Published:Updated:

புலி - சினிமா விமர்சனம்

புலி
News
புலி

விஜய்... வழக்கம்போல ஃப்ரெஷ். நடனத்தில் வழக்கம்போல துள்ளல். ஆனால், ஃபேன்டசி படத்துக்கு காஸ்ட்யூம் மட்டும் மாற்றினால் போதுமாஜி?!

து ஹ்யூமர் புலி, கிளாமர் புலி,  ஆக்ஷன் புலி, 'அம்புலிமாமா’ புலி, ஹிஸ்டரி புலி, மிஸ்ட்ரி புலி, கிலி கிளப்பும் புலி, பலி வாங்கும் புலி, குள்ளன் ஃப்ரெண்ட் புலி, வில்லன் மிரளும் புலி. ஏயப்பா.... இந்தப் 'புலி’க்குத்தான் எத்தனை எத்தனை அவதார்? ஆனால், ஒட்டு மொத்தத்தில்..?         

 மக்களை அடக்கி ஒடுக்கும் அரண்மனை அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்கும் சாகச வீரனே, 'புலி’.  

இந்த வைரல்மேனியா யுகத்தில், 'ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி ஒரு ஊர்ல ஒரு மந்திரவாதியாம். அவனைத் தேடி சித்திரக் குள்ளர்களோடு ஒரு வீரன் போறானாம்...’ பாணி மாயாஜாலக் கதையில், விஜய்யை நடிக்கவைத்த சிம்பு தேவனின் 'மாத்தியோசி’ கதை சொல்லலுக்கு முதல் சபாஷ். காடு, மலை, குதிரை, ஒற்றைக்கண் அரக்கன், பேசும் பறவைகள், சித்திரக்குள்ளர்கள், வேதாள உலகின் ராணி... என தமிழ்த் திரை சமீபத்தில் பார்த்திராத ஃபேன்டசி காட்சிகளைப் படரவிட்ட உழைப்புக்கும் 'ஓ’ போடலாம். ஆனால், கோட்டையைச் சுற்றி இத்தனை மேஜிக்ஸ் அடுக்கிவிட்டு, 'கதை, திரைக்கதை’ விஷயத்தில் கோட்டைவிடலாமா?  

புலி - சினிமா விமர்சனம்

விஜய்... வழக்கம்போல ஃப்ரெஷ். நடனத்தில் வழக்கம்போல துள்ளல். ஆனால், ஃபேன்டசி படத்துக்கு காஸ்ட்யூம் மட்டும் மாற்றினால் போதுமாஜி?! நீட்டி முழக்கிப் பேசும் அந்த டயலாக் டெலிவரி முதல் வாள் சுழற்றும் அந்த ஆக்ஷன் வரை... ப்ச்! கொடூரத் தளபதி சுதீப், ராணியாக ஸ்ரீதேவி... ப்ச்... ப்ச்! 'ராஜா ராணி படம்’ என்றால் கதை பிடிக்கிறார்களோ இல்லையோ, இரண்டு ஹீரோயின்களைப் பிடித்துவிடுகிறார்கள். அவர்களும் 'செம காட்டு’ காட்டுகிறார்கள். இந்தப் படத்தில் ஸ்ருதி, ஹன்சிகா!

கதை கேட்டே வளர்ந்தவர்கள்தான் நாம். பேசும் பறவை, பெரிய ஆமை, பச்சைத் தவளை, சித்திரக் குள்ளர்கள், வேதாள சக்தி ('தளபதி’ படத்தில் 'தல’ படத்தின் டைட்டிலுக்கு விசில்!) என ஒவ்வோர் அத்தியாயம் திறக்கும்போதும் நமக்குள் இருக்கும் கதை கேட்கும் 'சின்னப் புள்ள’ ஆர்வமாக நிமிர்கிறான். ஆனால், 'சின்னப் புள்ளத்தனமான’ சம்பவங்கள் அவனைச் சோர்ந்து போகச் செய்கின்றன. பேசும் பறவையையே நம்பி ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும்போது, விஜய் பாத்திரத்தின் இயல்பு தொடங்கி கதாபாத்திரங்களின் பேச்சுவழக்கு வரை ஏகக் களேபரக் குழப்பங்கள். க்ளைமாக்ஸில் தற்போதைய அரசியலுக்கு சில பன்ச், ஃப்ளாஷ்பேக்கில் ஈழத்து ரெஃபரென்ஸ் என்பது எல்லாம்... ஜல்லியடி!

நட்டியின் ஒளிப்பதிவும் விஜய் அற்புதராஜ் - ரவீந்திரன் குழுவின் கிராபிக்ஸும் மட்டுமே ஆறுதல்.

புலி - சினிமா விமர்சனம்

இம்சை அரசனின் அழிச்சாட்டியக் குறும்பிலும், கடவுளையே அறை எண் 305-ல் கதறவைத்ததிலும், இரும்புக்கோட்டையில் முரட்டுச் சிங்கங்களை உலவவிட்டதிலுமாக ஈர்த்த இயக்குநருக்கு என்ன ஆச்சு?

படத்தின் அறிமுக பில்டப் காட்சியிலேயே, வில்லன் அடியாளின் காலைப் பிடிக்கும் ஒரு மாஸ் ஹீரோவை இப்படியா காலை வாரிவிடுவது?

- விகடன் விமர்சனக் குழு