Published:Updated:

‘கமல் சாரைத் திட்டும் உரிமை யாருக்கும் கிடையாது!’

‘பாண்டவர் அணி’ கார்த்தி பாய்ச்சல்ம.கா.செந்தில்குமார்

‘‘ ‘The Intouchables’-னு ஒரு   பிரெஞ்சுப் படம்; பிரான்ஸுல பெரிய ஹிட் அடிச்ச படம். அதோட அதிகாரபூர்வ ரீமேக்தான் 'தோழா’. பிரான்ஸுல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் படம்பிடிக்க அவ்வளவு சுலபமா அனுமதி கொடுக்க மாட்டாங்க. ஆனால், 'தி இன்டச்சபிள்ஸ்’ பட ரீமேக்னு தெரிஞ்சதும், 'அந்தப் படத்தை இங்கே ஷூட் பண்றது எங்களுக்குப் பெருமை’னு சொல்லி அனுமதி கொடுத்தாங்க. அந்த அளவுக்கு அந்தப் படம் பிரெஞ்சு மக்களுக்கு நெருக்கமானது. அதே நெருக்கத்தை தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் 'தோழா’ கொடுப்பான்'' - ஆயிரம் வாட்ஸ் உற்சாகத்துடன் பேசுகிறார் கார்த்தி. நாகார்ஜுனா, தமன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குநர் வம்சி பைடிபள்ளி என மல்ட்டி ஸ்டார் கூட்டணியில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறான் 'தோழா’.

''பிரான்ஸ் தேசமே நெகிழும் அந்தக் கதை என்ன?''

''உடலால் ஊனமுற்ற ஒருவன், சமூகத்தால் ஊனமுற்ற இன்னொருவன்... இந்த இருவருக்கும் இடையிலான நட்பு, அவங்க வாழ்க்கையை எப்படி ஒட்டுமொத்தமாப் புரட்டிப்போடுதுங்கிறதுதான் கதை. 'செலிபிரேஷன் ஆஃப் லைஃப்’... இதுதான் படத்தின் கேப்ஷன். அதுக்கு ஏத்தமாதிரி  மொத்தப் படமுமே மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாத்தான் கடக்கும்.

 ‘கமல் சாரைத் திட்டும் உரிமை யாருக்கும் கிடையாது!’

படத்தில் நாகார்ஜுனா மல்ட்டி பில்லியனர். ஆனா, திடீர்னு கழுத்துக்குக் கீழே செயல்பட முடியாத முடக்குவாத நோயால் பாதிக்கப்பட 'வீல் சேரில்’ வாழ்க்கை. எல்லா வசதிகளோடும் நல்லா நடமாடிட்டு இருந்த ஒருத்தர், திடீர்னு அப்படி ஒரு நாற்காலியில் குறுகிட்டா, அவர் மனநிலை எப்படி இருக்கும்? அந்தப் பக்குவத்தை 'விக்ரம்’ என்கிற கேரக்டர் மூலம் அட்டகாசமா வெளிப்படுத்தியிருக்கார் நாகார்ஜுனா சார்.

நாக் சார் மல்ட்டி பில்லியனர்னா, நான் மல்ட்டி டல்லியனர். பக்கா லோக்கல். அப்பா இல்லாம அம்மாவால் வளர்க்கப்படும் பையன். எல்லாத்தையும் சீக்கிரம் அனுபவிக்கணும்னு நினைக்கிறவன். 'எப்படி எல்லாரும் இவ்வளவு பொறுமையா இருக்கானுங்க? மூவாயிரம் ரூபா சம்பளத்தை வாங்குறதுக்கு எத்தனை பேருக்குத்தான்யா சல்யூட் அடிக்கிறது? இவனுங்களுக்கு மத்தியில வாழ்ந்து, வளர்ந்து எப்போ கார், பங்களா வாங்குறது?’னு 'சமூக’க் கோபத்தோடு இருக்கிறவன்.  நாகார்ஜுனாவைக் கவனிக்கிற கேர்டேக்கர் வேலைக்குப் போயிருப்பான். 'இந்த வீட்ல வேலைக்காரனாலாம் நம்மளால இருக்க முடியாது’னு வாழ்க்கையை அதன் போக்குல வாழ்றவன். படத்தின் இன்னொரு ஸ்பெஷல், 'குக்கூ’ ராஜுமுருகனின் வசனங்கள். 'ஒரு இடத்துக்குப் போயிட்டா மனசு மாறிடும்னு நினைக்கிறோம். ஆனா, மனுஷன் போற இடத்துக்கு எல்லாம் மனசுபோயிடாது’னு ரசனையா எழுதியிருக்கார்!''  

''அநேகமா தெலுங்குல நீங்க நடிக்கிற முதல் படம் இதுதான்

 ‘கமல் சாரைத் திட்டும் உரிமை யாருக்கும் கிடையாது!’

ல...''

''ஆமா! 'ஆயிரத்தில் ஒருவன்’, 'பையா’, 'நான் மகான் அல்ல’... இவை எல்லாம் தெலுங்குல டப் பண்ணோம். அங்கே சூப்பர் ஹிட். 'நான் மகான் அல்ல’ அங்கே 'நா பேரு ஷிவா’னு ரிலீஸ் ஆச்சு. அதுல இருந்து அங்கே என்னை 'ஷிவா’னுதான் கூப்பிடுவாங்க. 'அலெக்ஸ்பாண்டியன்’, 'சகுனி’ இங்கே மாதிரியே அங்கேயும் சரியாப் போகலை. 'மெட்ராஸ்’, 'கொம்பன்’ ரெண்டும் ஒரு குறிப்பிட்ட ஏரியாவை மையப்படுத்தின படம்கிறதால அங்க டப் பண்ணலை. இப்போதான் 'தோழா’வுக்காக முதல்முறையா தமிழ், தெலுங்குனு பைலிங்குவலா நடிக்கிறேன். ஒரே ஷாட் தமிழ், அடுத்து தெலுங்குனு பேசி நடிக்கணும். கொஞ்சம் கஷ்டம்தான். நாக் சார்கூட தமிழ் பேசும்போது, 'இதை என்ன மாடுலேஷன்ல பேசணும்னு நீ சொல்லிக்காட்டு. அப்போதான் எனக்குத் தெரியும்’னு கேட்டுப்பார். சீன்ல அவர் பேசுறப்ப, 'ஒன் மோர் சார். இந்த இடத்துல கொஞ்சம் தெலுங்கு அடிக்குது’னு சொல்வேன். 'ஏய்... நீ ஓவரா கலாய்க்கிறே’னு சிரிப்பார். சின்சியரும் ஜாலியுமான மனுஷன். அவர் 50 வயசுக்காரர்னு நம்பவே முடியலை. வாழ்க்கையை நிமிஷத்துக்கு நிமிஷம் ரசிச்சு, சிலாகிச்சு வாழ்றார்!''  

''மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமன்னாகூட நடிக்கிறீங்க. என்ன ஸ்பெஷல்?''

''அவங்க அவ்ளோ கலரா இருக்கிறதால, எப்பவும் 'ஒரு மார்வாடிப் பொண்ணு’னுதான் அவங்களைக் காட்டவேண்டியிருக்கு. ஆனா, இந்தப் படத்துல ஒரு பில்லியனரோட  செகரட்டரியா பிரமாதமா பொருந்தியிருக்காங்க!''

 ‘கமல் சாரைத் திட்டும் உரிமை யாருக்கும் கிடையாது!’

''தெலுங்குலகூட இப்படி ரெண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கிறது சர்வசாதாரணமா நடக்குது. தமிழ்ல ஏன் அது இன்னும் வரலை? அவ்ளோ ஏன், உங்க அண்ணன் சூர்யாகூடவே நீங்க இன்னும் நடிக்கலையே...''

''அங்க 10 கோடி மக்கள்தொகைன்னா, அதுல குறைந்தபட்சம் ஆறு கோடிப் பேராவது தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பாங்க. ஆனா, நம்ம ஊர்ல ஒரு கோடிப் பேர் படம் பார்த்தாலே பெரிய விஷயம். அதான் அங்கே 'பாகுபலி’ எல்லாம் நம்பி எடுக்க முடியுது. இங்கேயும் அந்த மாதிரி முயற்சிகள் பண்ண, இன்னும் சில சிக்னல் கிடைக்கணும். கிடைச்சுட்டா, அடிச்சு பட்டையைக் கிளப்பிடலாம். நானும் அண்ணனும் நடிக்கிற மாதிரி ரெண்டு மூணு ரீமேக் கதைகளோடு வந்தாங்க. அப்போ ரெண்டு பேருக்கும் டேட்ஸ் அமையலை. தவிர, ரெண்டு பேரையும் சேர்த்து பேலன்ஸ் பண்ணி கொண்டுபோய் சேர்க்க ஒரு பெரிய டைரக்டர் வேணும். அண்ணனே சொல்லியிருக்கார், 'ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம். பிரதர்ஸ் இப்படி சினிமாவுல இருக்கிறது அபூர்வம். அப்படி இருக்கும்போது பண்ற விஷயம் நச்னு இருக்கணும்’னு சொன்னார். சீக்கிரமே பண்ணுவோம்!''

''உங்க குரு மணிரத்னம் படத்துல நடிக்கப் போறீங்களே...''

'' 'ஒரு லைன் இருக்கு, நீ விருப்பப்பட்டா பண்ணலாம்’னு சொன்னார். 'நான் எப்ப வரணும்னு மட்டும் சொல்லுங்க சார். வந்துடுறேன்’னு சொன்னேன். 'இன்னொரு கேரக்டரும் இருக்கு. உனக்கு ஓ.கே-வா?’னு கேட்டார். 'நீங்க சொன்னா நான் பண்றேன் சார்’னு சொன்னேன். அவர் சொன்ன பிறகு நமக்கு கேள்வியே கிடையாது. ஷூட்டிங் போனபிறகு பழைய ஞாபகத்தில் என்னை அறியாமல் கிளாப் அடிச்சாலும் அடிக்கலாம்!''

''நடிகர் சங்கப் பிரச்னையில் ரஜினி, கமலை சந்திச்சீங்க... என்ன சொன்னாங்க?''

 ‘கமல் சாரைத் திட்டும் உரிமை யாருக்கும் கிடையாது!’

''பிரச்னையைக் கேட்டுக்கிட்டாங்க. நாங்களும் 'எங்களுக்கு ஓட்டு போடுங்க’னு  தனிப்பட்ட முறையில் ஆதரவு கேட்கலை. '10 வருஷத்துக்கு அப்புறம் எலெக்ஷன் நடக்குது. நீங்க வந்து ஓட்டு போடணும்’னுதான் கேட்டுக்கிட்டோம். ஏன்னா, அவங்க ரெண்டு பேரும் வந்து ஓட்டு போட்டாலே, வீட்ல உட்கார்ந்திருக்கவங்ககூட தானா வந்து ஓட்டு போடுவாங்க. விஜய் சார்கிட்டயும், 'அண்ணா... நீங்க எங்களுக்குத்தான் ஓட்டு போடணும்னு சொல்லலை. நீங்க வந்தாலே போதும்’னு சொன்னோம். 'ஏய்... என்னப்பா இப்படிக் கேட்கிற. வந்துர்றேம்ப்பா’னு சொன்னார். சினிமாவை மட்டுமே நம்பி வாழ்ந்த, வாழும் ஆயிரக்கணக்கான பேர் எந்த எதிர்காலமுமே இல்லாம இருக்காங்க. 85 வயசுக்குப் பிறகும் அவங்க வேலைக்குப் போய்ச் சாப்பிட வேண்டிய நிலைமை. அதை மாற்றத்தான் எங்களால முடிஞ்ச முயற்சிகளைப் பண்ணிட்டிருக்கோம்!''

''கமல் உங்க 'பாண்டவர் அணி’க்கு ஆதரவு தெரிவிச்சதால், அவரை சரத்குமார் கடுமையா விமர்சிச்சிருக்காரே!''

'' 'யங்ஸ்டர்ஸ் வரணும். அடுத்தடுத்த விஷயங்களைப் பண்ணணும். புது டீம் வந்தா, பயத்துல இன்னும் அதிகமான ஆர்வத்துல வொர்க் பண்ணுவாங்க. இங்க அந்த ஃபயரும் ஆர்வமும்தான் தேவை’னு எப்பவுமே சொல்வார். அவரே ஒரு சினிமா பல்கலைக்கழகம். அவர்கிட்ட கேட்டாலே அவ்வளவு ஐடியா கொடுப்பார். அதை நாங்க பண்ணாலே போதும். அப்படி ஒரு திறந்த மனசோடு எங்களுக்கு ஆதரவு தெரிவிச்சிருக்கார்.  அவரைப்போன்ற சீனியர்ஸ் எங்களை வழிநடத்தினால், எந்தப் பிரச்னையும் இருக்காது.  கமல் சார் பாண்டவர் அணியின் தலைவர் வேட்பாளரா நாசர் சாரை முன்மொழிஞ்சிருக்கார். ஏன்னா, அவங்க நட்பு அந்த அளவுக்கு வலிமையானது. ஆனா, அதுக்காக கமல் சாரை, சரத் சார் அப்படிப் பேசினது வேதனையான விஷயம். 'கமல் சாரைத் திட்டுற உரிமை யாருக்கும் கிடையாது’னு பாய்ஸ் கோபப்பட்டாங்க. ஆனா, இப்போ வேகத்தைவிட விவேகம்தான் முக்கியம்னு அமைதியா இருக்கோம்!''