Published:Updated:

“பாதை தெரியாதபோதுதான்,பயணம் சுவாரஸ்யமாக இருக்கும்!”

ம.கா.செந்தில்குமார், படம்: கே.ராஜசேகரன்

''கொஞ்ச நாளா படங்கள் பார்க்கிறதையே நிறுத்திட்டேன். ஏன்னா, எல்லாமே ஏற்கெனவே பார்த்த மாதிரியே இருக்கு. இதோ நான் வாங்கி வெச்ச ஃபாரின் பட டி.வி.டி-க்கள் எல்லாம் அப்படியே இருக்கு. பார்ப்பதில் ஒண்ணும் தப்பு கிடையாது. ஆனா, அதோட தாக்கம் நான் பண்ற படங்கள்ல எட்டிப்பார்த்திருமோனு எனக்குள்ள ஒரு பயம். அந்தப் படங்களைப் பார்க்கிறதுக்குப் பதிலா சும்மா இப்படி உட்கார்ந்து வெட்டவெளியைப் பார்த்துட்டு இருந்தாக்கூட பரவாயில்லைனு தோணுது!'' - பி.சி... இனிஷியல் சொன்னதும் கம்பீரமும் மரியாதையும் ஒருங்கே உண்டாகும் மிகச் சிலரில் ஒருவர். தேர்ந்த ஒளிப்பதிவாளர், ரசனைக் கலைஞன், ஆப்த ரசிகன். 

''பால்கியோடு மட்டுமே தொடர்ந்து டிராவல் பண்ண என்ன காரணம்?''

''நான் இந்திக்குப் போகணும்னு ஒருநாளும் ஆசைப்பட்டதே கிடையாது. பால்கிதான் அந்தப் பக்கம் அழைச்சுட்டுப் போனார். 'சீனிகம்’, 'பா’, 'ஷமிதாப்’னு அடுத்தடுத்து படங்கள் பண்ணினோம். மத்தவங்க எப்படினு தெரியாது. எனக்குனு சில விஷயங்கள் இருக்கு. ஒரு சமயம் நானும் மணியும் நிறையப் படங்கள் பண்ணோம். அது மாதிரிதான் இதுவும். இப்போ அடுத்து நான் யாருக்குப் பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. திரும்ப இன்னொரு இந்திப் படம் பண்ணுவேனானும் தெரியாது. ஒருவேளை பால்கி கூப்பிட்டா, போகலாம். ஆனா, என்னைப் பொறுத்தவரை கதையும் களமும் புதுசா இருக்கணும்!''

 “பாதை தெரியாதபோதுதான்,பயணம் சுவாரஸ்யமாக இருக்கும்!”

'''ஷமிதாப்’ சரியாப்போகலைனுதான் நீங்களும் பால்கியும் அடுத்த படத்தை உடனே ஆரம்பிச்சீங்களா?'

''இல்லை... அப்படி யோசிக்கவே கூடாது. 'ஷமிதாப்’ பெரிய வரவேற்பைப் பெறலைங்கிறது உண்மைதான். ஆனா, எங்க எல்லாருக்கும் ரொம்ப நல்ல பேர் கொடுத்தது. தனுஷ§க்கு 'நல்ல நடிகர்’னு தேசிய அங்கீகாரம் கிடைச்சது. அந்த அளவுக்கு மகிழ்ச்சி. உடனே இன்னொரு படம் பண்ணணும்னு பால்கிக்கோ எனக்கோ, எப்பவும் எந்த அவசரமும் இல்லை. ஆனா, பால்கி சொன்ன இந்தக் கதை ரொம்ப நல்லா இருந்தது. அதான் உடனே வேலையை ஆரம்பிச்சுட்டோம். 50 நாட்கள்ல மொத்தப் படத்தை முடிச்சிட்டோம்னா பாருங்களேன். படம் பேர் 'கி அண்ட் கா’. மார்ச் மாசம் ரிலீஸ்!''

'' 'கி அண்ட் கா’ - பெயரே வித்தியாசமா இருக்கே, என்ன ஸ்பெஷல்?''

''இது நேரா கல்யாணத்துல ஆரம்பிக்கிற ஒரு காதல் கதை. ஹ்யூமர் லவ் ஸ்டோரி. ரொம்பச் சின்ன லைன்தான். ஆனா, அதில் அழகழகா அவ்வளவு விஷயங்கள் இருக்கு. அதை பால்கி தன் ஸ்டைல்ல சொல்லியிருக்கார். கரீனா கபூர், அர்ஜுன் கபூர், கரீனாவின் அம்மானு படத்துல மொத்தமே மூணு கேரக்டர்கள்தான். இவங்களைச் சுத்திதான் மொத்தப் படமும். முழுக்க டெல்லியில் நடக்கும் கதை. ராஜா சார் இசை.''

''ராஜாவும் நீங்களும் இல்லாம பால்கி படமே பண்ண மாட்டார் போலிருக்கே?''

''ராஜா சார் எவ்வளவோ படங்கள் பண்ணியிருந்தாலும் அவரின் பெஸ்ட் பேக்ரவுண்ட் ஸ்கோர் 'ஷமிதாப்’தான். அதில் பாடல்களும் அட்டகாசம். தன் கதைக்கு பின்னணி இசை அவ்வளவு முக்கியம்னு பால்கி நினைப்பார். அவர் கதைக்கு அது ரொம்பத் தேவை; அதுக்கு ராஜா சார் தேவை. பால்கி, தன் கதையை ராஜா இல்லாம எடுக்கவே மாட்டார். அது ஒரு பயணம்.''

''கரீனா, அங்கே கமர்ஷியலா படங்கள் பண்றவங்க. பால்கி, பொயட்டிக்கா படம் பண்றவர். 'கி அண்ட் கா’வுல அவங்க எப்படி?''

 “பாதை தெரியாதபோதுதான்,பயணம் சுவாரஸ்யமாக இருக்கும்!”

''அவங்க வேற சினிமா பண்ணிட்டு இருந்தவங்க, ஒப்புக்கிட்டுத்தானே வர்றாங்க. இதனால எவ்வளவு மைலேஜ் கிடைக்கும்னு அவங்களுக்குத் தெரியும். திடுதிப்னு வேற ஒரு பரிமாணம் கிடைச்சதுன்னா... அதெல்லாம் புரிஞ்சுதானே வர்றாங்க. இதுல அவங்களுக்கு எக்ஸ்ட்ரா மேக்கப்பே கிடையாது. கதைக்கு ஏற்ற மினிமம் மேக்கப்தான். வேற மாதிரி வெளிப்பட்டிருக்காங்க. பார்க்கும்போது உங்களுக்கே அந்த வித்தியாசம் தெரியும்.''

''ட்விட்டர்ல வந்த 'ஷமிதாப்’ விமர்சனத்துக்கு கடுமையா ரியாக்ட் பண்ணியிருந்தீங்களே?''

''அது என் தப்புதான். அந்த விமர்சனத்துக்கு குழந்தைத்தனமா உடனே ரியாக்ட் பண்ணிட்டேன். எல்லா படத்துக்கும் உயிரைக் கொடுத்துதான் வேலைசெய்றோம். 'ஷமிதாப்’ இன்னும் கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல். அதான் கொஞ்சம் அப்செட்ல இருந்தேன். அந்த டைம்ல நிறைய விமர்சனங்கள் வந்துச்சு. ஆனா, அந்தக் குறிப்பிட்ட விமர்சனம் ஏன்னு தெரியலை... என்னை ரொம்ப அப்செட் பண்ணிடுச்சு. அந்த விமர்சகர் மேல எனக்கு எந்தத் தவறான அபிப்பிராயமும் கிடையாது. அப்போ ட்விட்டர் கணக்கைக்கூட க்ளோஸ் பண்ணிட்டேன். 'ஏன் அப்படி ரியாக்ட் பண்ணிணோம்?’னு பிறகு யோசிச்சுப்பார்த்து வருந்தினேன்.''

''தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்கள் வந்துவிட்டனர். எல்லா படங்களிலுமே ஒளிப்பதிவு செமத்தியா இருக்கு. இது நிறையப் போட்டியை உருவாக்குகிறதா?''

''நிறையப் பேர் வந்தாலும் விஷயம் தெரிஞ்சவங்களுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கு. அதைக் கண்ணெதிரே நான் பார்க்கிறேன். ஆழ உழுபவர்களுக்குத்தான் நல்ல விளைச்சல், நல்ல எதிர்காலம் இருக்கும். ஒளிப்பதிவில் மட்டுமா... இயக்கம் உள்பட எல்லாத்திலும் இந்தச் சவால் இருக்கு. சினிமா இல்லாட்டியும்கூட குறும்படங்கள், ஆவணப்படங்கள், விளம்பரப் படங்கள்னு போயிடுறாங்க. இங்க இல்லைன்னா, மும்பை போறாங்க. ஒரே விஷயம்தான், திறமையும் கத்துக்கணும்கிற ஆர்வமும் இருக்கிறவங்களை நீங்க ஒண்ணும் பண்ண முடியாது. அவங்க மேல மேல வந்துட்டேதான் இருப்பாங்க.''

 “பாதை தெரியாதபோதுதான்,பயணம் சுவாரஸ்யமாக இருக்கும்!”

''இளம் ஒளிப்பதிவாளர்கள்கிட்ட உதவியாளரா சேரவே கூட்டம் அலைமோதும். உங்ககிட்ட அது இன்னும் ரொம்ப அதிகமா இருக்கும். எப்படிப்பட்ட இளைஞர்கள் வர்றாங்க?''

கேள்வியை முடிக்கும் முன்பே, 'நரேஷ்... நரேஷ்’ என அழைக்கிறார். ஓர் இளைஞர் வந்து நிற்க, ''இவரை நேத்திக்குத்தான் எடுத்திருக்கேன். திரைப்படக் கல்லூரியில் படிச்சவர். மத்தபடி இவர் யாருன்னே எனக்குத் தெரியாது. ஏதோ ஒரு உள்ளுணர்வு... அவ்வளவுதான். ஆனால், இப்ப அவ்வளவா அசிஸ்டென்ட்ஸ் எடுத்துக்கிறது இல்லை!''

''நீங்க ஃபிலிம் ரோல்ல கடைசியா பண்ணின படம் 'ஐ’. ஃபிலிம்ல பண்ணின அந்த உயிர்ப்பு இப்ப டிஜிட்டல்ல வொர்க் பண்ணும்போது இருக்கா?''

 “பாதை தெரியாதபோதுதான்,பயணம் சுவாரஸ்யமாக இருக்கும்!”

''ஃபிலிமுக்கு 100 வருஷப் பாரம்பர்யம் இருக்கு... டிஜிட்டல் இப்பதானே வந்திருக்கு. ஆனா, வந்ததும் விஸ்வரூப வளர்ச்சி. நான் ஃபிலிமோடயே வளர்ந்தவன். ரொம்ப டைமாகும்னு நினைச்சு டிஜிட்டலைத் தள்ளிப்போட்டுட்டே வந்தேன். ஆனா, இவ்வளவு ஃபாஸ்ட்டா அது நடக்கும்னு எதிர்பார்க்கலை. ஆனாலும் நான் ஃபிலிமோட டிஜிட்டலை ஒப்பிட மாட்டேன். அது தனி, இது தனி. தவிர, பார்வையாளனுக்கு டிஜிட்டல்ல எடுத்தா என்ன... ஃபிலிம்ல எடுத்தா என்ன? அவனுக்குப் பிடிக்கணும். ஆனா, நமக்கு என்ன பிரச்னைனா... எல்லாத்தையும் அதிகப்படியாப் பண்ணிடுவோம். டெக்னாலஜியை எந்த அளவுக்கு நம்பி இருக்கிறோமோ... அதுக்குள்ள உண்மையும் இருக்கணும். டெக்னாலஜி ஒரு வசதி. ஆனா, அதை வெச்சுக்கிட்டு நாமதான் வேற ஒரு விஷயத்தை உருவாக்கணும். அந்த டிஜிட்டலையும் மீறி வெளிப்படணும்கிற பயம் மட்டும் எனக்கு உண்டு.''

''சீனியர் நீங்க, பரபரனு அதே வேகத்தோடு படங்கள் பண்றீங்களே?''

''சீனியர் என்கிற வார்த்தையே வேணாம். நான், எப்பவுமே ஒரு வளரும் கலைஞன். தமிழ், தெலுங்கு, அப்புறம் தமிழ்னு 2017-ம் ஆண்டு வரை டேட்ஸ் கொடுத்துவெச்சிருக்கேன். இப்படி நான் பண்ணினதே கிடையாது. யார் வந்தாலும் கதை பிடிச்சிருந்தா பண்றேன். ஷங்கர் கேட்டார், ஒப்புக்கிட்டேன். மணிரத்னம் கேட்டார், பண்ணினேன். அதே மாதிரி இப்ப பாக்யராஜ் கண்ணன் வந்தார்... கேட்டார். அவரை எனக்கு யாருன்னே தெரியாது. தவிர, யாருன்னு தெரியாம இருக்கும்போதுதான், அதாவது பாதை தெரியாதபோதுதான் அந்தப் பயணம் இன்னும் சுவாரஸ்யமா இருக்கும். அப்படி இது ஒரு புதுப் பயணம். சிவகார்த்திகேயன் படம் பண்றேன் சார்!''

அடுத்த கட்டுரைக்கு