Published:Updated:

“ஆர்மி படம் அல்ல அதுக்கும் மேல..!”

பா.ஜான்ஸன்

''என் அப்பா ரங்கராஜன் 'கல்யாணராமன்’, 'மீண்டும் கோகிலா’னு ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநர். தொடர்ந்து நாலு படங்கள் சில்வர் ஜூப்ளி கொடுத்தவர். நான் இயக்கிய முதல் இரண்டு படங்கள்... 'நினைத்தாலே இனிக்கும்’, 'யுவன் யுவதி’. அந்த ரெண்டு படங்களையும் என் அப்பா பார்த்தார். ஆனா, எதுவுமே சொல்லாம எழுந்து போயிட்டார். நான் இயக்கிய மூணாவது படம் 'ஹரிதாஸ்’. அதைப் பார்த்து முடிச்சதும் என்னைக் கட்டிப்பிடிச்சு அழுதார். எது உண்மையான சினிமானு அப்போதான் எனக்குப் புரிஞ்சது. அப்படியான இன்னொரு நேர்மையான சினிமாதான் 'வாகா''’ - மென்மையும் உண்மையுமாகப் பேசுகிறார் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன்.

''முதல் படம் இயக்கணும்னு காத்திருந்தப்போ, தேடிவந்த வாய்ப்புதான் மலையாள 'க்ளாஸ்மேட்ஸ்’ பட ரீமேக். அதைத்தான் 'நினைத்தாலே இனிக்கும்’னு ரொம்ப மெனக்கெட்டுப் பண்ணேன். படம் ஓரளவுக்கு ரீச். ஆனா, ரீமேக்கைவிட ஒரிஜினல்தான் பெஸ்ட்னு நானே சொல்வேன். அடுத்த படம் லைட்டா காமெடியும் காதலுமா பண்ணலாம்னு 'யுவன் யுவதி’ பண்ணேன். அந்தப் பட தோல்விதான் எனக்கு சினிமாவைப் புரியவெச்சது. 'என்னலாம் பண்ணலாம்னு சினிமாவுக்கு வந்தோம். ஆனா, இப்போ என்ன பண்ணிட்டு இருக்கோம்’னு ரொம்பத் தீவிரமான சிந்தனையைக் கிளப்பிருச்சு 'யுவன் யுவதி’. அந்த அளவுக்கு நறுக்குனு குட்டிட்டாங்க ரசிகர்கள். நாம ஏன் இல்லாத ஒரு விஷயத்தை உருவாக்க நினைக்கணும். நம்மளைச் சுற்றி இருக்கிற விஷயங்கள்ல இருந்தே, பல கதைகளை உருவாக்கலாமேனு முடிவெடுத்தேன். அப்படி நான் பார்த்துக் கலங்கின ஒரு விஷயம்தான் 'ஹரிதாஸ்’ படமா உருவாச்சு. அதுக்குக் கிடைச்ச பாராட்டுக்கள்தான் ஒரு முழுமையான சினிமா கிரியேட்டர்ங்கிற உணர்வைக் கொடுத்தது!''

 “ஆர்மி படம் அல்ல அதுக்கும் மேல..!”

''இப்போ 'வாகா’ மிலிட்டரி சினிமானு தலைப்பே சொல்லுது. அதுல என்ன புது விசேஷம்?''

'' 'மிலிட்டரி சினிமாவுல புதுசா என்ன சொல்லிர முடியும்?’னு இருந்த சவால்தான் இந்த புராஜெக்ட்டுக்கு ஆரம்பப் புள்ளி. நம்ம ஆளுங்க பலர், ஆர்மி மேன் ஆகணும்கிற சின்ன வயசு ஆசையைக் கடந்துதான் வந்திருப்பாங்க. நானும் அப்படி வந்தவன்தான். அப்போல்லாம் 'மிலிட்டரின்னா போர் வர்றப்போ சண்டை போடுவாங்க’னு நினைச்சிருப்போம். ஆனா, 'பி.எஸ்.எஃப்’னு (பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ்) ராணுவத்தில் ஒரு பிரிவு இருக்கு. அவங்களுக்கு வருஷம் முழுக்க வேலை இருக்கும். படைப் பிரிவுகள்ல இருக்கிறவங்க போர் சமயம்தான் எதிரிகளைச் சந்திப்பாங்க, அதுக்குனு ஒரு பக்கா திட்டமிடுதல் இருக்கும்; சர்வதேசப் போர் விதிகள் இருக்கும். ஆனா, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அப்படி எந்த வரையறையும் கிடையாது. எதிர்பார்க்காத ஒரு தருணத்தில்கூட துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாவாங்க அல்லது உடல் உறுப்புகளை இழப்பாங்க. ராணுவத்துல இருக்கிறவங்க, போர் சமயம் எதிரி நாட்டு வீரர்களை எந்த அனுமதியும் இல்லாம சுடலாம். ஆனா, பி.எஸ்.எஃப் வீரர்கள் ஒவ்வொரு விஷயத்துக்கும் அனுமதி வாங்கணும். அப்படி ஒவ்வொரு நாளும் அவங்களுக்கு  சவால்தான். இப்படி இன்னும் நிறையத் தகவல்கள் கேள்விப்படவும் அதையே சினிமா ஆக்கிரலாம்னு தோணுச்சு.  

அதுக்காக வேலூர் பக்கத்துல இருக்கிற 'ராணுவப்பேட்டை’ கிராமத்துக்குப் போனேன். அங்கே வீட்டுக்கு ஒருத்தர் ராணுவத்தில் இருப்பாங்க. அவங்ககிட்ட பேசினதுல பல சினிமாக்களுக்கான கதை கிடைச்சது. அதுல ஹைலைட் விஷயங்களை மட்டும் எடுத்துக்கிட்டேன். கதைப்படி விக்ரம் பிரபு, எல்லையில் இருக்கும் ஒரு பி.எஸ்.எஃப் வீரன். அங்கே எதிர்பாராம ஒரு காதல் அவனைக் கடக்குது. அதனால அவன் சந்திக்கும் பிரச்னைகள்தான் படம். மிலிட்டரி சினிமாதான். ஆனா, நாட்டுப்பற்று, ராணுவச் சிக்கல்கள்னு பிரசாரமா இல்லாம இயல்பா இருக்கும்.''

 “ஆர்மி படம் அல்ல அதுக்கும் மேல..!”

''யதார்த்த சினிமானு சொன்னாலும் காதல், டூயட், ஆக்ஷன் இல்லாம படம் பண்ண முடியிறது இல்லைல?''

''அது இல்லாம பண்ண முடியும். ஆனா, ரசிகர்கள் அதை எப்படி ஏத்துப்பாங்கனு யாருக்கும் தெரியாது. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் ஆறு மாசத்தில் தயாராகிடுச்சு. ஆனாலும் ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி பல விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கணும்னு ஒரு முழு வருஷம் தகவல்கள் தேடி, திரட்டிட்டே இருந்தோம். அப்புறம் அதை எல்லாம் ஸ்கிரிப்ட்ல அங்கங்கே சேர்த்தோம். அப்புறமும் ஒரு ரசிகனைத் திருப்திப்படுத்த சில விஷயங்கள் தேவைப்பட்டன. அதுக்காகத்தான் காதல், டூயட் எல்லாம். ஒரு படம் எடுக்கிறது, நான் மட்டும் என் வீட்டு ஹோம் தியேட்டர்ல பார்க்க இல்லை. ஊர்ல பலவிதமான மக்கள் பார்க்கத்தான் ஒரு சினிமா எடுக்கிறோம். அவங்க எல்லாருக்கும் படத்துல ஏதோ ஒரு அரை மணி நேரமாச்சும் பிடிக்கணும். அதுக்கு நடுவுலதான் சில நல்ல விஷயங்களைச் சொல்ல முடியும். கையேந்தி பவன்ல 15 ரூபாய்க்குச் சாப்பிடுற தோசையிலயே, ஊத்தப்பம், முட்டை தோசை, வெங்காயத் தோசை, ரோஸ்ட்னு அவ்ளோ வெரைட்டி எதிர்பார்க்கிறவங்க நம்மாளுங்க. அவங்களைத் திருப்திப்படுத்துறது சாதாரண காரியம் அல்ல!''