Published:Updated:

ஆனந்தம் விளையாடும் வீடு!

ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்

''உண்மையைச் சொல்லணும்னா நடிக்க ஆரம்பிச்ச புதுசுல ஏதோ விண்வெளிக்கு ராக்கெட் விட்டது மாதிரியும், பெரிய பாலத்தைக் கட்டி முடிச்ச மாதிரியும் ஒரு திருப்தி. ஆனா, அப்பா அடிக்கடி சொல்வார்... 'நடிகன் அந்தஸ்து என்பது கடவுள் உனக்குக் கொடுத்த கிஃப்ட். அதனாலதான் மக்கள் உன்னை பெரிய இடத்துல வெச்சிருக்காங்க. அதுக்குப் பிரதிபலனா, உன் மனசுல அன்பும் கனிவும் சராசரி மனிதர்களைவிட 20 மடங்கு அதிகமா இருக்கணும்’னு. இப்போ எங்க மனசு அப்படி ஆகிருச்சு. சகல சந்தோஷங்களையும் வாரி வழங்கும் சினிமாவில் இருந்தாலும், தனக்கான ஃப்ரேமுக்குள் அப்பா சின்சியரா வாழ்ந்த வாழ்க்கைதான் எங்க எல்லாரோட வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் காரணம்'' - அப்பா சிவகுமாரைப் பற்றி சூர்யா பேசப் பேச மொத்தக் குடும்பமும் அதை ஆமோதிக்கிறது.

ஆனந்தம் விளையாடும் வீடு!

1965-ம் ஆண்டில் 'காக்கும் கரங்கள்’ படம் மூலம் அறிமுகமான சிவகுமாருக்கு, சினிமாவில் இது பொன்விழா ஆண்டு. அந்தக் கொண்டாட்டத்தின் குடும்பச் சங்கமத்தில் இருந்து...

''அப்ப நான் சூர்யா இல்லை... சரவணன். படிச்சுட்டு இருந்தேன். வேற எங்கேயோ இருந்த கோபத்தை 'சாப்பாடு சரியில்லை’னு சமையல்காரர்கிட்ட காமிச்சுட்டேன். அப்போ வீட்ல விருந்தினர்களும் இருந்தாங்க. 'மன்னிப்பு கேள். இல்லைனா இங்க சாப்பிடக் கூடாது’னு அப்பா என்னை அதட்டினார். 'உங்க வயசுக்கு அப்படிப் பேசியிருக்கக் கூடாது. மன்னிச்சுருங்கய்யா’னு சொல்லிட்டு, நான் அந்த இடத்துல இருந்து விலகப் பார்த்தேன். ஆனா, 'கோவிச்சுட்டுப் போக உனக்கு உரிமை கிடையாது. என்கூடவே உட்கார்ந்து சாப்பிடு. கெஸ்ட் முன்னாடி இது உனக்கு அசிங்கம்னா, நீ பண்ணின விஷயம் அந்தப் பெரியவருக்கும் அசிங்கம்தானே?’னு அப்பா சொன்னார். பசுமரத்தாணி மாதிரி அப்போ மனசுல பதிஞ்சது இன்னும் என்னை வழிநடத்திட்டே இருக்கு'' என்கிற சூர்யாவைத் தொடர்கிறார் கார்த்தி.

''சட்டை கிழிஞ்சிருந்தா தைக்க, பட்டன் தைக்க, செருப்பு தைக்க, நீச்சல் கத்துக்க, கார் ரிப்பேர் பண்ணனு ஏதாச்சும் ஒரு விஷயம் எங்களைக் கத்துக்கவெச்சுட்டே இருப்பார் அப்பா. 'நான் காபி, டீ, தண்ணி, தம் பழகலை. இதெல்லாம் பழகுறதா... வேணாமானு நீ முடிவு பண்ணிக்க’னு சொல்வார். அவரே அப்படி இருக்கிறதால, நாங்க முடிவுபண்ண எதுவுமே இருக்காது. அப்படியேதான் இருப்போம்'' என்கிற கார்த்தியின் தோள்தட்டி, ''என்னையும் கொஞ்சம்பேச விடுங்கப்பா'' என்கிறார் தங்கை பிருந்தா.

ஆனந்தம் விளையாடும் வீடு!

''கடைக்குட்டிங்கிறதால வீட்ல எனக்கு செல்லம் ஜாஸ்தி. தவிர, அப்பா மாதிரியே நானும் ஓவியம் படிச்சேன்கிறதால அப்பாவுக்குக் கூடுதல் சந்தோஷம். ஆனா, 'நான் சிவகுமார் பொண்ணு’னு ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்ப என் தோழிகள் சிலருக்குத் தெரியாது. அப்ப டி.வி-யில பிரபலமான ஒரு சீரியல்ல அப்பா நடிச்சுட்டு இருந்தார். சூர்யாண்ணாவும் நடிச்சு 'லவ்வர் பாய்’ பட்டம் வாங்கிட்டார். 'உன் வீடு எங்க?’னு ஒரு ஃப்ரெண்ட் கேட்டப்ப, எங்க தெருப் பேரைச் சொன்னேன். 'அங்கேதானே சூர்யா வீடு இருக்கு. அப்ப சிவகுமாரைப் பார்ப்பியா? சூர்யாவை சைட் அடிப்பியா?’னு எக்குதப்பா விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. 'ஐயோ... சூர்யா எனக்கு அண்ணா மாதிரி’னு சொன்னேன். 'அசடு... சூர்யாவைப் போய் யாராவது அண்ணானு சொல்வாங்களா?’னு பயங்கர கிண்டல். இதை வீட்ல சொன்னப்ப சிரிச்சு மாளலை.  

எனக்கு நல்ல மாப்பிள்ளை அமையணும்னு, உறவினர்கள் என்னை கோயில் கோயிலா அழைச்சுட்டுப் போனப்ப, 'கடவுள் உனக்கு நிறைய நல்லது பண்ணணும்னு நினைச்சிருந்தார்னா, உன் வேண்டுதலால் அது குறைஞ்சிடப்போகுது’னு சொல்வார் அப்பா. ஆனால், 'சிவகுமார்’னு அப்பா பேர் கொண்டவரே எனக்குக் கணவரா அமைஞ்சார். பேர்ல மட்டும் இல்ல... குணமும் அப்பா மாதிரிதான்'' என கணவர் சிவக்குமாரின் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறார் பிருந்தா. அதை கண்கள் மினுங்கப் பார்த்துப் பூரிக்கிறார் 'அப்பா’ சிவகுமார்.

''அப்பாகிட்ட நான் அடிக்கடி மனசுவிட்டுப் பேசினது கிடையாது. ஆனா, நான் பெரிய மனக்குழப்பத்துல இருக்கிறப்ப, அதைத் தீர்க்கிற மாதிரி தீர்க்கமான வார்த்தைகளோடு அப்பாகிட்டேருந்து எஸ்.எம்.எஸ் வரும். அது கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்குச் சொன்ன ஆறுதலுக்குச் சமமா இருக்கும்'' - சூர்யா நெகிழ, அவர் தோள்களை இறுக்கிக்கொண்டு தொடர்கிறார் கார்த்தி, ''ரோட்டோரக் கடைகள்ல பேரம் பேசினா அப்பாவுக்கு ரொம்பக் கோபம் வரும். 'ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல பேரம் பேசாம லட்சக் கணக்குல கொடுப்பீங்க. இவன் உங்க சொத்தையா கொள்ளையடிச்சுடப் போறான். கொடுங்கப்பா’னு சொல்வார். எங்களுக்கு ஷாக் அடிச்ச மாதிரி இருக்கும். அண்ணா குழந்தைகளை அவரேதான் ஸ்கூலுக்கு அழைச்சுட்டுப் போயிட்டு, திரும்பக் கூட்டிட்டு வருவார். 'ஏன் உங்களுக்கு சிரமம்?’னு கேட்டா, 'என் வாழ்க்கையில இதைவிட நான் சந்தோஷமா எப்பவும் இருந்தது இல்லை. என்னைப் பார்த்ததும் குழந்தைகள் முகம் மலர்றதும் அவங்களோட நான் கார்ல பேசிட்டு வர்ற விஷயங்களும்... இப்போதான் என் வாழ்க்கையை அனுபவிக்கிறேன்’னு சொல்வார்'' எனப் பூரிக்கிறார் கார்த்தி.

ஆனந்தம் விளையாடும் வீடு!

''என் மகள் உமையாள், தாத்தா செல்லம். மாமாவும் 'என் அம்மாதான் உமையாளா வந்து பிறந்திருக்கா’னு சொல்வாங்க. 'தாத்தா... சாப்பாடு ஊட்டிவிடுங்க, மாடிக்குத் தூக்கிட்டுப் போங்க’னு அவரை டிரில் வாங்குவா. அதேபோல அவ அடம்பிடிச்சு அழுதாக்கூட மாடியில இருக்கிற தாத்தாவுக்குக் கேட்கணும்னு சத்தமா அழுவா. மாமாவும் ஓடிவந்து, 'ஏன் அழுவுறா?’ம்பாங்க. 'என் குழந்தைகளுக்கு இவர் செய்யாததை எல்லாம், உமையாள் செய்யவெச்சுட்டு இருக்கு’னு அத்தையும் சொல்வாங்க'' என மருமகள் ரஞ்சனி சொல்வதைக் கேட்டு நிறைவோடு சிரிக்கிறார் சிவகுமார்.

மெல்லியக் குரலில் பேசத் தொடங்குகிறார் ஜோதிகா. ''சூர்யா, கார்த்தி, பிருந்தா... மூணு பேருமே மாமா அளவுக்கு நல்ல நல்ல வேல்யூஸோடு இருக்காங்க. கோயம்புத்தூர்ல அவங்க அம்மாவோட அம்மா வீட்டுக்குப் பக்கத்து வீட்டுப் பொண்ணுக்குக் கல்யாணம்னு சொல்லி, அந்த நிகழ்ச்சிக்குப் போவாங்க. திருவிழாவுக்கு திடீர்னு கிளம்புவாங்க. ஒவ்வொருத்தருக்கும் அவ்வளவு வேலைகள் இருக்கும்போது, அவ்வளவு தூரம் டிராவல் பண்ணி, ஒரு குடும்ப நிகழ்ச்சிக்குப் போறாங்கனு நினைக்கிறப்ப சந்தோஷமா இருக்கும். சூர்யாவை நேசிக்கிற அளவுக்கு, இந்தக் குடும்பத்துல எல்லோர் மேலயும் எனக்குப் பாசம் உண்டு!''

ஆனந்தம் விளையாடும் வீடு!

மனைவிக்குப் புருவ உயர்த்தலில் லைக்ஸ் சொல்லிவிட்டுத் திரும்பிய சூர்யா, ''எப்பவும் அப்பாவோட பேங்க் பேலன்ஸ் அதிகபட்சம் மூணு லட்சத்துக்குள்ளதான் இருக்கும். அவர் தன் ஆரம்பக் காலங்கள்ல ஒவ்வொரு நயா பைசாவையும் கணக்குப் போட்டுச் செலவழிச்சவர். இப்ப தேவைக்கு அதிகமா பணம் இருக்கும்போது, அதைச் செலவுபண்ண வேற ஒரு பட்ஜெட் போடுறார். 'நல்லா படிச்சிட்டு இருக்கிற பூக்காரம்மாவோட பையன், 500 ரூபாய் ஃபீஸ் கட்டமுடியாம படிப்பை விட்டுட்டான்’னு தெரிஞ்சதும் எல்லாருக்கும் அதிர்ச்சி. அப்போ, 'ஹோட்டல்ல நீங்க கொடுக்கிற 500, 1,000 ரூபாய் டிப்ஸ் காசை இப்படிக் கொடுத்தா, ஒருத்தரோட வாழ்க்கையே மாறும்’னு சொன்னார் அப்பா. அந்தத் தாக்கத்தில் ஆரம்பிச்சதுதான் 'அகரம்’. இப்படி எங்க குடும்பத்தையே ஆலமரமா தழைக்கவெச்சு, தாங்கிப் பிடிச்சுட்டு இருக்கார் அப்பா. அவருக்கு இந்த ஜென்மத்துல எங்களால என்ன கைம்மாறு செய்ய முடியும்னு தெரியலை'' என சூர்யா, தன் அப்பாவின் கைகளைப் பிடித்துக்கொள்ள... மற்ற அனைவரும் நிறைவான புன்னகையால் அதை ஆமோதிக்க... அது ஆனந்தம் விளையாடும் வீடு!

"நான் கொடுத்து வெச்சவ!'

''நான் என்ன தனியா பேசுறது... இவங்க பேசுறதே போதுமே...'' - கூச்சத்துடன் தயங்குகிறார் சிவகுமார் மனைவி லட்சுமி.

ஆனந்தம் விளையாடும் வீடு!

''கல்யாணத்துக்கு முன்னாடி நான் பார்த்ததே மொத்தம் 12 படங்கள்தான். அதில் ஒண்ணுகூட இவர் படம் கிடையாது. பொண்ணு பார்க்கக்கூட இவர் வரலை. இவரோட அக்கா, அக்கா ஹஸ்பண்ட், நண்பர்கள்தான் வந்திருந்தாங்க. அவங்களைப் பார்த்ததுமே, நம்மளை மாதிரியே ஒரு கிராமத்துக் குடும்பம்னு தெரிஞ்சுடுச்சு. அதனால ஒரு நடிகரைக் கல்யாணம் பண்ணப்போறோம்கிற எந்தச் சந்தோஷமும் சங்கடமும் இல்லாம இருந்தேன். ஆனா, சென்னைக்கு வந்த பிறகுதான், 'நமக்குச் சம்பந்தம் இல்லாத ஒரு இடத்துக்கு வந்திருக்கோம்’கிற உணர்வு வந்தது எனக்கு. 'இங்கே உள்ளவங்க மாதிரி நாம திறமைசாலி இல்லை’னு ஒரு காம்ப்ளெக்ஸ். இவரா... காலையில சினிமா ஷூட்டிங்; சாயங்காலம் நாடக ரிகர்சல்னு டைம்டேபிள் போட்டு, ராணுவக் கட்டுப்பாட்டோடு இயங்கிட்டு இருப்பார். போகப்போக இவர் வீட்ல இருக்காரா இல்லையானுகூட, என்னால ஃபீல் பண்ண முடியாத அளவுக்குப் பரபரப்பா இருந்தார். அப்புறம் குழந்தைகள் பிறந்தாங்க. 'குழந்தைகளுக்கு நல்ல அம்மாவா இருந்தா போதும். வேற திறமை இருந்தா என்ன... இல்லைன்னா என்ன...’னு என்னை நானே சமாதானம் பண்ணிக்கிட்டேன்.

ஆனா, ஷூட்டிங் இல்லைனா, ஒரு மாசமா இருந்தாக்கூட வீட்லதான் இருப்பார். அப்போ பீச், வெளியூர்னு போவோம். தவிர நிறைய கெஸ்ட் வருவாங்க. அவங்களை நல்லவிதமா கவனிக்கிறதுலயே நேரம் போறது தெரியாது!''

''சிவகுமார் ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்ட். அவரை இத்தனை வருஷம் எப்படிச் சமாளிச்சீங்க?''

''உண்மைதான். யோகா, சாப்பாடு, ஷூட்டிங், நாடகம்னு காலையில எந்திரிச்சதுல இருந்து ராத்திரி படுக்கிற வரை ஒரு திட்டம் போட்டுச் செயல்படுவார். எல்லாம் அந்தந்த நேரம் சரியா நடக்கணும்னு நினைப்பார். அப்படி எப்பவும் மிலிட்டரி ஒழுங்குல இருக்கிறவங்களைச் சமாளிக்கிறது சிரமம்தான். ஆனா, போகப்போக அவர் இயல்பு அதுதான்னு புரிஞ்ச பிறகு, அதைப் புரிஞ்சுக்கிட்டு நடக்கப் பழகிட்டேன். அப்ப மாமியார் எங்ககூடவே இருந்ததால அவரைச் சமாளிக்கிறது கஷ்டமாத் தெரியலை!''  

''பரபர நடிகரின் மனைவியா நீங்க எதிர்கொண்ட பிரச்னைகளை, உங்க மருமகள்கள் ஜோதிகாவும் ரஞ்சனியும் இப்போ எதிர்கொள்வாங்களே?''

''சிரமம் இல்லாம இருக்குமா? 'சூர்யா எந்த நேரமும் செல்போன்ல சினிமா பத்தி, சினிமா நண்பர்களோடு பேசிட்டே இருக்கார்’கிறதுதான் அவர் மீதான ஒரே புகார். ஒருமுறை சூர்யா ஷூட்டிங்குக்காக வெளியூர் கிளம்புறப்ப, 'போகக் கூடாது’னு பொண்ணு தியா அழ ஆரம்பிச்சுடுச்சு. '20 நாள் அப்பா உன்கூடதானே இருந்தாங்க’னு சொன்னேன். 'இல்ல ஆத்தா... போன்லயேதான் இருந்தாங்க’னு சொல்லுச்சு. அதை மட்டும் சூர்யா குறைச்சுக்கணும். கார்த்தியும் அப்படித்தான். சினிமானு இல்லை... எந்த வேலையில இருந்தாலும் அதெல்லாம் இருக்கத்தானே செய்யும்!''

ஆனந்தம் விளையாடும் வீடு!

''உங்க நட்பு வட்டம்னா யாரைச் சொல்வீங்க?''

''கல்யாணமான புதுசுல சென்னையில எனக்கு யாரையுமே தெரியாது. அந்தச் சமயத்துல சோ அவர்களோட தம்பி மனைவி, சாந்தாதான் எனக்கு உறுதுணையா இருந்தாங்க. இந்த வாழ்க்கையே அவங்களுக்குச் சமர்ப்பணம். அந்த நட்புதான் எனக்கு சென்னை வாழ்க்கையை எளிதாக்கியது. சென்னையில குழந்தைகளையும் அழைச்சுக்கிட்டு பீச், டிரைவ்-இன் கூட்டிட்டுப்போனது எல்லாம் அவங்கதான். அடுத்து சத்யராஜின் கஸின் மாதம்பட்டி சிவகுமாரின் மனைவி தாரா. இவங்க ரெண்டு பேரும்தான் எனக்கு ரொம்ப க்ளோஸ். இந்த நட்பு கிடைச்ச வகையில் நான் கொடுத்துவெச்சவ.''

''சிவகுமார் நடித்ததில் பிடித்த, பிடிக்காத படங்கள் என்னென்ன?''

''கல்யாணத்துக்கு அப்புறம் அவர் நடிச்சு நான் பார்த்த முதல் படம் 'வெள்ளிக்கிழமை விரதம்’. அவரை இன்னொரு பெண்ணோடு அவ்வளவு நெருக்கமா பார்க்கிறது மனசுக்குக் கஷ்டமா இருந்தது. 'இவர் நடிச்சப் படங்களை கல்யாணத்துக்கு முன்னாடியே பார்த்திருந்தா கல்யாணமே வேண்டாம்னு சொல்லியிருக்கலாமே’னுகூடத் தோணுச்சு. அவ்வளவு கஷ்டமா இருந்தது. ஆனா, நாளடைவில் அது அவரோட வேலைதானேனு சகஜமாகிட்டேன். கல்யாணத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட அவரோட எல்லா படங்களையும் பார்த்திருக்கேன். அதுல 'சிந்துபைரவி’, 'இனி ஒரு சுதந்திரம்’ பிடிக்கும். 'குவா குவா வாத்து’ மாதிரியான சில படங்கள், சீனியர் ஹீரோக்களுக்கு அப்பாவா நடிச்ச சில படங்கள்... பிடிக்காத படங்கள்னு சொல்லலாம்.''

''சிவகுமார் மாத்திக்கணும்னு நினைக்கிற விஷயம்?''

''கோபம்தான். பொது இடங்கள்லகூட, 'தேவை இல்லாத சத்தம் இருக்கக் கூடாது’ன்னா எப்புடி? தெரிஞ்சவங்ககூட, 'அண்ணாவை அந்தக் கோபத்தை மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கச் சொல்லுங்க’னு சொல்வாங்க. 'நான் சொல்லிப் பார்த்தாச்சு, நீங்கதான் சொல்லணும்’னு சொல்வேன். ஆனா, இப்ப பரவாயில்லை. 80 சதவிகிதம் குறைச்சுட்டாங்க!''

ஆனந்தம் விளையாடும் வீடு!

''மருமகள்கள் என்ன சொல்றாங்க?''

''ஆரம்பத்துல ஜோவை சூர்யா விரும்புறதாவும், கல்யாணம் பண்ணிக்க சம்மதம் வேணும்னு கேட்டப்பவும் ரொம்பப் பயந்தேன். பல நாட்கள் அழுதுட்டே இருந்தேன். ஆனா, இப்ப நாங்க பொண்ணு பார்த்துக் கல்யாணம் பண்ணிவெச்சிருந்தாக்கூட சூர்யாவுக்கு இப்படி ஒரு துணை கிடைச்சிருக்காது... அதான் உண்மை. எங்க குடும்பத்துக்கு அப்படியே அடாப்ட் ஆகிருச்சு. இப்ப நாங்களும் கார்த்தியும் தி.நகர்ல இருக்கோம். சூர்யா பெசன்ட் நகர்ல இருக்கார். இப்போ தி.நகர் வீட்டுக்கு நேர் பின்னாடி எல்லாரும் சேர்ந்து இருக்கிற மாதிரி, சூர்யா புதுசா ஒரு வீடு கட்டுறார். அந்த ஐடியா கொடுத்தது ஜோ. 'வேண்டாம், உங்க தலைமுறை வரைகூட பிரச்னை இல்லை. காலம் மாறும். உங்க குழந்தைங்க தலைமுறை எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது. தனித்தனியா கட்டிக்கங்க’னு சொன்னோம். 'இல்லல்ல... அதெல்லாம் பார்த்துக்கலாம். எல்லாரும் அட்ஜெஸ்ட் பண்ணிக்குவோம். எல்லாரும் ஒண்ணா இருக்கணும்’னு ஜோ சொல்லிருச்சு. ரஞ்சனிகூட பேசித்தான் அந்த முடிவை ஜோ எடுத்துச்சு.

எனக்கு நகைகள் போட்டுக்கிறதுல விருப்பமே இல்லை. அவருக்கும் எனக்குனு வாங்கித்தர தெரியாது. எதுவா இருந்தாலும் பொண்ணுக்குத்தான் வாங்கித் தருவேன். ஆனா, ஜோ எனக்கு நிறைய ஜுவல்ஸ் வாங்கிக் கொடுத்துட்டே இருக்கு. இப்பக்கூட ஒரு வளையல் பிடிச்சுப்போய், 'அம்மா இது உங்களுக்கு நல்லா இருக்கும்மா’னு டக்குனு கையில போட்டுவிட்டுருச்சு. 'இவ்வளவு காஸ்ட்லியா எதுக்கும்மா?’னு கேட்டேன்.  'சும்மா கெத்தா போட்டுக்கங்கம்மா’னு சொல்லுச்சு. ஆனா, 'இந்த மாதிரி மருமகள்கள் அமைஞ்சதைவிடவா அந்த வளையல் கெத்து’னு இப்ப நினைக்கத் தோணுது!

கார்த்தியின் மனைவி ரஞ்சனி தங்கமான பொண்ணு. ரஞ்சனியும் அவங்க தம்பியும்தான் அவங்க அப்பா-அம்மாவுக்கு உலகம். ஊர்ல நிறைய நிலபுலன்கள் இருந்தாலும்கூட, கோவை, ஈரோடு, சென்னைனு ரஞ்சனியோட படிப்புக்காகவே ஒட்டுமொத்தக் குடும்பமும், ஒவ்வொரு ஊரா மாறிட்டே இருக்கிற அளவுக்குப் பொண்ணு மேல அவ்வளவு ப்ரியம். அப்படிப் பொத்திப் பொத்தி வளர்த்த பொண்ணு, நம்ம குடும்பத்தோட எப்படி செட் ஆகுமோனு கொஞ்சம் யோசிச்சோம். ஆனா, அவ்வளவு அமைதியான பொண்ணு. ஒரு வாரத்துக்குள்ள எங்க பொண்ணு கணக்கா பழகிருச்சு. 'குழந்தையைப் பார்த்துக்க ஆயாம்மா வேணாம் அத்தை. நானே பார்த்துக்கிறேன்’னு சொல்லி, முழு நேரமும் குழந்தையைப் பார்த்துக்குது. அதேபோல தியா, தேவ்க்கும் ரஞ்சனி சித்தினா ரொம்பப் பிடிக்கும். புள்ளைங்க கிடைச்ச மாதிரி, மருமகள்களும் அமைஞ்சிருக்காங்க. அந்த வகையிலும் நான் கொடுத்துவெச்சவதான்!

ஆனந்தம் விளையாடும் வீடு!

மருமகள்களைப் பற்றி சொல்லிட்டு பொண்ணைப் பற்றி சொல்லாமவிட்டா பிருந்தா என்னை சும்மா விடமாட்டா. அவ அப்பா பொண்ணு, அப்பாவின் கோபம், பக்குவம்... ரெண்டும் அவகிட்ட இருக்கு. அப்பா மாதிரியே எப்பவும் புதுசு புதுசா ஏதாச்சும் கத்துட்டே இருப்பா. இப்ப மியூஸிக் கத்துக்கிறா. பேரக் குழந்தைகள் வந்துட்டாலும், கடைக்குட்டியான அவதான் எங்க முதல் செல்லம். அவளுக்கு கணவனா, எங்களுக்கு மகன் மாதிரி ஒரு மருமகன் கிடைச்சது நாங்க செய்த புண்ணியம்!''

''உங்க அனுபவத்துல இருந்து குழந்தை வளர்ப்புக்கு டிப்ஸ் கொடுங்களேன்...''

''எதுவா இருந்தாலும் உடனே நடக்கணும், கிடைக்கணும்னு நினைக்கிறதுதான் குழந்தைங்க சுபாவம். ஏன்னா, அந்த வயசுல 'எது தப்பு... எது சரி?’னு அவங்களுக்குத் தெரியாது. அழுது அடம்பிடிப்பாங்க. அந்தச் சமயத்துல மட்டும், 'கண்டிச்சு வளர்க்கிறேன்’னு நினைச்சு, அவங்களை அடிச்சு துன்புறுத்தக் கூடாது. 'எது சரி... எது தப்பு...’னு எடுத்துச் சொல்லணும். புரிஞ்சுக்கிறதுக்கு அவங்களுக்கு நேரம் கொடுக்கணும். ஏன்னா, காசு பணத்தைவிட நாம சொல்லித்தர்ற நல்ல விஷயங்களும் கத்துத்தர்ற கலையும் கல்வியும்தான் அவங்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும். கார்த்தி பொண்ணுக்கு இரண்டரை வயசுதான் ஆகுது. இப்பவே, 'உங்க லேப்டாப் பாஸ்வேர்டு என்னம்மா?’னு கேட்குது. யு-டியூப் எல்லாம் தெரிஞ்சிருக்கு. அதனால எது சரி, எது தப்புனு சொல்லிக்கொடுத்துதான் கொண்டுபோகணும். எனக்கு நல்ல நட்பு வட்டம் அமைஞ்சதாலதான், என்னால வெளியுலகத்தைப் புரிஞ்சுக்க முடிஞ்சுது. அதனால ரொம்ப ஜாக்கிரதையா இருக்கவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், அவங்களோட ஃப்ரெண்ட்ஸ். ஏன்னா அவங்க பாதிப்புதான் இவங்க செயல்பாடுகள்ல அதிகம் பிரதிபலிக்கும்!''