Published:Updated:

நானும் ரௌடிதான் - சினிமா விமர்சனம்

நானும் ரௌடிதான் - சினிமா விமர்சனம்

நானும் ரௌடிதான் - சினிமா விமர்சனம்

'நானும் ரௌடிதான்’ என உதார் சீன் போட்டுக்கொண்டிருக்கும் ஒருவன், ஒரு காதலுக்காக நிஜமாகவே ரௌடியானால்..?!

அம்மாவுக்கு, விஜய் சேதுபதியை போலீஸ் ஆக்கவேண்டும் என ஆசை. ஆனால், கெட்ட போலீஸாக இருப்பதைவிட நல்ல ரௌடியாக இருக்கலாம் என்பது விஜய் சேதுபதி பிளான். பெற்றோரைக் கொன்ற ரௌடி பார்த்திபனைப் பழிவாங்கத் துடிக்கிறார் நயன்தாரா. இவரைக் கண்டதும் விஜய் சேதுபதிக்குக் காதல். ஆனால், பார்த்திபனைக் கொன்றால் மட்டுமே தன் காதல் கிடைக்கும் என நயன் டீல் போட, விஜய் சேதுபதி என்ன செய்தார், பார்த்திபன் என்ன ஆனார் என்பது காமெடி மிக்ஸர் க்ளைமாக்ஸ்!

நானும் ரௌடிதான் - சினிமா விமர்சனம்

ஆரம்பம் முதல் இறுதி வரை காமெடி பரேடு. சீன் பிடிப்பதைவிட நச்சுகிச்சு வசனங்களால் சாதா சீனைக்கூட ஸ்பெஷல் ஆக்கியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு சபாஷ். விஜய் சேதுபதி-நயன்தாரா இடையிலான அந்த 'பிராண்ட் நியூ லிப்லாக் உரையாடலுக்கு’ இன்னொரு சபாஷ்!

சின்ன இடைவேளைக்குப் பிறகு ஃபுல் ஃபார்ம் விஜய் சேதுபதி. 'சம்பவம் நடக்கிறப்ப யாரும் குறுக்கப் பேசக் கூடாது’ என ரௌடி பந்தாவுடன் உலாத்துவதும், 'பேபி... ஆர் யூ ஓ.கே.?’ என நயனிடம் கிறங்குவதும், அதகள க்ளைமாக்ஸில் பார்த்திபனிடம், 'ஸ்டெடியா நில்லுங்க சார். கண்டிப்பா குத்திடவா!’ என உளறுவதுமாக... செம வாத்தியாரே! 'நயன்தாரா இவ்ளோ அழகா... நயன்தாரா இவ்ளோ திறமைசாலியா?!’ என காட்சிக்குக் காட்சி அசரடிக்கிறார். 'யார்கிட்டயும் சொல்லிராதீங்க’ என கொஞ்சிக் கெஞ்சுவதும், டைட் டி-ஷர்ட் - ஸ்கர்ட்களிலேயே (தீபாவளி ஹாட் ஃபேஷன் நயன் ஸ்கர்ட்!) கொள்ளை அழகைக் கொட்டுவதுமாக... பின்னிட்டீங்க நயன். அதுவும் 'இதழ் முத்த க்ளோஸப் காட்சி’யில் உதட்டு அசைவுகளிலேயே அபிநயங்களைக் கொட்டியிருக்கும் அந்த க்யூட்னெஸ்... சான்ஸே இல்லை!

காமெடி சரவெடி வெடித்திருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. பச்சை வேட்டிக் கட்டிக்கொண்டு, 'நான் ஸ்கெட்ச் போடுவேன்...

நீ அவனைப் போடுவ. அப்புறம்...’ என்ற அதகளம் முதல் 'இது அட்டகாசப் புலி... ஆவேசப் புலி...’

நானும் ரௌடிதான் - சினிமா விமர்சனம்

என சைடு கேப் டிரெண்டிங் வரை தெறி காமெடி. பார்த்திபன் ஒரு பக்கம் தௌசண்ட் வாலா வெடிக்க, ஆனந்த்ராஜும் மன்சூரலிகானும் மறுபக்கம் மத்தாப்பு கொளுத்துகிறார்கள்.

படம் முழுக்க காமெடி களேபரங்கள்தான். ஆனால், அதை எல்லாம் ரசிக்க லாஜிக்கை லக்கேஜாக நினைத்து தியேட்டர் வெளியிலேயே விட்டுவர வேண்டும் என்பதுதான் நெருடல். பின்பாதி நீளத்தை, யோசிக்காமல் குறைத்திருக்கலாம். 'நானும் ரௌடிதான்...’ பாடலில் அதிரவும், 'தங்கமே...’ பாடலில் உருகவும்வைக்கிறது அனிருத் இசை.

பேயைப் பார்த்துப் பம்மிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப்போட்டு மிரட்டி மிரட்டிச் சிரிக்கவைக்கிறான் இந்த ரௌடி!

- விகடன் விமர்சனக் குழு