.
நேர்மையான உழைப்பு, தொழில்மேல் தீவிரப் பற்றுதல், தன்னைத்தானே நெறிப்படுத்திக்கொண்ட மனிதர் இளையராஜா. ரொம்ப அடக்கமானவர்; பெரிய பண்பாளர். இளையராஜாகூட இருந்த கவிஞர்களில் அவரிடம் வாய்ப்புக் கேட்காத ஒரே கவிஞன் நான் மட்டும்தான். அவரை வைத்து ஒரு டாக்குமென்டரி படம் பண்ணணும்னு ஆசை. அதை அவர்கிட்ட கேட்டேன். முழு மனசோடு சம்மதிச்சார். எடுத்து முடிச்சுட்டேன்.
அடுத்து பாரதிராஜா. 'வெற்றி பெறும் வரை மனதை யுத்த நிலையில் வை. வெற்றி பெற்ற பிறகு மனதை புத்த நிலையில் வை’னு நான் எழுதின பல கவிதைகளைப் பயணங்களின்போது சொல்வேன். பாராட்டுவார். 'பொம்மலாட்டம்’ படத்தில் அவருக்கும் நானா படேகருக்கும் சண்டை வரும். அப்போது இருவருக்குமான சமாதானத் தூதுவர் நான்தான். ஆனால், அவருக்கு கவிஞராகவும் இயக்குநராகவும் தெரிஞ்சேனே தவிர, ஒரு நடிகராக கண்ணுக்குத் தெரியலை. அந்த வருத்தம் இன்னமும் அவருக்கு இருக்கு.'
'வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்?''
'ஹைதராபாத்ல 'ஜில்லா’ ஷூட். அப்ப பயங்கரமான முதுகுவலி. சோர்ந்துபோய் படுத்துட்டேன். என்னைக் காணோம்னு மோகன்லால் தேடியிருக்கார். முதுகுவலினு தெரிஞ்சதும் நைட் ரெண்டு மணிக்கு டிரைவரை அனுப்பி, சுடுதண்ணீர் எடுத்துட்டு வரச் சொல்லி... கேரவனுக்கே என்னைக் கூப்பிட்டு சுடுதண்ணீரை வைத்து முதுகுல ஒத்தடம் கொடுத்தார். ஒரு மலையாள சூப்பர் ஸ்டார் சாதாரண ஒரு நடிகனைக் கவனிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. ஆனால், அவர்கூட நடிக்கும் நடிகர்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா பதறுகிறார் பாருங்க, அதுதாங்க மோகன்லால்.'
''உங்க குடும்பம் பத்திச் சொல்லுங்க?''
''இப்போதைக்கு அம்மா மட்டும்தான் என் குடும்பம். சீக்கிரமே 'டும்... டும்... டும்...’ சேதி சொல்றேன்!''