Published:Updated:

“வாய்யா என் வீரா!”

பா.ஜான்ஸன், படம்: சொ.பாலசுப்ரமணியன்

'காஞ்சனா 2’, 'கோ 2’ படப் பாடல்கள் என, சமீப சினிமாக்களில் சிக்ஸர் அடிக்கிறார் இளம் இசை அமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். நுங்கம்பாக்கம் ஸ்டுடியோவில் கம்போஸிங்கில் இருந்தவரிடம், 'யார் பாஸ் நீங்க?’ என இன்ட்ரோ கேட்டோம். 

''நான் ஒரு கீபோர்டு ஆர்ட்டிஸ்ட். நாலு வயசுல இருந்தே கீபோர்டு வாசிக்கிறேன். வீட்டுல எப்பவும் மியூஸிக் ஒலிக்கும். அப்பா நோயல் ஜேம்ஸ், ஒரு சிங்கர். ஏ.ஆர்.ரஹ்மான் சாரோட கோரஸ் சிங்கர்; கிட்டாரும்  வாசிப்பார். ஸ்கூல்ல 'ஸிங்க்ஸ்’னு ஒரு பேண்டு இருந்தது. நிறைய ஸ்கூல், கல்லூரி கல்ச்சுரல்ஸ் இருக்கும். அப்போ 'ஊலலல்லா’னு பேண்டு ஹன்ட் நடந்தது. அதுக்கு ரஹ்மான் சார்தான் நடுவர். எங்களுடைய பேண்டு ஜெயிச்சது. எனக்கு சிறந்த கீபோர்டிஸ்ட்னு விருது கொடுத்தாங்க. அது மூலமா நிறையப் பேருக்கு என்னைத் தெரியவந்தது. பின்னணிப் பாடகர்கள் ஷோ பண்ணும்போது, அதுக்கு கீபோர்டு வாசிப்பேன்.  சந்தோஷ் நாராயணன், தமன், மேட்லி ப்ளூஸ் மாதிரி மியூஸிக் டைரக்டர்களுக்கு செஷன்ஸ் வாசிப்பேன்.

வீட்டுல நானே பாட்டும் ரெடி பண்ணிட் டிருப்பேன். அப்படிப் பண்ணினதுதான் 'வாய்யா என் வீரா’ பாட்டு. சக்திஸ்ரீ கோபாலன் என் க்ளோஸ் ஃப்ரெண்ட். ட்யூன் ரெடியானதும் அவங்ககிட்ட 'பாடுறீங்களா?’னு கேட்டேன். சந்தோஷமா வந்து பாடினாங்க. 'சரி, இதை ஒரு வீடியோவா ரெடி பண்ணி யூடியூப்ல அப்லோடு பண்ணலாம்’னு பண்ணேன். எக்கச்சக்க ரெஸ்பான்ஸ். அதை ராகவா லாரன்ஸ் சார் பார்த்துட்டு, 'காஞ்சனா 2 படத்துக்கு இந்தப் பாட்டைத் தர்றீங்களா?’னு கேட்டார். அந்தப் பாட்டு படத்துல நல்ல ரீச் ஆச்சு. இப்போ 'கோ 2’ படப் பாட்டு ரிலீஸ் ஆகி மறுபடி நல்ல ரீச் கிடைச்சிருக்கு. அடுத்து 'வீரா’னு ஒரு படத்துக்கு மியூஸிக் பண்றேன். பாபி சிம்ஹா நடிக்கிறார்.''

 “வாய்யா என் வீரா!”

'' 'கோ 2’ படம் முழுக்கவே வேற ஊர் பாடகர்கள்தான் இருக்காங்க. நம்ம ஊர் சிங்கர்கள் மேல நம்பிக்கை இல்லையா?''

''ஐயோ... அப்படி இல்லை. இந்தப் பாட்டுக்கு அவங்க வாய்ஸ் நல்லாயிருக்கும்னு தோணுச்சு. 'இன்னொ கிங்கா’னு ஒரு சிங்கர் இருக்கார். ரிலீஸ் ஆகிற தமிழ்ப் பாடல்கள்ல அவருக்குப் பிடிச்சதைப் பாடி யூடியூப்ல அப்லோடு பண்ணுவார். அப்போ இருந்தே அவரைக் கவனிச் சிட்டிருந்தேன். அவர் ஒரு முறை சென்னை வந்தப்போ, பாடவெச்சேன். 'சலீம் மெர்ச்சென்ட்’னு பாலிவுட்ல பெரிய மியூஸிக் டைரக்டர். கண்ணம்மா பாட்டு பாடினார். விஷால் தத்லானி, நீத்தி மோகன் எல்லாருமே அப்படித்தான் இதுக்குள்ள வந்தாங்க.''

''நிறைய புதுப்புது இசையமைப்பாளர்கள் வர்றாங்க. நிறைய ஹிட் பாடல்கள் தர்றாங்க. போட்டியை எப்படிச் சமாளிக்கிறீங்க?''

''யாரும் யாருக்கும் போட்டி இல்லை. எல்லோருமே ஒருத்தருக்கு ஒருத்தர் நண்பர்கள்தான். நான் 'காஞ்சனா 2’ல ஃபிக்ஸ் ஆனதும், 'லியோன் சினிமாவுக்கு வர்றார். அவரை வாழ்த்துங்க’னு ஃபேஸ்புக், ட்விட்டர்ல வாழ்த்தினது அனிருத். நான், சந்தோஷ் நாராயணன், விவேக் மெர்வின், ஷான் ரோல்டன், நிவாஸ் கே பிரசன்னா எல்லாருமே நட்போடு இருக்கோம். நீங்க இங்கே நிலைக்கணும்னா, மத்தவங்களோடு போட்டி போடக் கூடாது. உங்க பெஸ்ட்டைக் கொடுக்கணும். எனக்கு இப்போ 23 வயசு. என்னைப் பற்றி சொல்லிக்க என்கிட்ட ஒண்ணுமே இல்லை.''

''உங்க பாட்டுக்கு வந்த பெஸ்ட் கமென்ட் என்ன?''

''ரஹ்மான் சார் சொன்னதுதான். அவர்கிட்டதான் என் அப்பா இருந்தாருங்கிறதால, ரஹ்மான் சாரை நிறையத் தடவை சந்திச்சிருக்கேன். 'வாய்யா என் வீரா’ வந்தப்போ 'பாட்டு நல்லாயிருக்கு’னு வாழ்த்திட்டு, 'மியூஸிக்ல என்னல்லாம் பண்ணலாம்?’னு நிறையப் பேசினார். எனக்கு ரஹ்மான் சாரும், ராஜா சாரும்தான்  எப்பவுமே பெரிய இன்ஸ்பிரேஷன்ஸ்!''

''மியூஸிக்ல புதுசா என்ன பண்ணணும்னு ஆசை?''

''உலகம் முழுக்க இருக்கும் திறமையான எல்லா சிங்கர்களையும் என் இசையில் பாடவைக்கணும். புதுப்புது முயற்சிகள், பரிசோதனைகள் பண்ணணும். எனக்கு இருக்கிற ஒரே வருத்தம், இப்போ அப்பாவால பாட முடியலை. இல்லைன்னா, அவரை என் மியூஸிக்ல பாடவெச்சிருப்பேன்!''

அடுத்த கட்டுரைக்கு