Published:Updated:

குற்றம் கடிதல் - சினிமா விமர்சனம்

குற்றம் கடிதல் - சினிமா விமர்சனம்

து குற்றம்... குற்றத்துக்கான தண்டனை என்ன... ஆரோக்கிய விவாதம் எழுப்பும் படம்!  

பிறந்த நாளுக்கு சாக்லேட் கொடுத்த சக மாணவியை முத்தமிட்ட 10 வயது மாணவனை, கன்னத்தில் அறைகிறார் ஆசிரியை ராதிகா பிரசித்தா. மயங்கி விழுபவனுக்குத் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. புது மணப்பெண்ணான ராதிகாவை, கணவரோடு தலைமறைவாக இருக்கச் சொல்லி வெளியூருக்கு அனுப்புகிறார் பள்ளித் தலைமையாசிரியர். ஊடகங்களில் இந்தச் சம்பவம் பரபரக்க, ராதிகாவை போலீஸ் தேட, மாணவனின் அம்மா கலங்க... ராதிகா என்ன செய்தார், இந்தச் சமூகம் என்ன செய்ய வேண்டும் என்பது... திரையில் விரிகிறது!

அடுக்கடுக்காகச் சம்பவங்களை அடுக்கி 'சின்னஞ்சிறு கிளியே... கண்ணம்மா...’ பாடலில் அத்தனைக்குமான இணைப்புகளை நிலைநிறுத்தி, மனதில் இடம்பிடிக்கிறார் அறிமுக இயக்குநர் பிரம்மா. தேசிய அங்கீகாரத்துக்கு வாழ்த்துகள் தோழர். பாலியல் கல்வியின் தேவையைப் பிரசாரமாகத் தொனிக்காமல், அது தொடர்பாக சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் படம் பிடித்திருக்கும் நேர்மைக்கு சல்யூட்!

காதல் கலப்பு மணம் உண்டாக்கிய குற்றவுணர்வு, மாணவனை அடித்ததிலும் பற்றிக்கொள்ளும் ராதிகாவின் பதைபதைப்பு, வகுப்பிலும் பிரதிபலிக்கும் மாஸ்டர் அஜய்யின் ஆட்டோ ஓட்டும் சேட்டைக் குறும்பு, சாலை விபத்துப் பெரியவருக்கு பாவேல் நவகீதன் அதட்டி நீதி பெறும் அதிகாரம் பார்வையாளர்களிடம் உண்டாக்கும் எதிர்பார்ப்பு, பிரச்னைகளைக் கண்டு ஓடி ஒளியாத சாய் ராஜ்குமாரின் குணம், எல்லோருக்கும் நல்லதையே நினைக்கும் ஆசிரியர் தம்பதி... என, படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பிரத்யேகக் குணநலன்கள். அதை அந்தந்த நடிகர்களும் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறார்கள்.      

குற்றம் கடிதல் - சினிமா விமர்சனம்

எலிக்குக்கூட பரிதாபப்படும் ராதிகா வகுப்பறைக்குள் நுழைந்ததும் 'அதட்டல் ஆசிரியை’ முகமூடி மாட்டிக்கொள்வது,  'என்ன நடந்தது’ எனத் தெரியாமலேயே, 'என்ன நடக்க வேண்டும்’ என ஊடகங்கள் பரபரப்பது, லாரி ஓட்டுநர்கள் போன்ற எளிய மனிதர்களின் நல்ல இயல்புகள் என, படம் முழுக்க நிதர்சன நிஜம்.

குற்றம் கடிதல் - சினிமா விமர்சனம்

அந்த த்ரில்லர் தொனி பின்பாதி, பேசு பொருளின் கவனத்தையும் கலைத்து படத்தின் நீளத்தையும் அதிகரிக்கிறதே. டி.வி., பத்திரிகைகள் என பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் விஷயங்களின் பட்டியலில் 'காமாசோமா சினிமா’க்களுக்கு ஏன் இடம் அளிக்கவில்லை பிரம்மா? 'கன்னத்தில் முத்தமிட்டால்...’ பாடல் இசையில் விழி உயர்த்தவைக்கிறார் சங்கர் ரங்கராஜன்.

'இந்த உலகத்தை, சுற்றத்தை, நட்பை நம் குழந்தைகளுக்கு நாம் எப்படி அறிமுகப்படுத்தப்போகிறோம்?’ எனக் கேள்வியெழுப்பிய வகையில், கவனம் ஈர்க்கிறது 'குற்றம் கடிதல்!’  

- விகடன் விமர்சனக் குழு