Published:Updated:

“நினைச்சதுல 30 பெர்சன்ட் நடந்தாலே அது ஹிட்!”

ம.கா.செந்தில்குமார், படம்: ஜெ.வேங்கடராஜ்

செல்லப்பிராணிகளை வைத்து ரசிகர்களை ஈர்த்தார் இராம. நாராயணன். அவரது மகன் முரளியோ கோடம்பாக்கத்தில் 'பேய் ஆட்சி’ நடத்திக்கொண்டிருக்கிறார். தந்தை மறைந்த பிறகு 'தேனாண்டாள் ஃபிலிம்ஸு’க்குப் பொறுப்பு ஏற்றிருக்கும் முரளி, 'காஞ்சனா-1’, 'காஞ்சனா-2’, 'அரண்மனை’, 'டிமான்டி காலனி’, 'மாயா’, 'ஸ்ட்ராபெர்ரி’, 'அரண்மனை-2’, 'சௌகார்பேட்டை’, 'ஜாக்சன் துரை’... எனச் சிறிதும் பெரிதுமாக ஏகப்பட்ட 'பேய்’களை உலவவிடுவதில் தீவிரமாக இருக்கிறார். 

'' 'சினிமா மேக்கிங்ல நாம நினைக்கிறது எதுவுமே கரெக்ட் கிடையாது. நாம நினைச்சதுல 30 சதவிகிதம் கரெக்டா இருந்தாலே அது ஹிட்’ - இதுதான் அப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்த மந்திரம். இதை மனசுலவெச்சுத்தான் ஓடிட்டு இருக்கேன். அப்பா பரபரப்பா இருந்தப்பவே நானும் டிஸ்ட்ரிபியூஷன் தொழிலுக்கு வந்துட்டேன். அப்போ தமிழ்ப் படங்கள் மட்டுமே டிஸ்ட்ரிபியூஷன் பண்ணிட்டு இருந்த சமயத்துலதான், 'ஹாரி பார்ட்டர்’ படத்தின் தமிழ் டப்பிங் உரிமையை வாங்கலாம்னு அப்பாகிட்ட சொன்னேன். என் முதல் ஐடியா சொதப்பிடக் கூடாதுனு அப்பா அந்த புராஜெக்ட்டை ரொம்ப ஜாக்கிரதையா ஹேண்டில் பண்ணார்.  நல்ல லாபம். தொடர்ந்து நிறைய ஆங்கிலப் படங்களை நேரடியாகவும் டப்பிங் செய்தும் வெளியிட்டோம்.  ஒருகட்டத்தில் டப்பிங் படங்கள் பெரிதாகப் போகாத சூழல்.  அப்போதான் தெலுங்கில் 'அருந்ததி’ வெளியாகிப் பரபரப்பு கிளப்பியது. அதோட தமிழ் டப்பிங் ரைட்ஸை ஒரே சிட்டிங்ல பேசி முடிச்சு, வாங்கினோம். அப்பவே அந்தப் படத்துக்கு பெரிய விலை கொடுத்தோம். லாபமும் பெரிசுதான்! இப்போ ஒவ்வோர் அடியையும் கவனமா எடுத்துவெச்சுட்டு இருக்கோம். இல்லைன்னா, 'வார்னர்’, 'டிஸ்னி’னு உலகப் பிரசித்திபெற்ற சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் 'தேனாண்டாள்’னு பேரைச்சொன்னாலே, மரியாதை தர்ற அளவுக்கு நல்ல பேர் வாங்க முடியுமா? எல்லாம் அப்பாவின் ஆசி!''

 “நினைச்சதுல 30 பெர்சன்ட் நடந்தாலே அது ஹிட்!”

''120 படங்களுக்கு மேல உங்க அப்பா இயக்கியிருக்கார். அதுல பெரும்பாலும் கமர்ஷியல் படங்கள். ஒருகட்டத்துக்கு மேல 'சீரியஸ் படங்கள் பண்ணணும்’னு அவர் யோசிச்சதே இல்லையா?''

''நிறைய கமர்ஷியல் படங்கள் பண்ணியிருந்தாலும் அப்பாவுக்குப் பிடிச்சது 'ரியல் சினிமா’தான். அவர் ஆசை ஆசையா இயக்கிய படம் 'சோறு’. ஆனா, அது கமர்ஷியலா போகலை. சொந்தப் படம்,

 “நினைச்சதுல 30 பெர்சன்ட் நடந்தாலே அது ஹிட்!”

ஏகப்பட்ட இழப்பு. சொத்தை எல்லாம் விக்கிற அளவுக்குப் போயிடுச்சு. அந்தக் கஷ்டத்துக்குப் பிறகுதான், விலங்குகளைவெச்சு படம் எடுக்க ஆரம்பிச்சாங்க. இருந்தாலும் தான் இயக்கியதில், 'சுமை’, 'சோறு’, 'சிவப்பு மல்லி’, 'இது எங்க நாடு’, 'பட்டம் பறக்கட்டும்’னு... சீரியஸ் படங்கள்தான் அப்பாவுக்குப் பிடிச்சவை. சினிமா தயாரிப்பு, விநியோகத்துல இருக்கிற கஷ்டங்களை உணர்ந்தவர்ங்கிறதால நடிகர்களோட கால்ஷீட் வீணாகக் கூடாது, பட்ஜெட்டுக்குள்ள முடிக்கணும்னு உறுதியா இருப்பார். அதுவும் அவரோட படங்கள் லாபம் சம்பாதிக்க ஒரு காரணம்.

'சகாதேவன் மகாதேவன்’ படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சி. திடீர்னு மழை கொட்ட ஆரம்பிச்சிருச்சு. 'ஷூட்டிங் பேக்கப்’னு நினைச்சப்ப பக்கத்துலயே ஒரு கல்யாண மண்டபம் இருந்ததைப் பார்த்த அப்பா, 'ரெண்டு பேரும் அடிச்சுக்கிட்டே ஒரு கல்யாண மண்டபத்துக்குள்ள விழுறாங்க. மீதி சண்டையை அங்கே வெச்சுக்கலாம்’னு சொல்லிட்டார். அதனாலதான் 120 படங்கள் வரை வெற்றிகரமான இயக்குநரா இருந்தார்!''

''அப்பா இல்லாம சினிமா பிசினஸ் பண்றது எப்படி இருக்கு?''

''அப்பா இல்லாம நான் வாங்கின முதல் படம், 'அரண்மனை’. அன்றைய  சூழல்ல அது பெரிய ரிஸ்க். ஆனா, படம் சம்பாதிச்சுக் கொடுத்தது. இப்போ சினிமா மட்டும் இல்லாம நாடகங்களையும் தயாரிக்க முடிவெடுத்திருக்கேன். 'சில்லு’னு ஒரு நாடகம் பண்ணோம். நல்ல வரவேற்பு. அடுத்து, 'பட்டினத்தில் பூதம்’ நாடகம் பண்ணலாம்னு இருக்கோம். பணம் சம்பாதிக்கணும்கிறதைத் தாண்டி மேடை நாடகங்களை வளர்த்தெடுக்க விருப்பம். மேடை நாடகத் தயாரிப்பை என் மனைவி பார்த்துக்கிறாங்க!''

'' 'நல்லா இருந்த இண்டஸ்ட்ரியை பேய் படமா கொடுத்துக் கெடுக்கிறாங்க’னு ஒரு விவாதம் இருக்கே...''

'' 'பாகுபலி’, 'ருத்ரமாதேவி’ போன்ற படங்களை இங்க நாங்கதான் ரிலீஸ் பண்ணினோம். நேரடியாவும் சில படங்களைத் தயாரிக்கிறோம். இவை எல்லாம் பேய் படங்கள் இல்லையே. தவிர இன்னைக்கு இண்டஸ்ட்ரியில 'நல்ல’ படம், 'கெட்ட’ படம்னு எதுவுமே கிடையாது. நல்லா வசூல் செஞ்சா, அது நல்ல படம்; வசூலிக்காத படம் கெட்ட படம். அவ்ளோதான்!''