Published:Updated:

“எதையும் எதிர் பார்க்காதீங்க ப்ளீஸ்!”

கார்க்கிபவா

''அசுரப் பசி தணிக்கும் அன்லிமிடெட் காரசாரம்தான் ஆந்திரா மெஸ்களின் சிறப்பு. அப்படி நீங்கள் இயக்கும் 'ஆந்திரா மெஸ்’ படத்தில் 'காரசார கமர்ஷியல்’ இருக்குமா?'' எனக் கேட்டால் சின்னதாக ஜெர்க் ஆகிறார் படத்தின் இயக்குநர் ஜெய்.     

''தயவுசெஞ்சு எதையும் எதிர்பார்க்காதீங்க! நம்ம திரைக்கதை அமைப்பு ஹாலிவுட் ஸ்டைலான மூன்று அடுக்கு பாணியில்தான் இருக்கு. ஆனா, இந்தப் படத்துல அப்படி இல்லை. அவ்ளோ ஏன்... படத்துல கதையே இல்லை. வெறும் சம்பவங்களின் தொகுப்புதான் படம். ஒரு சைக்கலாஜிக்கல் பயணம்னு வெச்சுக்கங்களேன். பாலசந்தர், மகேந்திரன், ருத்ரய்யா போன்ற மிகச் சில இயக்குநர்கள்தான் அந்த ஏரியாவைத் தொட்டிருக்காங்க!''

''ஆனா, இந்த டைட்டிலுக்கு வரிவிலக்கு கிடைக்காது... அப்படித்தானே?''

''படத்துல நிறைய உருவகங்கள் இருக்கு. அதுல இந்த டைட்டிலும் ஒண்ணு. ஒவ்வொருத்தருக்கும் காரம், இனிப்புனு பல குணங்கள் உண்டு. அதைக் குறிப்பிடத்தான் 'ஆந்திரா மெஸ்’. படம் முடியிற இடமும் நிஜமாவே ஆந்திரா மெஸ்தான். எங்க படத்துக்கு 'யு’ சர்ட்டிஃபிகேட் கிடைக்காதுனு தெரியும். அதான் தலைப்பிலும் சுதந்திரம் எடுத்துக் கிட்டோம். நினைச்ச மாதிரியே ஏகப்பட்ட கட் கொடுத்திருக்காங்க. திரும்ப சென்சாருக்கு விண்ணப்பிக்கணும்!''

 “எதையும் எதிர் பார்க்காதீங்க ப்ளீஸ்!”

''உங்க சினிமா பின்னணி என்ன?''

''அப்பா ஒரு ஸ்தபதி. அதனால எனக்கு ஓவியத் திறமை கைகூடிருச்சு. விஸ்காம் படிச்சப்போ என் தமிழ் ஆசிரியர்கள் எனக்கு இலக்கியப் பரிச்சயத்தை ஏற்படுத்தினாங்க.  நிறைய வாசிச்சேன்; நிறையப் படங்கள் பார்த்தேன். படிப்பு முடிஞ்சதும் பி.சி.ஸ்ரீராம் சார்கிட்ட சேர விரும்பினேன். ஆனா, காத்திருக்க எனக்குப் பொறுமை இல்லை. ஒரு விளம்பர ஏஜென்சியில சேர்ந்தேன். அங்கேதான் திரைமொழி பத்தின புரிதல் வந்தது; நண்பர்களோடு சேர்ந்து படம் பண்ணலாம்னு நம்பிக்கை வந்தது... இறங்கிட்டோம்!''

''விளம்பர உலகத்துல இருந்து வர்றவங்க கலர்ஃபுல்லா விஷ§வல் கொடுக்கிறாங்க. ஆனா, கதை, திரைக்கதையைக் கண்டுக்கிறது இல்லையே?''

''உண்மைதான். நானும் அப்படிப் பண்ணிடக் கூடாதுனுதான் பார்த்துப் பார்த்து ஸ்கிரிப்ட் பண்ணியிருக்கேன். இது டார்க் ஹ்யூமர் படம். விழுந்து விழுந்து சிரிக்க சீன் இருக்காது. ஆனா, ஒவ்வொரு காட்சி முடிவிலும் லேசா புன்னகை பூக்கவைக்கும். அது நிச்சயம். படத்துல ஆண்கள் எல்லாரும் பெண்தன்மையோடு இருப்பாங்க; பெண்கள் ஆண்தன்மையோடு இருப்பாங்க. பெண்கள் போடவேண்டிய டிரெஸ்ஸை ஆண்கள் போட்டிருப்பாங்க. ஆண்கள் போடுறது எல்லாம் பெண்களோடதா இருக்கும். சுடிதாரைக் கிழிச்சு சட்டைன்னு பல விஷயம் பண்ணியிருக்கோம். அதுக்காக காஸ்ட்யூமர் தாட்ஷா ரொம்ப மெனக்கெட்டிருக்கார்.

வசனம் சுளீர்னு இருக்கணும்னு தீர்மானமா இருந்தேன். நானும் எழுத்தாளர் க.சீ.சிவகுமாரும் வசனம் எழுதினோம். 'ஆசைப்படுறதுலயும் அவசரப்படுறதுலயும் ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் இருக்கிற ஒரே வித்தியாசம் பேர் மட்டும்தான்’, 'ஒரு யானை நடந்தா, பத்து எறும்புகள் சாகத்தான் செய்யும்; அதுவே ஒரு யானை சரிஞ்சா, பத்து இல்ல... பத்தாயிரம் எறும்புகள் வாழவும் செய்யும்’. இப்படி ஒவ்வொரு வசனமும் படத்தின் தீம், ஆன்மாவைப் பிரதிபலிக்கும்!

 “எதையும் எதிர் பார்க்காதீங்க ப்ளீஸ்!”

இப்படி எல்லாம் பார்த்துப் பார்த்துதான் உழைச்சிருக்கோம். ஆனா, என்ன பண்றது...படம் முடிஞ்சு ஏழு மாசம் ஆச்சு. சில பொருளாதார நெருக்கடி. தயாரிப்பாளர் புதுசு. படம் பார்த்தவங்க 'நல்லா இருக்கு’னு சொல்றாங்க. ஆனா, படம் அடுத்த கட்டத்துக்கு நகரலை. இப்பக்கூட மும்பை ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்குப் படம் போகுது. அதுக்கு சப்-டைட்டில் பண்ணினவர், 'படம் ரொம்ப நல்லா இருக்கு’னு சொன்னாரு. நல்ல படம் எடுக்கத் தெரிஞ்ச எங்களுக்கு, அதை ரிலீஸ் பண்ண வழி தெரியலை. வியாபாரிகளா, மக்களா... யார் மேல தப்புனு தெரியலை!''