Published:Updated:

கிருமி - சினிமா விமர்சனம்

கிருமி - சினிமா விமர்சனம்

சட்டு ஆர்வக்கோளாறும் முரட்டு முன்கோபமுமாகப் படபடக்கும் ஓர் இளைஞனுக்கு 'போலீஸ் இன்ஃபார்மர்’  அந்தஸ்து கிடைத்தால் என்ன நடக்கும்? 

வெட்டி ஆபீஸர் கதிருக்கு, காவல் நிலையத்தில் எடுபிடி வேலைசெய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. அதை வைத்து முன்னேறும் ஆர்வத்தில், கதிர் போலீஸுக்கு சில தகவல்களைச் சொல்ல, அது பெரும் ஆபத்துக்கு 'வெல்கம்’ சொல்கிறது. கதிருக்கு என்ன ஆனது என்பது... வழக்கம் இல்லாத 'போலீஸ் க்ளைமாக்ஸ்’!

காவல் துறையின் பார்க்காத பக்கங்களையும், சாலையில் நாம் சாதாரணமாகப் பார்த்துச் செல்லும் 'பைக் தூக்கும்’ இளைஞரின் வாழ்க்கையையும் ஒருகோட்டுப் பயணத்தில் இணைத்திருக்கிறார் இயக்குநர் அனுசரண். ஜேம்ஸ்பாண்ட் போல 'பில்டப்’பப்படும் போலீஸ் இன்ஃபார்மர்களின், உண்மை நிலையை பக்காவாகப் படமாக்கி இருக்கிறார்கள்.

கிருமி - சினிமா விமர்சனம்

முட்டைதோசை கிடைக்காத ஆதங்கத்துடன் கடுகடுப்பதும், தன்னை போலீஸாகவே கற்பனை செய்துகொண்டு விறைப்பும் முறைப்புமாக நடமாடுவதுமாக கதிர் கச்சிதம். முன்பாதி முழுக்க அதட்டுவதும் பின்பாதியில் அரள்வதுமாக... ஒரு 'ஹீரோ’ உருவாகிட்டார் மக்களே! 'எனக்குத்தான் எவனும் பொண்ணு கொடுக்க மாட்டேங்கிறான்... கொடுத்தா பூபோல பாத்துப்பேன்’ சாதா வசனத்தை ஸ்பெஷல் சாதாவாகச் சொல்லி அப்ளாஸ் அள்ளும் யோகிபாபு... ஒரு காமெடியன் உருவாகிட்டார் மக்களே. படத்தின் கலவரக் களேபரங்களுக்கு மத்தியில் ஒரு ஃப்ளாஷ்கட்டில் கடக்கிறது கதிர்-ரேஷ்மி இடையிலான செம ஜில் ரொமான்ஸ். 'நீ போம்மா... பத்து நிமிஷத்துல வர்றேன்...’ எனச் சிணுங்கும் ரேஷ்மி... 'ரொமான்ஸ் மீ’ என ஈர்க்கிறார் (அட, ஹீரோவை ஈர்க்கிறாருங்கோ!). பரிதவிப்பில் சார்லி ஸ்கோர்செய்ய, ஒரேவித ரியாக்ஷனில் முன்பாதி-பின்பாதியில் மிரட்டல் வெரைட்டி காட்டுகிறார் சௌந்தரபாண்டியன் ஆக  வரும் டேவிட்.  

கிருமி - சினிமா விமர்சனம்

பழிக்குப் பழி, ஹீரோயிஸம் எதுவும் இல்லாமல் இயல்பான காட்சிகளால் கதையை நகர்த்திச்செல்வது, எந்த விஷயத்தையும் சின்னச்சின்ன காட்சிகளிலேயே உணர்த்துவது... படத்தின் பெரும் ப்ளஸ். ஆனால், கல்யாணம் முடித்த கதிர் ஏன் நண்பன் வீட்டில் குடியிருக்க வேண்டும், துறைரீதியான விசாரணைக்கே டிமிக்கி கொடுக்கும் அளவுக்குச் செயல்படுவார்களா காவலர்கள் என சில சந்தேகக் குழப்பங்கள்.  பின்னணியில் விறுவிறுக்கும் 'கே’-யின் இசை, 'நாணல் பூவாய்...’ பாடலில் க்யூட் பீட்களால் வசீகரிக்கிறது. ஆக்ஷன் சாகசங்கள் அடக்கிவாசிக்கப்பட்டாலும்,  படத்துக்கு த்ரில்லர் மூட் கொடுக்கிறது அருள் வின்சென்டின் ஒளிப்பதிவு.

எல்லாம் சரி... 'வாள் வீசும் வாழ்க்கை... நிமிர்ந்தால் தலையில்லை...’ என்ற டைட்டில் பாடலுக்கு ஏற்ப, 'ஸ்மைலி’ போடும் அந்த க்ளைமாக்ஸ்... ப்ச்... என்னமோ மிஸ்ஸிங் பாஸ்!

- விகடன் விமர்சனக் குழு