Published:Updated:

“ஸ்ரீதிவ்யா மட்டும்தான் பிடிக்கும்!”

ஆ.விஜயானந்த்

''ஆக்ஷன் த்ரில்லர்ல, நின்னு நிறுத்தி நிதானமா விளையாட 'ஈட்டி’ படத்துல ஏகப்பட்ட ஸ்கோப் இருக்கு. ஸ்போர்ட்ஸை மையமாவெச்சு தடதடனு நகரும் கதையில், ஒரு தடை தாண்டும் தடகள வீரனா என் பெஸ்ட் கொடுத்திருக்கேன். என் கரியர்ல 'ஈட்டி’க்கு செம ஷார்ப்பான இடம் உண்டு'' - நிதானமாகவே பேசுகிறார் அதர்வா. 

''தடை தாண்டும் தடகள வீரர் அனுபவம் எப்படி இருந்தது?''

'நாகராஜ் மாஸ்டர்தான் பயிற்சி கொடுத்தார். காமன்வெல்த் போட்டிகளில் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம் ஜெயிச்சுக் கொடுத்தவர் நாகராஜ். சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் நாம வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றக் காரணமா இருந்தவர். சர்வதேசப் போட்டிகளில் ஜெயிச்சவங்களோடதான் எனக்கும் பயிற்சி கொடுத்தார். நான் ஃபுட்பால் நல்லா விளையாடுவேன். ஹர்டில்ஸ் பார்க்கும்போது, 'ஈஸியா இருக்கே’னு தோணுச்சு. பயிற்சியின்போதுதான் அதோட கஷ்டம் புரிஞ்சது. நிறைய அடிபட்டேன். பல மாதங்கள் இதே நிலைமைதான்.'

 “ஸ்ரீதிவ்யா மட்டும்தான் பிடிக்கும்!”

''சிக்ஸ்பேக் வெச்சிருக்கீங்க... ஒரே நேரத்தில் தடை தாண்டும் பயிற்சி, ஜிம் பயிற்சி... கஷ்டமா இல்லையா?''

'ஆரம்பத்தில் ரொம்பவே திணறிட்டேன். தினமும் காலை 4 மணியில் இருந்து 6 மணி வரைக்கும் பாடி பில்டிங் பயிற்சி. 9 மணி வரை ஹர்டில்ஸ் பயிற்சி... அப்படியே ஷூட்டிங் போயிடுவேன். ஆரம்பத்துல எனக்கு சிக்ஸ் பேக் பிடிக்கலை. முகத்துல அடிபட்டு முகமே மாறிப்போயிருச்சு. சிக்ஸ்பேக் முயற்சிகள்ல உடம்புல நிறையப் பிரச்னைகள் வரும். நீங்க ஸ்கிரீன்ல பார்க்கிறது கடைசி முயற்சிக்குப் பிறகு வந்த உடம்பு. ரொம்பவும் பிரேக் விட முடியலை. இப்ப அதுவே பழக்கமாகிருச்சு. சாப்பாடு, சப்பாத்தின்னு நான் எதுவும் சாப்பிடாம இருந்ததுல, என் அம்மா ரொம்பவே அப்செட் ஆகிட்டாங்க. கடைசியில 'என்னவோ பண்ணு’னு சொல்லி விட்டுட்டாங்க'.

''அவ்வளவு கடுமையான டயட்டா?''

'ஆமாம்... ஒரு வருஷம் முழுக்க வேகவெச்ச புரோட்டீன்தான் சாப்பாடு. காலையில் பழங்கள், முட்டையின் வெள்ளைக் கரு, காய்கறிகள். மதியம் வேகவெச்ச மீன், சிக்கன். திரும்பவும் இரவுக்கு சிக்கன். அரிசி, சப்பாத்தி இதெல்லாம் வாய் கிட்டத்துல கொண்டுபோகவே கூடாது. அப்படிச் சாப்பிட்டா, சிக்ஸ்பேக் கலைஞ்சுடும். சிக்ஸ்பேக் கொண்டுவர்றதுக்காக மெடிசின் எதுவும் பயன்படுத்தக் கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருந்தேன். ஷூட்டிங் முடிஞ்சதும் நரேன் சார், 'தோசை சாப்பிடு’னு சொன்னார். நானும் ஆசையில சாப்பிட்டேன். ஆனா, வயித்துக்குள்ள தோசை இறங்கவே இல்லை. சிக்ஸ்பேக் வெச்சா, தண்ணி கொஞ்சமாத்தான் குடிக்கணும். தண்ணி குடிக்கலைன்னா, ஹர்டில்ஸ் பயிற்சி பண்ண முடியாது. ரெண்டையும் பேலன்ஸ் பண்றதுக்குள்ள ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன்.''

 “ஸ்ரீதிவ்யா மட்டும்தான் பிடிக்கும்!”

''இவ்வளவு கஷ்டப்படுறீங்க... ஆனா சமீபத்திய உங்க படங்கள் எதிர்பார்த்த அளவுக்குப் போகலையே..?''

'ஒவ்வொரு படம் பண்ணும்போதும் நான் கடுமையா உழைக்கிறேன். என் வேலையை முழு அர்ப்பணிப்போடு பண்றேன். 'சண்டிவீரன்’ படத்துல என் இயல்பான நடிப்பைப் பலரும் பாராட்டினாங்க. பாலா சார் எனக்கு காட்ஃபாதர் போல. எனக்குள் இருந்த நடிகனைச் செதுக்கி ஒழுங்குபடுத்தினவர். 'ஈட்டி’ டிரெய்லர் பார்த்துட்டு ரொம்பப் பாராட்டினார். 'முழுப் படத்தைப் பார்க்க ஆர்வமா இருக்கேன்’னு சொன்னார்'.

''உங்க செட் ஹீரோக்கள் எல்லாம் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டாங்க... உங்க கல்யாணம் எப்போ?''

'எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற ஆர்வம் துளிக்கூட இல்லை. அப்படியே நடந்தா, அது நிச்சயம் லவ் மேரேஜ்தான். உடனே 'யாரை லவ் பண்றீங்க?’னு கேட்காதீங்க. இப்போதைக்கு சினிமா மேல மட்டும்தான் சின்சியர் லவ்.'

 “ஸ்ரீதிவ்யா மட்டும்தான் பிடிக்கும்!”

'' 'ஈட்டி’ பட ஹீரோயின் ஸ்ரீதிவ்யா என்ன சொல்றாங்க?''

'அவங்க எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட். எதிர்காலத்துல அவங்ககூட இன்னொரு படம் பண்ணுவேன். அவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இப்ப இருக்கும் இளம் ஹீரோயின்கள்ல ஸ்ரீதிவ்யாவை மட்டும்தான் பிடிக்குது.'

''அட... அப்படியா விஷயம்?''

' ஹா... ஹா... ஒரு நல்ல கோ ஸ்டார்னு மட்டும் புரிஞ்சுக்கங்க. இப்போதைக்கு அது போதும்!''

அடுத்த கட்டுரைக்கு