Published:Updated:

ஸ்மார்ட் வில்லன்கள்!

ம.கா.செந்தில்குமார், கார்க்கிபவா, நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: தி.ஹரிஹரன், பா.பிரபாகரன்

மிழ் சினிமாவைத் தடதடக்கவைக்கும் தற்போதைய வில்லன் டேட்டா இங்கே...   

வம்சி கிருஷ்ணா: ''ஒரு டிராவல், ஒரு சந்திப்பு. இதுதான் என் வாழ்க்கையை மாத்துச்சு. இல்லேன்னா எம்.பி.ஏ முடிச்சுட்டு லண்டன்ல இருந்தவன், இங்கே சினிமாவுக்கு வந்திருப்பேனா?'' - கேள்வியுடன் தொடங்குகிறார் வம்சி கிருஷ்ணா. அடிதடி வில்லன், அமெரிக்க மாப்பிள்ளை என பரபர விறுவிறு என வலம் வரும் தமிழ் சினிமாவின் இளம் வில்லன்.  

''நான் பிறந்து வளர்ந்தது விசாகப்பட்டினம். அப்பா, அம்மா, தம்பி மூணு பேருமே டாக்டர். நான் மட்டும் பிசினஸ் பக்கம் வந்துட்டேன். ஒரு பிசினஸ் விஷயமா இந்தியா வந்தப்போ, ஹைதராபாத் ஏர்போர்ட்ல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனைச் சந்திச்சேன். என்னையே உத்துப் பார்த்தார். பிறகு டேனியல் பாலாஜி என்கிட்ட வந்து, 'காக்க காக்க’ தெலுங்குல ரீ-மேக் பண்றோம். அதுல ஒரு போலீஸ் கேரக்டர் இருக்கு. பிடிச்சிருந்தா நீங்க நடிக்கலாம்’னு சொன்னார். உண்மையைச் சொல்லணும்னா, அதுக்கு முன்னாடி வரைக்கும் தமிழ் சினிமா பத்தி எதுவுமே தெரியாது. தமிழ்ல 'காக்க காக்க’ படம் வந்ததுகூடத் தெரியாது. நல்ல உயரம், ஜிம் பாடி, க்ளோஸ் கட்டிங்னு பார்த்ததும் போலீஸ் மாதிரி தெரிஞ்சதால, அந்த கேரக்டருக்குப் பொருத்தமா இருப்பேன்னு அவருக்குத் தோணியிருக்கு. அப்படித்தான் கிடைச்சது 'கர்ஷனா’ வாய்ப்பு. தேஜா சார் என்னைக் கூப்பிட்டு ஒரு பெரிய படத்துல ஹீரோ சான்ஸ் தந்தார். நானும் ஆதியும் ஹீரோஸ். படம் பேர் 'ஒக்க விசித்திரம்’. சரியா போகலை. அப்ப என் நடிப்பு ரொம்ப மோசமா இருக்கும். இப்படி நடிச்சு நடிச்சுதான் நடிப்பையே கத்துக்கிட்டேன். பிறகு, கருணாகரன் சார் 'டார்லிங்’ல நல்ல கேரக்டர் கொடுத்தார். அதுல நல்ல பேர். அந்தப் படத்தைப் பார்த்துட்டுதான் தமிழ்ல, 'தடையறத்தாக்க’ ஆடிஷனுக்கு கூப்பிட்டார் மகிழ்திருமேனி. இப்படியே சினிமா பின்னாடி ஓடிக்கிட்டு இருக்கேன்.

ஸ்மார்ட் வில்லன்கள்!

ரெண்டு மூணு ஹீரோ வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால் எனக்கு வில்லன், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்னு செட்டில் ஆகலாம்னு ஆசை. என் பாடி லாங்வேஜுக்கு ஷூட் ஆகும் அழகான கதை வந்தால் எதுவா இருந்தாலும் பண்ணலாம்!''

தீனா: 'நான் பக்கா நார்த் மெட்ராஸ் ஆளு பாஸ். காசிமேடு. பாடிபில்டர்; பாக்ஸரும்கூட. ஆர்மி செலக்‌ஷனுக்குப் போயிட்டு, வேணாம்னு திரும்பி வந்துட்டேன். சாப்பாட்டுக்கு ஏதாவது செய்யணுமே... மீன் வியாபாரம், ஹார்பர்ல வேலைனு நிறையப் பண்ணேன். ஜிம் பாயா கொஞ்ச நாள் வேலை செஞ்சேன். அப்படித்தான் கோடம்பாக்கத்துக்குள்ள நுழைஞ்சேன்' - கச்சிதமான அறிமுகம் தருகிறார் 'ஆரண்ய காண்டம்’, 'கிருமி’ படங்களின் டெரர் வில்லன் தீனா.

'முதல் முதலா நடிச்ச படம் எது?'

' 'விருமாண்டி’. க்ளைமாக்ஸ்ல நானும் பசுபதியும் கமல் சார்கூட ஜெயில்ல சண்டை போடுவோம். வழக்கமா ஜிம் பாயா போனா ஓரமா நிற்க வெச்சுடுவாங்க. அப்பதான் கமல் சார் என்னைக் கூப்பிட்டு 'இந்த கேரக்டர் நீ பண்ணு’னு சொன்னாரு. அதோடு, எப்படி நடிக்கணும்னு சொல்லிக்கொடுத்தார். முதல் பாடமே கமல் சார் சொல்லித் தர்றப்ப ஆர்வம் வராம இருக்குமா?'

ஸ்மார்ட் வில்லன்கள்!

' நீங்க அசிஸ்டென்ட் டைரக்டரா வேலைசெஞ்சீங்களாமே?'

'ஆமா... நான் ஓர் ஓவியரும்கூட. அதனால நிறையப் பேர் என்னை ஸ்டோரிபோர்டு வரைய சொல்வாங்க. 'கிருமி’ படத்துக்குக்கூட ஸ்டோரிபோர்டு பண்ணியிருக்கேன். அதுக்கு முன்னாடி 'கறுப்பர் நகரம்’ படத்துல அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை

செஞ்சிருக்கேன். எனக்கு பேரு வாங்கித் தந்த 'ஆரண்ய காண்டம்’ படத்துலகூட அசிஸ்டென்ட் டைரக்டர் வாய்ப்பு கேட்டுத்தான் போனேன். அவங்கதான் என்னை நடிக்கவெச்சாங்க. அந்தப் படம் சரியாப் போகலை. ஆனாலும் எனக்கு நல்ல பேர் வாங்கிக்கொடுத்துச்சு. எனக்கு அடையாளம் தந்த படம்னா, அது 'எந்திரன்’. கோயில் திருவிழா சீன்ல நடிச்சிருந்தேன். ரஜினி சார் என்னைக் கட்டிப்பிடிச்சுப் பாராட்டினார். எனக்கு சந்தோஷத்துல அழுகையே வந்துருச்சு.''

'திருமணம் ஆயிடுச்சா?'

'ஆயிடுச்சு சார். கோயில்ல பார்த்து லவ் வந்திருச்சு. ஒருநாள் அவங்கக்கிட்ட காதலைச் சொன்னேன். கையிலயே என் வயித்தைக் குத்தற மாதிரி பண்ணிட்டு, 'நீ ரௌடி மாதிரி இருக்க. எனக்குப் பிடிக்கலை’னு சொல்லிட்டாங்க. அவங்களால பேசவும் கேட்கவும் முடியாது. பிறகு, அவங்க வீட்டுல நேரா போய்ப் பேசினேன். அவங்க அம்மா, அப்பா சமாதானம் பண்ணி எனக்குக் கட்டிவெச்சாங்க'' என்றவர், தன் மனைவி பிரபாவைப் பார்த்து சைகையில் 'உங்களை நல்லா பார்த்துகிறேன்ல?’ என கேட்க... பிரபா வாய்கொள்ளாப் புன்னகையுடன் 'சூப்பர்’ என்கிறார். '' 'எந்திரன்’ படம் நடிச்சப்ப கல்யாணம் பண்ணினோம். படம் ரிலீஸ் ஆகும்போது ரெட்டைக் குழந்தைங்க பிறந்தது. பேரு செவ்வியன், தெல்லியன். அப்புறம், ஒரு பொண்ணு... செந்தாரகை. மூணு பேரும் சேர்ந்தாங்கன்னா... செம குறும்பு, செம ஜாலி!''

பாவெல் நவகீதன்: 'மெட்ராஸ்’ படத்தில் வில்லன் 'விஜி’, 'குற்றம் கடிதல்’ படத்தில் துறுதுறு பையனின் தாய்மாமாவாக நடித்த பாவெல் நவகீதனுக்கு எழுத்தாளர், நாடக நடிகர், குறும்பட இயக்குநர் என பன்முகம்.

ஸ்மார்ட் வில்லன்கள்!

'எனக்குச் சொந்த ஊர் செங்கல்பட்டுப் பக்கம். லயோலா கல்லூரியில் விஸ்காம், சோஷியாலஜி படிச்சேன். படிச்சு முடிச்சதும் ஏழைக் குழந்தைகளுக்கு குறும்படம் மற்றும் பல்வேறு கலைகளைக் கத்துத்தரும் 'நலந்தாவே’ என்ற ஒரு தனியார் தொண்டு நிறுவன வேலையில் இருந்தேன். குழந்தைங்க பார்க்கும், கேட்கும் விஷயங்களைவைத்து அவங்க பார்வையிலேயே கதைகள் சொல்வாங்க. அதை அப்படியே குறும்படமா எடுக்க அவங்களுக்குக் கத்துக்கொடுத்தேன். அங்கே இருந்து கிட்டத்தட்ட 'கிகி’, 'மக்கப் மங்கம்மா’னு 15 குறும்படங்கள் இயக்கினேன். எல்லா குறும்படங்களும் விருது வாங்கின. 2007-ம் ஆண்டில் இயக்கிய 'மக்கப் மங்கம்மா’தான் இந்திய அளவில் தமிழில் தேர்வான முதல் டிஜிட்டல் குறும்படம். ஒருகட்டத்துல இதை விட்டுட்டு முழுசா சினிமாவுக்கு வந்துட்டேன். நான், இயக்குநர் பா.இரஞ்சித் எல்லாரும் ஒரே சமயத்தில் படம் இயக்க வாய்ப்பு தேடிட்டு இருந்தவங்க. 'அட்டகத்தி’ ஹிட்டுக்குப் பிறகு, 'மெட்ராஸ்’ பட வேலைகளில் மும்முரமா இருந்தவர், என்னை ஒருநாள்  கூப்பிட்டார். நானும் ஏதோ தயாரிப்பாளரை எனக்கு அறிமுகம் செய்யப்போறார்னு நினைச்சு ஸ்கிரிப்ட்டோட போனேன். விஜி கேரக்டர்ல என்னை நடிக்கச் சொன்னார். அவர் சொன்னதுபோலவே நடிச்சேன். செம பேர். அதுக்குப் பிறகு அதே மாதிரி ரௌடி கேரக்டர்ல நடிக்க வாய்ப்புகள் வந்தது. வேணாம்னு சொல்லிட்டேன். இதுல என்ன சுவாரஸ்யம்னா, 'மெட்ராஸ்’ படத்துக்கு முன்னாடியே 'குற்றம் கடிதல்’ படத்துல நடிச்சு முடிச்சுட்டேன். நானும் பிரம்மாவும் 'நலந்தாவே’ தொண்டு நிறுவனத்தில் ஒண்ணா வேலைபார்த்தவங்க. ரெண்டு பேரும் ஒரே சமயத்துல வேலையை விட்டுட்டு சினிமாவுக்கு முயற்சிசெஞ்சோம். 'குற்றம் கடிதல்’ படத்துக்குக் கிடைக்கிற பாராட்டுகள் என்னை ரொம்ப உற்சாகப்படுத்தியிருக்கு. சினிமா இயக்கணும். அதுதான் என் ஆசை. அதுக்காகக் காத்திருக்கேன்!'

ஹரீஷ் உத்தமன்: தமிழில் 'தனி ஒருவன்’, 'பாண்டிய நாடு’, 'பாயும் புலி’, தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் 'ஸ்ரீமந்துடு’ என கலக்கிவரும் ஸ்மார்ட் ஃபிட் ஹரீஷ் உத்தமன் பிறந்து வளர்ந்தது கோவை. அவரது கிராமத்தில் கேபிள் டி.வி எட்டிப்பார்த்ததே 2002-ம் ஆண்டுக்குப் பிறகுதான். சினிமா வாசனையே இல்லாத குடும்பத்தில் பிறந்த ஹரீஷ், கல்லூரி முடித்ததும் வேலைசெய்தது பாரமவுண்ட் ஏர்வேஸில். கேபின் க்ரூவாக சில ஆண்டுகள் பறந்தபடியே இருந்தவருக்கு, வாழ்க்கை போரடிக்க ஆரம்பித்தது. கை நிறையப் பணம் இருந்தாலும் அது மட்டுமே போதவில்லை ஹரீஷூக்கு. அப்போது ஒருநாள் அவரது அண்ணனைப் பார்க்க வந்த இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம், ஹரீஷைப் பார்க்க... யு டர்ன் அடித்தது அவர் வாழ்க்கை. 'தா’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

ஸ்மார்ட் வில்லன்கள்!

'எனக்கு ரகுவரன் ரொம்பப் புடிக்கும். என் 40 வயசுல அவரை மாதிரி வில்லன் ஆகணும்னு ஆசை இருந்தது. ஆனா அது 30 வயசுலேயே நடக்கும்னு நினைக்கலை.''

''தெலுங்குல மகேஷ் பாபுவுக்கு வில்லனாமே நீங்க?''

'' 'பாண்டிய நாடு’ ஒளிப்பதிவாளர் மதிதான் என்னை 'ஸ்ரீமந்துடு’ டீமுக்கு அறிமுகம் பண்ணார். ஸ்பாட்ல ஒருநாள் அவரைப் பார்த்தப்ப இங்கிலீஷ்ல பேசினேன். அவர் பதிலுக்கு நல்லா தமிழ் பேசினார். 'படிச்சது, சுத்தினது எல்லாமே சென்னைதான் நண்பா’னு சொன்னார். வெரி டௌன் டு எர்த் அவர்.''

'தனி ஒருவன்’ இவ்வளவு பெரிய சக்சஸ் ஆகும்னு நினைச்சீங்களா?

''சத்தியமா இல்லை. நான் எங்க போனாலும் அந்தப் படம் பத்தி பேசாத ஆளே இல்லை. நல்ல படமா வரும்னு நினைச்சேன். ஆனா, இவ்ளோ பெரிய வெற்றி நினைச்சே பார்க்கலை.''

''ட்ரீம் ரோல்?''

'' 'ஜிகர்தண்டா’ சேது மாதிரி ஒரு பவர்ஃபுல் ரோல் பண்ணணும். வில்லன்னு சொல்ல வரல. எனக்கு சில ஹீரோ சப்ஜெக்ட்ஸ்கூட இப்ப வந்துச்சு. ஆனா, நான் என்னை ஹீரோவா வில்லனா பார்க்கலை. கதைக்கு என்னால என்ன பண்ண முடியும்னு மட்டும்தான் பார்க்கிறேன்.''

''நிறைய ரசிகைகள் சேர்ந்துட்டாங்கபோல...''

''ஆமாங்க.. என் உடம்பைப் பார்த்துட்டு 'நீங்க ஹீரோவாவே நடிக்கலாம்’னு சொல்வாங்க. ஸ்கூல்ல இருந்தே நான் பேஸ்கட் பால் ப்ளேயர். அதனால எப்பவும் உடம்பை ஃபிட்டா வெச்சிருப்பேன். இப்பக்கூட சென்னையில் இருந்தா ஐ.ஐ.டி-யில சைக்கிளிங் பண்ணப் போயிடுவேன்.''