Published:Updated:

“வில்லனுக்கே வில்லன் நான்!”

பா.ஜான்ஸன்

மலுடன் 'தூங்காவனம்’ படத்தில் நடித்து முடித்த கையோடு, ரஜினியுடன் 'கபாலி’ கேம்ப்பில் சேர்ந்திருக்கிறார் கிஷோர். 'மினி’ ரகுவரனாக ஈர்க்கும் கிஷோரின் பொழுதுபோக்கு, இயற்கை விவசாயம்! 

''அடிப்படையில் விவசாயக் குடும்பத்து ஆள் நான். என் அம்மா வழி தாத்தா, விவசாயம் பத்தி நிறையச் சொல்லிக்கொடுத்திருக்கார். காலேஜ் படிப்பு முடிச்சதும் பண்ணைவைக்கத்தான் முயற்சி பண்ணேன். அப்போ முடியலை. இப்போ பெங்களூர்ல கொஞ்சம் நிலம் வாங்கி குடும்பத் தேவைகளுக்கு மட்டும் விவசாயம் செய்றேன். பழச் செடிகள், எள், ராகி, தினை, கம்பு, சோளம்னு விதவிதமா பயிர்செய்றோம். ஏன்னா, நாம ஓடியாடி உழைக்கிறது, சம்பாதிக்கிறது, சேர்த்துவைக்கிறது எல்லாமே நம்ம பிள்ளைங்க நல்லா சாப்பிட்டு, சந்தோஷமா வாழணும்னுதான். ஆனா, காசு கொடுத்து வாங்குற சாப்பாடே பல சமயங்கள்ல விஷமா இருக்குனு தெரிஞ்சப்பதான், பண்ணை விவசாயம் பண்ணலாம்னு முடிவெடுத்தோம். அந்த வேலை முழுக்க என் மனைவி விஷாலா பார்த்துக்கிறாங்க. நம்ம குடும்பத்துக்கு மட்டும் விவசாயம் பண்ணலாம்னுதான் ஆரம்பிச்சேன். ஆனா என் மனைவி, 'சரியான சுயநலவாதி நீ. எல்லாருக்கும் இந்த நல்ல விஷயம் போய்ச் சேர்ற மாதிரி விதைகளைக் கொடுக்கலாம்; விவசாய முறைகளைச் சொல்லிக்கொடுக்கலாம்’னு சொன்னாங்க. 'அட... நமக்கு இது தோணலையே!’னு நினைச்சேன். 'பஃபல்லோ பேக்’னு ஓர் அமைப்பு மூலமா சுமார் 25 சிறு விவசாயிகளை இணைச்சு விளைப்பொருட்களை பெங்களூரு சிட்டியில் விற்பனை பண்றோம்.

 “வில்லனுக்கே வில்லன் நான்!”

காய்கறி, பழங்கள் விளைவிக்க அடிக்கிற பூச்சிக்கொல்லிகளால் புழு, பூச்சி எல்லாம் இறக்கும். ஒரு புழு இறந்தா அதைச் சாப்பிடுற கோழிக்கு ஒரு வாய் சாப்பாடு இல்லை. அந்தக் கோழிகளின் எண்ணிக்கை குறைஞ்சா... அது அப்படியே பரவி மனுஷன் வரைக்கும் பாதிக்கும். கடைசியில மனுஷனுக்கே சாப்பாடு இருக்காது. அப்போ, உணவுச் சங்கிலியை நம்ம சுயநலத்துக்காகக் கெடுக்கக் கூடாது!''

''ரஜினி, கமல்கூட நடிக்கிற பரபரப்புக்கு நடுவிலும் விவசாயத்துல இவ்ளோ ஆர்வமா இருக்கீங்களே...''

''அவங்ககூட எல்லாம் பழகுறதாலதான் சின்னச்சின்ன விஷயத்துக்குக்கூட பெரிய கவனம் செலுத்தத் தோணுது. கமல் சார் அஞ்சு வயசுல இருந்து நடிச்சுட்டு இருக்கார். ஆனா, இப்பவும் அவருக்கு இருக்கிற ஆர்வம், சிந்தனை, செயல்பாடுகள் எல்லாம் ஆச்சர்யப்படுத்துது.

ரஜினி சார், சான்ஸே இல்லை. யார் என்ன சொன்னாலும் செஞ்சாலும் அதைக் கூர்ந்து கவனிச்சு அதுல இருக்கிற நல்ல விஷயத்தை உள்வாங்கிக்கிறார்!''

'' 'கபாலி’ படத்துல உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க?''

''எனக்கு நெகட்டிவ் ரோல். முக்கியமான கேரக்டரில் நடிக்கிற எல்லாரும் ரெண்டு வித்தியாசமான 'ஏஜ் லுக்’ல வருவாங்க. ரஜினி சார் 'எந்திரன்’ல ரெட் சிப் ரோபோவா வில்லன் கேரக்டர்ல மிரட்டியிருப்பாரு. அவருக்கே வில்லனா நடிக்கணும்னு நினைச்சப்போ, கொஞ்சம் பதற்றமாகிடுச்சு. ஆனா, அது ஒரு அனுபவம்!''

 “வில்லனுக்கே வில்லன் நான்!”

''வெற்றிமாறன், பா.இரஞ்சித் போன்ற கவனம் குவிக்கிற இயக்குநர்களின் ஃபேவரிட் நடிகரா இருக்கீங்களே... அது எப்படி?''

''உண்மையைச் சொல்லணும்னா, நான் எதுவுமே பண்றது இல்லை. என் மனைவி அடிக்கடி சொல்வாங்க... ‘Do nothing for nature. Go with it’ - னு. அதாவது 'இயற்கையை மீறி எதுவும் செய்யாதே. அதனுடன் செல்’னு. நான் அந்த ஃபார்முலாவை நடிப்புக்குப் பயன்படுத்திக்கிறேன். நல்லா நடிக்க மெனக்கெடுறது இல்லை. கேரக்டர் எப்படி இருக்கும்னு நினைக்கிறேனோ, அப்படியே இருந்துடுறேன்.

'பொல்லாதவன்’ செல்வம் கேரக்டருக்கு டப்பிங் பேச ரொம்ப உதறுச்சு. உள்ளுக்குள்ள பயமா இருந்தாலும், நிறைய ஹோம்வொர்க் பண்ணி வரிக்கு வரி மெனக்கெட்டு டப்பிங் பேசிட்டுக் கிளம்பிட்டேன். படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் மதுரை தியேட்டர்கள்ல படம் பார்த்துட்டு போன் பண்ணார் இயக்குநர் வெற்றிமாறன்... 'இங்க எல்லாரும் 'செல்வம் மட்டும்தான் பக்காவா சென்னைத் தமிழ்ல பேசியிருக்கான்’னு கமென்ட்ஸ் குவியுது’னு சொன்னார். ஹப்பாடா... இயற்கையா நடிச்சிருக்கோம்னு நிம்மதியா இருந்துச்சு!''

''உங்க நடிப்புக்கு வீட்ல என்ன கமென்ட்ஸ் வரும்?''

''விஷாலா, நான் நடிச்ச எந்தப் படம் பார்த்தாலும், 'படம் நல்லா இருக்கு. அதனால நீங்க நல்லா நடிச்சிருக்கிற மாதிரி இருக்கு’னு ஒரே கமென்ட்ல காலி பண்ணிடுவாங்க. பசங்களுக்கு நான் ஹீரோவா நடிச்ச படங்களை மட்டும்தான் காட்டிக்கிட்டு இருக்கேன். கைதட்டிக் கொண்டாடுவாங்க. வில்லனா நடிக்கிற படம்னா நான் அடிவாங்குற சீன் பார்த்து கஷ்டமா இருக்கும்ல. எல்லாருக்கும் அவங்க அப்பாதானே முதல் ஹீரோ. இப்போதைக்கு அவங்களுக்கு நான் ஹீரோவாவே இருந்துக்கிறேனே!''