Published:Updated:

“நான் ஒரு கமர்ஷியல் களவாணி!”

’தாரை தப்பட்டை’ பாலா பொளேர்!ம.கா.செந்தில்குமார்

ப்போதாவதுதான் பேசுவார். அப்போதும் அதிர்வேட்டு அதிரடிதான் இயக்குநர் பாலா ஸ்பெஷல். இதோ இப்போதும்..!  

 ''கதையை ஒரு வரி, ஒன்றரை வரியில சொல்றதுக்கு நான் என்ன திருவள்ளுவரா? நான் ஒரு சாதாரண சினிமா கிறுக்கன். ஏதோ எனக்குத் தெரிஞ்ச சினிமாவை எடுத்து பொழப்பை ஓட்டிட்டு இருக்கேன்'' - எடுத்த எடுப்பிலேயே 'தாரை தப்பட்டை’ பதில். கரகாட்டப் பின்னணிக் கதை, இளையராஜாவின் 1,000-வது படம் என விசேஷங்கள் பல சூழ்ந்திருக்கும் படத்தின் பணிகளில் பரபரப்பாக இருந்தவரிடம் பேசியதில் இருந்து...  

''திருவையாறு ஆராதனையில, டிசம்பர் சீஸன்ல வாசிச்சு, பத்மஸ்ரீ, பத்மபூஷண்னு விருதுகளை வாங்குபவர்களுக்கு மத்தியில், தங்கள் வாழ்க்கையைத் தொலைச்சு நிக்கிற தஞ்சை மண்ணின் கரகாட்டக் கலைஞர்களின் கதைதான் 'தாரை தப்பட்டை’. இது, நம்ம கரகாட்டம்; அழிஞ்சிட்டு இருக்கிற ஆட்டம். கரகாட்டக்காரர்களை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்குதுங்கிறதுதான் படம். தலையில கரகம் வெச்சு ஆடுறது, கண்ணுல ஊசி எடுக்கிறது, கலர் பாட்டில் குடிக்கிறது மாதிரியான சர்க்கஸ் எதுவும் காட்டலை. இன்னைக்கு கரகாட்டம்னா, கமர்ஷியல் ஆட்டமும்தான். ஒருத்தி பேரு சூறாவளி; ஆட்டக்காரக் குடும்பத்துல பொறந்த பாவப்பட்டவ.  ஒருத்தன் பேரு சன்னாசி. தப்பு, தவில், நாகஸ்வரம்னு சகலமும் கற்ற அப்பாவிப் பய. இவங்க ரெண்டு பேரைச் சுத்தி வாழ்ற மனுஷங்களோட கதை!

 “நான் ஒரு கமர்ஷியல் களவாணி!”

தவில், நாகஸ்வரம்னு ஏகப்பட்ட வாத்தியங்கள் உருவாகிற... கரகாட்டம், நய்யாண்டி மேளம்னு பல கலைகள் வாழ்ற கலைப்பேட்டை நம்ம தஞ்சாவூர். அந்தக் கலைஞர்களின் வாழ்க்கைமுறை அங்கே மட்டும்தான் இன்னும் மாறலை. அந்தக் களத்துலயே டி.வி.டி-யைப் போட்டும் டபுள் மீனிங் பேசியும் ஆட ஆரம்பிச்சுட்டாங்க. காரணம், இந்தப் பாழாப்போன சினிமாவும், சினிமாப் பாட்டுகளை நம்பியே வீணாப் போனவங்களும்தான்!''

''கரகாட்டப் பின்னணியை சினிமாவா மாற்ற ஹோம்வொர்க் பண்ணீங்களா?''

'' 'மக்களின் வாழ்க்கையை கதையா மாத்த பெரிய உழைப்பு உழைக்கணும்’னு சொல்றதே அயோக்கியத்தனம். ஏ.சி கார்ல போயிட்டு, ஏ.சி ரூம்ல உட்கார்ந்துகிட்டு, 'நாங்க உழைச்சோம், உழைச்சோம்’னு சொன்னா, அப்ப உண்மையிலேயே உழைக்கிறவனை எல்லாம் என்னன்னு சொல்றது?''

'' 'நீதான் நடிக்கிற’னு சசிகுமார்கிட்ட சொன்னப்ப என்ன சொன்னார்?''

'' சசி, என்கிட்ட சினிமா கத்துக்க வந்தவன். அதிகாலையில நெத்தி நிறையப் பட்டையடிச்சுட்டு பக்திப்பழமா வந்து என்னை எழுப்புற முதல் ஆளே அவன்தான். இப்பவும் அதே சின்சியாரிட்டி யோட  இருக்கான். 'சுப்ரமணியபுரம்’ தொடங்கி தன் ஒவ்வொரு படத்தையும் முதல்ல எனக்குப் போட்டுக் காட்டுவான். ஒவ்வொரு படம் பார்க்கிறப்பவும், 'இப்ப என்னை நடிகனா ஏத்துக்கிட்டாரா?’னு உளவாளியை வெச்சு என்னை வேவுபார்த்துட்டே இருப்பான். எனக்கு அவன் ஒரு சக்சஸ்ஃபுல் ஹீரோவாத்  தெரிஞ்சானே தவிர, ஒரு பெர்ஃபார்மரா அவனை நான் யோசிக்கவே இல்லை. அவன் நடிப்புல சில நிறைகளும் சின்னச்சின்னக் குறைகளும் இருக்கும். 'அந்தக் குறைகளைக் கழிச்சுட்டா இன்னும் நல்லா நடிப்பான் பாருங்கடா’னு காமிக்கணும்னு தோணுச்சு. அது, இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கு. இது என் படம்கிறதுக்காகச் சொல்லலை. முக்கால் நேர நடிகனா இருந்த சசி, முழுநேர நடிகனாகிட்டான்னு இப்ப நான் நம்புறேன்.''

'' 'பரதேசி’ டீஸர்ல ஆர்ட்டிஸ்ட்களை நீங்க 'அடிச்சு’ வேலைவாங்கினது அப்போ பரபரப்பாச்சு. இந்தப் படத்துல என்ன விசேஷம்?''

''ஆமா... முதல் நாள் ஷூட்டிங்லயே வில்லனுக்குக் கால் உடைஞ்சுது; க்ளைமாக்ஸ்ல ஹீரோவுக்குக் கை உடைஞ்சிருச்சு. ரெண்டுமே  என் தப்பு இல்லை ராசா. ஹீரோவும் நலம், வில்லனும் நலம், நானும் நலம்!''

''வரலட்சுமியை என்ன காரணத்துக்காக ஹீரோயின் ரோலுக்குத் தேர்ந்தெடுத்தீங்க?''

''ராதிகா மேடம் மேல எனக்குப் பெரிய மரியாதை உண்டு. அவங்களோட ரசிகன்னுகூட சொல்லலாம். அப்படிப்பட்டவங்களே 50, 60 படங்கள் பண்ண பிறகுதான் நடிப்புல ஒரு நல்ல பக்குவத்துக்கு வந்தாங்க. நான் இப்ப சேலஞ்ச் பண்றேன். இந்தப் பொண்ணுக்கு இது ரெண்டாவதோ, மூணாவதோ படம்தான். ஆனா, அவங்களைவிட அட்டகாசமாப் பண்ணிட்டா!''

''இளையராஜாவின் 1,000-வது படம். ஓர் இசை மேதையின் தங்கத் தருணம் உங்களுக்குக் கிடைச்சிருக்கே...''  

''ராஜா சாரின் நூறாவது படம் பாலுமகேந்திரா சாரின் 'மூடுபனி’. ஐந்நூறாவது படம், மணிரத்னத்தின் 'அஞ்சலி’. ஆயிரமாவது படம், 'தாரை தப்பட்டை’. முந்தின ரெண்டு பேருக்கும் கிடைச்ச மரியாதையைவிட எனக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைச்சதாக நினைக்கிறேன். அவ்வளவு ஏன், 'இளையராஜாவின் 1,000-வது படம் என்ன?’னு நாளைக்கு கவர்ன்மென்ட் எக்ஸாம்ல ஒரு கேள்விகூட வரலாம். அதை எல்லாம் தாண்டி, காலாகாலத்துக்கும் 'இசைஞானியின் ஆயிரமாவது படம் 'தாரை தப்பட்டை''னு அவரோட கோடானுகோடி ரசிகர்கள் சொல்வாங்க; என் சந்ததியினரும் சொல்லிப்பாங்க. இதுக்கு மேல எனக்கு என்ன பெருமை வேணும்?

 “நான் ஒரு கமர்ஷியல் களவாணி!”

நமக்குத்தான் இது ஆயிரமாவது படம்கிற பெருமை எல்லாம். ராஜா சாரைப் பொறுத்தவரை அவருக்கு இது ஆயிரத்துல ஒண்ணு. அவ்வளவுதான். ஏன்னா, அவர் எப்பவுமே எல்லோருக்குமே ஸ்பெஷல்தான். பெரிய ஹீரோவோ, சின்ன டைரக்டரோ, அவரோட வேலை அதிசுத்தமா இருக்கும். இந்தப் படத்துக்காக பன்னிரண்டு பாடல்கள் போட்டுக் கொடுத்திருக்கார். எத்தனை பாடல்கள் படத்துல வரும்னு இப்போ தெரியாது. ஆனா, அவரோட இசையில் வர்ற அந்தப் பொக்கிஷத்தைப் பாதுகாத்து வைப்பது என் கடமை!''

''இளையராஜாகூட பயணிக்கிற அனுபவம் பற்றி சொல்லுங்களேன்...''  

''  'நான் கடவுள்’ க்ளைமாக்ஸ் பார்த்துட்டு, அதிர்ச்சியாகிட்டார். 'மென்டல் பய... இப்படி அறமே இல்லாம எடுத்திருக்கானே... இவனை என்ன பண்றது?’னு திட்டினார். ஏன்னா, ரெண்டு பேரோட தத்துவப் புரிதலும் நேர் எதிர். ரமண மகரிஷியைப் பற்றி அவர் போட்ட 'ரமணமாலை’ பாடலை 'சார் இந்தப் பாட்டை நான் பயன்படுத்திக்கிறேன்’னு வாங்கினேன். ஏதோ சாமி பாட்டு எடுக்கப்போறேன்னு நினைச்சிருப்பார். ஆனா, அதைப் பிச்சைக்காரங்களை வெச்சு 'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்...’னு பயன்படுத்தினேன். பார்த்ததும் பதறி, 'டேய் அது 'ரமணமாலை’டா. அதை இப்படிப் பண்ணிட்டியேடா’ன்னார். அப்புறம், 'ஒரு சாமி பாட்டு வேணும் சார்... சிவனைப் பத்தி’னு சொன்னதும், 'ஓம் சிவோஹம்’னு பக்தி மல்கப் போட்டுக் கொடுத்தார். அந்தப் பாட்டுக்குள்ள  டூமச் வயலென்ஸ் இறக்கிட்டேன். 'எதைப் போட்டுக் கொடுத்தாலும் வேற மாதிரி எடுத்துட்டு வந்துடுறானே... பைத்தியக்காரன்’னு கோபமா சொல்வார். ஆனா, அவ்வளவு அன்பா பார்த்துப்பார்!

உங்களுக்கு எல்லாம் தெரியாத ஒரு ரகசியம்... அவர் எந்த அளவுக்குச் சிறந்த இசையமைப் பாளரோ, அதே அளவு சிறந்த எடிட்டர். படம் ஓடணும்கிறதுக்காக கமர்ஷியல் கூட்டணும்கிறதுல ரொம்பக் கவனமா இருப்பார். உதாரணமா 'நான் கடவுள்’ படத்துல பிளாக் அண்ட் ஒயிட்லதான் டைட்டில் போட்டிருந்தேன். 'இதுக்கு எல்லாம் மியூசிக் பண்ண முடியாது. காசியில எடுத்த ஃபுல் ஃபுட்டேஜையும் வெச்சு ஒரு பாட்டு நீளத்துக்குப் போட்டுக் கொடு’ன்னார். 'அப்படி எதுவும் இல்லே’னு புளுகினேன். 'பொய் சொல்ற... அதெல்லாம் இருக்கும். போய் எடுத்துட்டு வா’னு சொல்லி, அந்த மான்டேஜஸ் வெச்சு அவர் பண்ணதுதான் அந்த 'மா கங்கா...’னு டைட்டில் சாங். படத்துக்கான மூடை டைட்டில்லயே செட் பண்ணிட்டார். காசியில் 'கங்கா ஆர்த்தி’ நிகழ்ச்சி பிரபலம். இப்ப காசியில அந்தப் பாட்டுடனும்தான் கங்கா ஆர்த்தி நடக்குது.

 “நான் ஒரு கமர்ஷியல் களவாணி!”

இதுபோல என் எல்லா பட ஷூட்டிங்கிலும் அந்த மூட் வரணும்னு எப்பவும் பின்னணியில அவரோட பாட்டோ, இசையோ ஒலிச்சுட்டே இருக்கும். அவர் இசை இல்லாம உங்களால படம் பார்க்க முடியாது. ஆனா அவர் இசை இல்லாம என்னால ஷூட்டிங்கே பண்ண முடியாது!''

''உங்க படங்கள்ல வில்லனுக்கு செம ரோல் இருக்கும். இதுல யாரு?''

'' 'பிதாமகன்’ல ஒரு ஃபைட்டர். வழுக்கை மண்டையா, ஆளே வித்தியாசமா வந்து நிப்பார். டூப் போடுறது தொடங்கி ஸ்டன்ட் மாஸ்டருக்கு உதவியா எதுவா இருந்தாலும் 'நான் பண்றேன் சார்’னு முன்னாடி வந்து நிப்பாப்ல. ஒருநாள் அவரைக் கூப்பிட்டு 'உங்க வயசு என்ன?’னு கேட்டேன். 'அறுபது வயசு சார்’னார். மிரண்டுட்டேன். அந்த வயசுக்கு எல்லாம் நான் உசுரோட இருப்பேனானே தெரியாது. அவ்வளவு எனர்ஜியோட இருக்கிற மனுஷன் காலம்பூரா வெறுமனே 2,500 ரூபாய் சம்பளத்துல ஒரு ஃபைட்டராவே தன்னோட வாழ்க்கையை முடிச்சிடக் கூடாதே. 'நான் கடவுள்’ல அந்த வில்லன் கேரக்டரை அவருக்குக் கொடுத்தேன். அந்த ராஜேந்திரனுக்கு அப்படியே நேர் எதிர் 'தாரை தப்பட்டை’ வில்லன் சுரேஷ். ஆளும் ஓங்குதாங்கா இருந்தான். ஆனா, அவனை வில்லனா ஃபிக்ஸ் பண்றதுக்கு முன்னாடி அவன் சம்சாரத்துக்கிட்ட பேசினேன். ஏன்னா, படம் பார்த்த பிறகு அவங்க இவனை வீட்ல சேர்ப்பாங்களானு தெரியாது. 'இந்தப் படத்துல உன் புருஷன் நடிச்சா, படம் வந்த பிறகு நீ புருஷனோட பெருமையா வெளியே நாலு இடம் போக முடியாது; அவ்வளவு கொடூரமான வில்லன் கேரக்டர். பரவாயில்லையா?’னு கேட்டேன். 'என்ன வேணும்னாலும் பண்ணுங்கண்ணே’னு சிரிச்சுட்டாங்க. அப்படித்தான் சுரேஷ் இதுல வந்தான்!''

'' 'கரகாட்டம்’னா என்னன்னு தெரியாத இந்தத் தலைமுறையினர் படத்தோடு எப்படி எமோஷனலா கனெக்ட் பண்ணிப்பாங்கனு எதிர்பார்க்கிறீங்க?''

''இந்தக் காலகட்டத்துக்குப் படம் சரியா வருமானு பல கேள்விகளையும் ஆச்சர்யக் குறிகளையும் நமக்கு நாமே போட்டுக்க வேண்டிய அவசியம் இல்லை. டிஜிட்டல்ல மாத்தி ரிலீஸ் பண்ணின 'கர்ணன்’ படம் நல்லா  ஓடி இருக்கு. காரணம், அவ்வளவு எமோஷன். 'இதுல காமெடி இல்லையே, ஃபைட் இல்லையே...’னு யாரும் கேட்கலை. சர்ச் பார்க், ஹோலி ஏஞ்சல்ஸ்ல படிக்கிற சின்னச்சின்னக் குழந்தைங்களுக்கு ஸ்பெஷல் ஷோ போட்டி ருக்காங்க. சிவாஜி சாகும்போது 'கர்ணன் அங்கிள்...’னு கதறி அழுததும் நம் தலைமுறைக் குழந்தைகள்தானே!''

'' 'சேது’ படம் ரிலீஸாகி...''

(இடைமறிக்கிறார்...) ''ஐயையோ... அது போன ஜென்மமாச்சே!''

''அந்தப் படம் வெளியாகி ரெண்டு வாரங்கள் கழிச்சுத்தான் பிக்கப் ஆச்சு. ஆனா, இப்போ மூணு, நாலு நாள்லயே பல படங்கள் தியேட்டரைவிட்டுப் போயிருதே!''

''சுற்றுச்சூழலே கெட்டுப்போச்சு. என்ன பண்ணித் தொலைக்கிறது? குப்பைகளை ஒரு நாள், ரெண்டு நாளுக்குள்ள வாரி அள்ளலைனா, கெட்ட வாடை அடிக்கும்ல. அதான் வாரி அள்ளிட்டுப் போயிடுறாங்க. ஆனா, அப்படி அள்ளிட்டுப் போகும்போது அதோடு சில நல்ல விஷயங்களும் போயிடுது. அதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு!''

''கமர்ஷியல் ஹீரோக்களுக்குப் படம் பண்ண மாட்டீங்களா?''

 “நான் ஒரு கமர்ஷியல் களவாணி!”

''ஏன்... இப்பவும் கமர்ஷியல் ஹீரோவை வெச்சுத்தானே படம் பண்ணிட்டு இருக்கேன். கமர்ஷியல் பண்றதுல என்னை மாதிரியான திருடன் வேற எவனும் கிடையாது. எங்கேயாவது உங்க மனசுல கோத்துவிட்ருவேன். வில்லனை வெச்சுக்கூட காமெடி பண்ணுவேன். திடீர்னு எங்கிருந்தோ சிம்ரனைக் கூட்டிட்டு வந்து 'பிதாமகன்’ல ஆடவிடுவேன். மொத்தப் பிச்சைக்காரங்களையும் ஜோக் அடிக்கவெச்சு 'நான் கடவுள்’ல போலீஸ் ஸ்டேஷன்லயே கச்சேரி பண்ணுவேன். என்னை மாதிரி திருட்டு கமர்ஷியல் பேர்வழி எவனுமே கிடையாது. அந்த விஷயத்துல நான் ஒரு கமர்ஷியல் களவாணி!''

''சமீபத்தில் பார்த்ததில் பிடித்த படம்?''

''ஒரு திருத்தம்... கடைசியாகப் பார்த்த படம்... 'தனி ஒருவன்’. வில்லனா அர்விந்த் சுவாமி கலக்கிட்டார். ஹீரோவா ஜெயம் ரவி டஃப் ஃபைட் கொடுத்திருக்கான்.''

''அனுராக் காஷ்யப், பால்கி மாதிரியான பாலிவுட்டின் ஜாம்பவான், இயக்குநர்கள் உங்க படங்களைப் பார்த்துட்டுக் கொண்டாடுறாங்க... நீங்க அவங்க படங்களைப் பார்த்துட்டுப் பேசுறது உண்டா?''

''படங்கள் பார்க்கிறேன். அதை விமர்சனம் பண்ணி அவங்கக்கிட்ட பேசணும்னு ஆசை. ஆனா, என்ன பண்றது... இந்தி நஹி மாலும் ஹை!''

''எல்லா படங்களையும் மூர்க்கமா, ரௌத்திரமாவே எடுக்கிறீங்களே... 'லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ மாதிரி மென்மையா ஒரு படம் எடுக்க நினைச்சதே இல்லையா?''

''இங்கே நம்மளோட லைஃப் பியூட்டிஃபுல்லாவா இருக்கு? ஆனாலும், ஜாலியா ஒரு லவ் படம் எடுக்கணும்னு ஆசை இருக்கு. நம்மளையும் கொஞ்சம் யூத்தா காமிச்சிக்கணுமே. இப்ப வர்ற காதல் படங்களைப் பார்க்கும்போது, 'நம்மகிட்டயும் சொந்த வாழ்க்கையில காதல் கதைகள் ஏராளமா இருக்கே. ஏதாவது ஒண்ணு பண்ணலாம்னு தோணுது!''