Published:Updated:

பாயும் புலி - சினிமா விமர்சனம்

பாயும் புலி - சினிமா விமர்சனம்

போலீஸ் புலி. எதிரி யார் என்பது மட்டுமே விசேஷம்! 

தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்களை அண்டர்கவர் ஆபரேஷனில் (இந்த வார்த்தையை என்கவுன்டர் பண்ணுங்கப்பா!)  சுட்டுப் பொசுக்குகிறார் ஏ.சி விஷால். கடைசியாக டிக்கெட் வாங்குபவன், 'எங்களுக்கு மேல இன்னொருத்தன் இருக்கான்டா...’ எனக் கதறும்போது இன்டர்வெல் பிளாக். அங்குதான் படமே தொடங்குகிறது. பின்னர், வழக்கம்போல தமிழ் மசாலா பதம் சரியாக இருக்கும்படி பார்த்துப் பார்த்துப் பரிமாறுகிறார்கள்.

'ஏப்பு... மணி என்ன?’ எனக் கேட்டால்கூட, வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டுவிட்டு, '4:10’ என்கிறார் விஷால். அதிரிபுதிரி உயரமும் அதீத விறைப்புமாக பக்கா போலீஸ். மிரட்டல் விரட்டல்களில் ஸ்கோர் செய்கிறார். காதல் காட்சிகளுக்கும் சில பாடல்களுக்கும் 'உள்ளேன் ஐயா’ சொல்கிறார் காஜல். அட, போறப்ப சொல்லிட்டுப் போக மாட்டீங்களா மேடம்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பாயும் புலி - சினிமா விமர்சனம்

ஏற்கெனவே வைரலான பழைய ஜோக்குகளை 'சூரி மாடுலேஷனில்’ பேசி சிரிப்பு மூட்ட முயற்சிக்கிறார்கள். தங்களுக்கு வரும் ஃபார்வர்டு மெசேஜ்கள் ரசிகர்களுக்கும் செல்லும் என்பதை டிஸ்கஷன் டீம்  எப்போது உணருமோ? 'கேரக்டர் ஸ்கெட்ச்’ பலவீனமாக இருந்தாலும், அதைத் தனது கெத்து நடிப்பில் கரைசேர்த்திருக்கிறார் சமுத்திரக்கனி. அந்த அளவுக்குத் தீவிரமான அவருடைய மனமாற்றத்துக்கான காரணங்களை இன்னும் அக்கறை எடுத்துப் பதிந்திருக்க வேண்டாமா?

பாயும் புலி - சினிமா விமர்சனம்

முன்பாதி முழுக்க முழுநீள ஓ.பி. விஷால் நினைத்தால் நகருக்குள் எதுவும் நடக்கிறது. அவர் அண்ணன் நினைத்தாலும் நடக்கிறது. ரௌடிகள் நினைத்தால் பொதுமக்களைக் கொல்கிறார்கள். போலீஸ் நினைத்தால், ரௌடிகளைக் கொல்கிறார்கள். 'மதுரை’ எனக் களம் அமைத்துவிட்டதால், எந்த எல்லைக்கும் செல்லலாம் என நினைத்துவிட்டார்கள்போல.  

'சிலுக்கு மரமே...’ பாடலை மட்டும் முணுமுணுக்கவைக்கிறது இமான் ட்யூன். வானத்தில் வட்டமடித்தபடி சந்து பொந்துகளில் அலையும் வேல்ராஜின் கேமராவில் மட்டுமே புலிப் பாய்ச்சல்.

முதல் பாதியில் ஆமை... இரண்டாம் பாதியில் முயல்... இவற்றை வைத்துக்கொண்டு 'புலிப் பூச்சாண்டி’ காட்டலாமா?!

- விகடன் விமர்சனக் குழு