Published:Updated:

இது ரஜினி இன்டர்நேஷனல்!

கபாலி தி கிரேட் கலக்கல் போட்டோஷூட்ரணகளம்... அதகளம்... அமர்க்களம்...எம்.குணா

'கபாலி’ ரஜினி... செம ஃப்ரெஷ், இன்டர்நேஷனல் லுக் என எகிறி அடிக்கிறார். ரணகளம்... அதகளம்... அமர்க்களமாக இனிதே தொடங்கிவிட்டது 'கபாலி’ படப்பிடிப்பு.

'படம் பேசட்டும். படம் பத்தி நாம பேச வேண்டாம்’ என்பதுதான் தயாரிப்பாளர் தாணு மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோரிடம் ரஜினியின் ஒரே ரெக்வஸ்ட். அதனால் தன்னடக்கப்பட்ட உற்சாகத்துடனேயே பேசினார்கள் இருவரும்.

இது ரஜினி இன்டர்நேஷனல்!

முதலில் தயாரிப்பாளர் தாணு...

''ரஜினி சாரின் 'அண்ணாமலை’, 'பாட்ஷா’, 'முத்து’... படங்களுக்கு முன்பு தயாரிப்பாளரா

என் பேர் பேசப்பட்டது. ஆனா, 'கபாலி’ மூலம்தான்   அந்தப் பாக்கியம் கிடைச்சிருக்கு. ரெண்டு, மூணு கதைகள் கேட்டோம். அப்புறம் இரஞ்சித் வந்தார். முதல் தடவை கதை சொல்லும்போதே, ரஜினி சாருக்கும் எனக்கும் அது பிடிச்சது. எதிர்பார்க்காத இடங்களில் திடீர் திருப்பங்கள் இருந்துச்சு. நிச்சயம் ரஜினி ரசிகர்களின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்னு  தோணிருச்சு. உடனே ரஜினி சார்,  'தாணு சார்... என் 35 ஆண்டுகால நண்பர். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேலைபார்க்க வாய்ப்பு கொடுத்த கதையைச் சொன்ன உங்களுக்கு நன்றி’னு இரஞ்சித்தைக் கட்டிக்கிட்டார். படத்துக்காக ரஜினி தன் கைப்பட எழுதி, செப்டம்பர் 17-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை மொத்தம் 106 நாட்கள்  கால்ஷீட் கொடுத்திருக்கார்.

இது ரஜினி இன்டர்நேஷனல்!

இந்தப் படத்தில் ஒரிஜினல் வெண்தாடியோடு நடிக்கிறார் ரஜினி. போட்டோசெஷனுக்கு காஸ்ட்யூம், மேக்கப் முடிச்சுட்டு வந்தவர். லைட்டிங் செட்டப் நடந்துட்டு இருந்தப்ப குறுக்கும் நெடுக்குமா  நடந்துட்டே  இருந்தார். அப்புறம்தான் அது 'கபாலி பாடிலாங்வேஜ்’-க்கான பயிற்சினு தெரிஞ்சது. இப்படி தன் முதல் படம்போல சின்சியாரிட்டியின் உச்சத்தை வெளிப்படுத்துறார். பல வருஷங்களுக்கு முன்னாடி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நான் தயாரித்த         ஒரு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்துக்கிட்டார். அப்போ, 'தாணு சார் எப்போ எனக்கு 'சூப்பர் ஸ்டார்’னு பட்டம் கொடுத்தாரோ, அது இப்போ வரை நிலைச்சுருக்கு’னு சொன்னார். அதை அவர் சொல்லி 20 வருஷங்கள் ஆச்சு. இன்னைக்கும் அவர்தான் சூப்பர் ஸ்டார். தமிழ் சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார்'' என நெகிழ்கிறார் தாணு.

இது ரஜினி இன்டர்நேஷனல்!

எனர்ஷி பேட்டரி உற்சாகத்துடன் இருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்...

''ரஜினி சார்கிட்ட 'கபாலி’ படத்தின் திரைக்கதை, வசனத்தின் தொகுப்பைக் கொடுத்தேன். மொத்தம் 220 பக்கங்கள். 'சினிமாவில் நடிக்க ஆரம்பிச்ச காலத்துல இருந்து நான் ஸ்கிரிப்ட் படிச்சதே இல்லை.  'ப்ளட் ஸ்டோன்’ படத்துக்கு மட்டும்தான் படிச்ச ஞாபகம். அதுக்குப் பிறகு இப்போதான் 'கபாலி’ ஸ்கிரிப்ட் படிக்கப்போறேன்’னு சொன்னார். '220 பக்கங்களையும் படிச்சு முடிக்க ஒரு வாரத்துக்கும் மேல ஆகுமே’னு நான் நினைக்க, மறுநாளே என்னை வரச் சொன்னார்.

'இரஞ்சித்... அந்த இன்டர்வெல் ப்ளாக்குக்கு முன்னாடி வர்ற டயலாக் இப்படிப் பேசலாமானு பாருங்க!’னு சொல்லி, படத்தின் பல சூழ்நிலைகளுக்கான வசனம், ரியாக்ஷன்களை நடிச்சுக் காண்பிச்சார். ஒரே நாளில் மொத்த ஸ்கிரிப்ட்டையும் கரைச்சுக் குடிச்சு, அதுக்கு ஹோம்வொர்க்கும் பண்ணிட்டார்னு நினைச்சாலே ஆச்சர்யமா இருந்தது. சில முக்கியமான திருப்புமுனைக் காட்சிகளில் அவர் இப்படி எல்லாம் நடிச்சா நல்லா இருக்குமேனு நான் நினைச்சிருந்தேன். அதை அப்படியே நடிச்சுக் காண்பிச்சார். நான் அசந்துட்டேன். 'கபாலி’யை அந்த அளவுக்கு மனசுக்குள் உள்வாங்கிட்டார்.

இது ரஜினி இன்டர்நேஷனல்!

ஆனாலும், எனக்குத்தான் அவரை எப்படி ஸ்பாட்ல 'டேக்... கட்’ சொல்லி நடிக்கவைக்கிறதுனு தயக்கமா இருந்தது. ஆனா,  போட்டோசெஷன் நடந்தப்ப அந்தத் தயக்கத்தையும் போக்கிட்டார். அந்த ஷூட் முழுக்க என்கூடவே நின்னு என்கூட சகஜமா பழகி, ஜோக் பண்ணி என் கூச்சத்தைப் போக்கிட்டார்.

இது ரஜினி இன்டர்நேஷனல்!

சினிமா இமேஜ் பத்தி கவலைப்படாமல் வெளியிடங்களுக்கு வெள்ளைத் தாடியோடு வர்றதுதான் ரஜினி மேஜிக். ஆனா, சினிமாவுல அவர் நிஜ வெள்ளைத் தாடியோடு நடிச்சது இல்லை.

இது ரஜினி இன்டர்நேஷனல்!

'கபாலி’யில ஒரிஜினல் தாடியோடு நடிக்கணும்னு அவர்கிட்ட சொன்னேன்.  'எதுக்கு?’னுகூட ஒரு வார்த்தை கேட்கலை. தாடியை ட்ரிம் பண்ணாம வளர்ப்பதில் மும்முரமாகிட்டார்.

'கபாலி’யில் ரஜினிக்கு ரெண்டு வேடங்கள்னு பரவுற தகவல்கள்ல உண்மை இல்லை. ஒரே கேரக்டர்தான். ராதிகா ஆப்தே, தன்ஷிகா,  'அட்டகத்தி’ தினேஷ், கிஷோர், கலையரசன், ரித்விகானு பலர் நடிக்கிறாங்க. இவங்களைத் தவிர சீன நடிகர் ஒருவர் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

'கபாலி’ - ரஜினி ரசிகர்களுக்கும்... தமிழ் சினிமாவுக்கும் செம ட்ரீட்டா இருக்கும்!''