Published:Updated:

பாண்ட் ஜேம்ஸ் பாண்ட் 007

கார்க்கிபவா

'இதுவரை ஜேம்ஸ் பாண்டாக நடித்த நடிகர்களில் பெஸ்ட் யார்?’ எனக் கேட்டால், கொஞ்சம் உஷாராகப் பதில் சொல்லுங்கள். ஏனெனில், உங்கள் பதிலைவைத்தே உங்கள் வயதைக் கணிக்க முடியும். 'இப்போது இருக்கும் டேனியல் கிரேய்க்தான் பெஸ்ட்’ என்றால், உங்களுக்கு வயது 25 வயதுக்கும் கீழ். 'அவர் வெறும் ஆக்‌ஷன் சீன். பாண்ட் என்றால் ஸ்டைலிஷ் பியர்ஸ் பிராஸ்னன்தான்’ என்றால் உங்கள் வயது 25-35. ' 'லைசென்ஸ் டு கில்’தான் பெஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் படம். டிமோதி டால்டனை அடிச்சுக்கவே முடியாது’ என்றால்... நீங்கள் ரொம்ப சீனியர்!   

நடிகர்கள் மாறுகிறார்கள்; ரசிகர்கள் தங்கள் ஆதர்ச பாண்டுக்காக வரிந்துகட்டி விவாதம்செய்கிறார்கள். ஆனால், தலைமுறைகள் தாண்டியும் தலைப்புச்செய்தியாக இருக்கிறார் ஜேம்ஸ் பாண்ட். அதுதான் பாண்டின் வெற்றி!

பாண்ட் ஜேம்ஸ் பாண்ட் 007

இதுவரை 23 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளிவந்திருக்கின்றன. 24-வது படமாக வெளிநாடுகளில் வெளியாகி லைக்ஸும் விமர்சனங்களும் குவித்துக் கொண்டிருக்கிறது 'ஸ்பெக்டர்’. மற்ற நாடுகளில் கொஞ்சம் லேட் ரிலீஸ். அதுவும் இந்தியாவில் தீபாவளிக்குப் பிறகு ரொம்பவே தாமதமாக வெளிவரும். 'அது ஏன் இந்தியாவுக்கும் மட்டும் பாரபட்சம்?’ என்போர், சல்மான் கான் சட்டையைப் பிடியுங்கள். அவருடைய தீபாவளி ஸ்பெஷல் ரிலீஸ், 'ப்ரேம் ரதன் தன் பாயோ’. சல்லு பாயின் படம் வந்தால் சுனாமிபோல எல்லா அரங்குகளையும் கபளீகரம்செய்வது வழக்கம். அதனால் ஜேம்ஸ் பாண்டைக் கொஞ்சம் பொறுத்து திரை இறக்குகிறார்கள்!

'ஸ்பெக்டர்’ படத்தை இயக்கி இருப்பவர் சாம் மெண்டிஸ். முந்தைய ஜேம்ஸ் பாண்ட் சினிமா 'ஸ்கைஃபாலை’யும் இவர்தான் இயக்கியிருந்தார். ஜேம்ஸ் பாண்ட் படங் களிலேயே அதிக வசூல் குவித்தது 'ஸ்கைஃபால்’ தான். 'ஸ்பெக்டர்’ படத்துக்காக நான்காவது முறையாக பாண்ட் அவதாரம் எடுத்திருக்கிறார் டேனியல் கிரேய்க். சில மாதங்களுக்கு முன்புவரை இதுதான் டேனியலின் கடைசி பாண்ட் படம் என செய்திகள் வெளியாகின. ஒரு பேட்டியிலும் 'இப்போதைக்கு இன்னொரு ஜேம்ஸ் பாண்ட் படம் இல்லை என்றுதான் நினைக்கிறேன்’ எனச் சொல்லியிருந்தார் டேனியல் கிரேக். ஆனால், அவர் வேண்டாம் என்றாலும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகள் அவரை விடுவது இல்லை. அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்துக்கும் டேனியல் ஒப்பந்தமாகிவிட்டதாகத் தகவல்கள்!

பாண்ட் ஜேம்ஸ் பாண்ட் 007

ஆக்‌ஷனுக்கு நிகராக ரொமான்ஸிலும் முத்திரை பதிக்கவேண்டிய பிரஷர் பாண்டுக்கு. அதனாலேயே ஒவ்வொரு முறையும் ஏக தேடல்களுக்குப் பிறகு 'பாண்ட் கேர்ள்’ யார் என்பதை இறுதிசெய்வார்கள். இந்த முறை அந்த வாய்ப்பு பிரெஞ்ச் நடிகை லே செடூ (Lea seydoux)- ஸுக்குக் கிடைத்திருக்கிறது. போனஸாக இன்னொரு கேர்ளுக்கும் வாய்ப்பு தந்திருக்கிறது ஸ்பெக்டர். அவர்... இத்தாலிய நடிகை மோனிகா பெல்லுச்சி. உலக சினிமா ரசிகர்களுக்கு மோனிகா செம ஹாட் பரிச்சயம். அந்த அளவுக்கு 'மெலினா’ படத்தில் கிறங்கடித்திருப்பார் கெத்து அழகி. 50 வயதானாலும் ரொமான்ஸ் குயின் என்பதால் மோனிகா ரசிகர்களும் பாண்ட் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

பாண்ட் ஜேம்ஸ் பாண்ட் 007

சோனி நிறுவனத்தின் கணினிகளை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள். அப்போது 'ஸ்பெக்ட்ரம்’ கதையும் லீக் ஆனது. ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எப்போதும் இயான் ஃப்ளெமிங் எழுதிய நாவலை அடிப்படையாகக்கொண்டே எடுக்கப்படுகின்றன. அந்த வரிசையில் ஸ்பெக்டரின் மூலம் 'தண்டர்பால்’ எனும் நாவல்தான். 'கதையில் என்ன இருக்கிறது? பாண்ட் படத்தின் சிறப்பே அதன் மேக்கிங்தான்’ என்ற சாம் மெண்டிஸ், 'கதைக்கான என் ட்ரீட்மென்ட் நிச்சயம் ரசிகர் களை ஈர்க்கும்!’ என்கிறார் கெத்தாக.

பாண்ட் ஜேம்ஸ் பாண்ட் 007

டெக்னாலஜி வளராத காலத்தில் விதவிதமான கார்கள், துப்பாக்கிகள் என மாயாஜால வித்தை காட்டி வந்த ஜேம்ஸ் பாண்டுக்கு இப்போது நிஜ சவால். வெறும் அதிரடி ஆக்‌ஷன் மட்டுமே என்றால் கலக்கிவிடலாம். ஆனால், அது பாண்ட் டச் கிடையாதே. அதனால் உலகின் அதி தீவிர சாகச சவால்களை பாண்டுக்கு இலக்காக வைக்கிறார்கள். அதே சமயம் நான்கு முறை பாண்டாக அதகளப்படுத்தினாலும் டேனியல் கிரேய்க் மீதும் குற்றம்சாட்டுகிறார்கள். 'பெண்களை பாண்ட் கையாளும் விதமே அலாதியானது. அது டேனியலிடம் இல்லை’ என்கிறார்கள்.

ம்க்கும்... எந்த ஹீரோவும் செய்யாத ஆக்ஷன் சாகசங்களைச் செய்யச்சொல்லி பெண்டு எடுத்துவிட்டு, 'ரொமான்ஸ் ஃபீல் கம்மி’ என்றால், அவரும் பாவம் என்னதான் செய்வார்! 

பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா!

பாண்ட் ஜேம்ஸ் பாண்ட் 007

உலகில் அதிகம் சம்பாதித்த பட வரிசைகளில் ஜேம்ஸ் பாண்டுக்கு மூன்றாவது இடம். இதுவரை 23 படங்களில் 6 பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களை அள்ளி இருக்கிறார் ஜேம்ஸ் பாண்ட். திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் இசை ஆல்பங்கள், வீடியோ கேம்ஸ், பாண்ட் உடைகள் என பல வழிகளில் ஜேம்ஸ் பாண்ட் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்.

50 வயதில் கிடைத்த அதிர்ஷ்டம்

பாண்ட் ஜேம்ஸ் பாண்ட் 007

பியர்ஸ் பிராஸ்னன் பாண்டாக நடித்த 'டுமாரோ நெவர் டைஸ்’ 1997-ம் ஆண்டில் வெளியானது. அந்தப் படத்திலேயே பாண்ட் கேர்ள் ஆக நடிக்க கடைசிக்கட்ட ஆடிஷன் வரை சென்றவர் மோனிகா பெல்லுசி. ஆனால், வாய்ப்பு கை நழுவியது. 32-வது வயதில் தவறிப்போன வாய்ப்பு, 50-வது வயதில் கிடைத்திருக்கிறது. வயதானாலும் மோனிகாவின் ஸ்டைல் தனிதான் என்பதால், காதலிலும் ஆக்‌ஷனிலும் கலக்குவார் என முஷ்டி முறுக்குகிறார்கள் அவருடைய ரசிகர்கள்!

'ஸ்பெக்டர்’... என்ன விசேஷம்?

பிரபல ரெஸ்லிங் வீரர் படிட்ஸ்டா 'ஸ்பெக்டர்’ படத்தில் நடிக்கிறார். உலகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ரெஸ்லிங் வீரர்களுக்கு மவுசு உண்டு. அதைத் தங்களுக்குச் சாதகமாக்கியிருக்கிறது 'ஸ்பெக்டர்’ டீம்.

மெக்ஸிகோவில் நடக்கும் பேய்த் திருவிழா பிரமாண்டமாக இருக்குமாம். அங்கு வைத்து ஆக்ஷன் காட்சிகளைப் பரபரக்கவைத்திருக்கிறார்கள்.  அமானுஷ்ய காட்சிகளுடன் ஜேம்ஸ் பாண்டின் சாகசமும் சேர்ந்து வித்தியாச அனுபவமாக இருக்குமாம்.

ரோம் நகரில் இருக்கும் டைபர் நதியின் கரையில் நடக்கும் கார் சேஸிங் இதுவரையிலான பாண்டு பட கார் சேஸிங்குகளை பீட் செய்யுமாம். ஜாகுவர் நிறுவனத்தின் பவர்ஃபுல் மாடலான Jaguar C-X75  முதன்முறையாக ஆக்ஷன் அட்டகாசங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை இந்த மாடல் கார்கள் விற்பனைக்கு வரவில்லை!