Published:Updated:

குறும்புக்காரன் டைரி

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:

டியர் ஃப்ரெண்ட்ஸ், என் பேரு கிஷோர். நான் செவன்த் ஸ்டாண்டர்டு படிக்கிறேன். ச்சே... முதல் வரியே தப்பா எழுதிட்டேன். நான் எய்த் ஸ்டாண்டர்டு படிக்கிறேன். இன்னிக்கு ஸ்கூல்ல, குழந்தைகள் தின விழா பேச்சுப் போட்டியில பேசப்போறேன்... அந்தப் பதற்றத்துல உளறிட்டேன்.

குறும்புக்காரன் டைரி

இந்த டைரி எழுதுறதுக்கு ஒரு காரணம் இருக்கு. காந்தி தாத்தாவில் ஆரம்பிச்சு, ஜாக்கி சான் வரைக்கும் எல்லாப் பிரபலங்களையும் பேட்டி எடுக்கும்போது, ''நீங்க சின்ன வயசுல பண்ண சேட்டைகள் என்ன?''னு கேட்பாங்க. நானும் வளர்ந்து பெரிய பிரபலம் ஆனதுக்கப்புறம், இதே கேள்வியைக் கேட்கும்போது, ''பாஸ், எனக்குப் பொறுமையா விளக்கிச் சொல்ல டைம் இல்லை. இந்த டைரியைப் படிச்சு நீங்களே தெரிஞ்சுக்குங்க’னு குடுத்துருவேன்.

குறும்புக்காரன் டைரி

இன்னிக்கு முதன்முதலா ஸ்டேஜ்ல பேசப்போறேன். அந்த நினைப்போடு  தூங்கப்போனேன். ஒரு செம கனவு. கிறிஸ்துமஸ் தாத்தா எனக்காகக் கொண்டுவந்த கிஃப்ட்டை என் கையில குடுத்துட்டு, முதுகுல கை வைக்கிறாரு. தீடீர்னு சப்புனு ஒரு அடி. பதறி எந்திரிச்சா, அடிச்சது கிறிஸ்துமஸ் தாத்தா இல்ல, எங்க அண்ணன் லோகேஷ்.

ஹா...ஹா... கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் இவனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தாடி மட்டும்தான் இருக்காது. மத்தபடி, இவனும் தாத்தா மாதிரி குண்டா, உருண்டையா இருப்பான். 'டேய், மணி எட்டாகப்போகுது இன்னுமா தூங்குறே'னு கத்தினான்.

பதறி எந்திரிச்சேன். கடகடனு குளிச்சு ரெடியாகி, படியிறங்கி வரும்போதே, ''அம்மா, ஸ்கூலுக்கு லேட்டாயிடுச்சு. எனக்கு டிஃபன் வேணாம்'னு கத்தினேன்.

வாசல்கிட்ட வரும்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. என் கால் மட்டும்தான் ஓடுது. நான் நகரவே இல்லை. என்னடானு பாத்தா, பின்னாடி அம்மா என் சட்டைக் காலரைப் பிடிச்சுக்கிட்டு நிக்கிறாங்க. 'ஆறு மணிக்கே எங்கடா போற?'னு கேட்டாங்க.

நான் ஷாக் ஆயிட்டேன். நிஜமாவே மணி ஆறுதான். ''அண்ணன்தான் மம்மி சொன்னான்’னு போட்டுக்குடுத்தேன்.

குறும்புக்காரன் டைரி

அவன் ரூமுக்குப் போய்ப் பார்த்தா, இழுத்துப் போர்த்தித் தூங்கிக்கிட்டு இருக்கான். இந்தப் பய படிக்கிற பத்தாம் வகுப்புல, தம்பிய ஏமாத்துறது எப்பிடினு தனிப் பாடமே இருக்கும்போல. 'இருடா... நானும் பத்தாவது படிப்பேன். அப்ப உன்னை ஏமாத்திக் காட்டுறேன்’னு மனசுக்குள்ள சபதம் எடுத்துக்கிட்டேன்.

ஒரு வழியா ஒன்பது மணிக்கு ஸ்கூலுக்கு வந்தாச்சு. எனக்குத் தெரிஞ்சு, மனுஷன் படைச்சதுலேயே உருப்படாத ரெண்டு விஷயம் இருக்கு. ஒண்ணு, ஸ்கூலு. அடுத்தது, என் ஃப்ரெண்டு ஜெகன். இவன் ஆறாவதுல இருந்து என்னோட கிளாஸ்மேட். எனக்கு கிடைச்ச ஒரே அடிமை. நான் என்ன சொன்னாலும் நம்பக்கூடிய ஒரே ஜீவன். எப்பவும் இவன்கூடதான் சுத்தணும்னு ஸ்கூல் என்ட்ரன்ஸ்ல இருக்குற விநாயகர் என் நெத்தியில எழுதியிருக்கார்.

சில சமயம் வீட்டுல வீடியோ கேம் விளையாடிக்கிட்டு இருக்கும்போது, 'இப்பிடி வீட்டுக்குள்ளேயே உக்காந்து கேம் விளையாடாதடா. வெளியில போய் ஃப்ரெண்ட்ஸோட விளையாடு. அப்பதான் ஹெல்த்துக்கு நல்லது'னு அப்பா அட்வைஸ் பண்ணுவார்.

உடனே, ஜெகன் வீட்டுக்குப்போய் வீடியோ கேம்ஸ் விளையாடுவோம். அதுல ஒரு சிக்கல் என்னன்னா, ஜெகன் வீட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு. ஷூட்டிங் கேம்ஸ் விளையாட விட மாட்டாங்க. மொக்கை கார் ரேஸ்தான் விளையாடணும்.

குறும்புக்காரன் டைரி

சரி, சரி ஸ்கூல் மேட்டருக்கு வருவோம். நான் போனப்ப, குழந்தைகள் தின விழாவுக்காக மேடைக்குப் பக்கத்துல, முதல் வரிசையில போட்டியாளர்கள் எல்லாம் எங்கே உக்காரணும்னு சேரில் எழுதி ஒட்டியிருந்தாங்க. என் பேரு இருந்த சேரில் போய் உட்கார்ந்தேன். எனக்குப் பக்கத்துல ஜெகன் உட்கார்ந்தான்.

பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னு, ஜெகன்கிட்ட என்னோட விளையாட்டை ஆரம்பிச்சேன். 'டேய் ஜெகன், தெரியுமா? நம்ம உள்ளங்கையைவிட மூஞ்சி பெருசா இருந்தா, அவங்க முட்டாள்னு அர்த்தமாம், ஒரு புக்குல படிச்சேன்'னு சொன்னேன்.

'அப்பிடியா?’னு கேட்ட ஜெகன், அவனோட முகத்துக்கு நேரே கையைக் கொண்டுவர, பொக்குனு அவன் கையில ஒரு குத்து விட்டேன். முறைச்சான்.

குறும்புக்காரன் டைரி

''ஸாரிடா... சும்மா விளையாட்டுக்குத்தான் பண்ணேன்' என்றேன்.

'பரவாயில்லை விடு, நான் அறிவாளியா... முட்டாளா? அதைச் சொல்லு'ன்னான். ம்ஹூம்... இவனைத் திருத்தவே முடியாது.

என் பேரு வர்ற வரைக்கும் வெட்டியா இருக்க வேணாமேன்னு, டைரியில எழுத ஆரம்பிச்சேன். ஊப்ஸ்ஸ்... என்னைப் பேசக் கூப்பிடுறாங்க, மீதிக் கதையை அப்புறமா சொல்றேன்.

இப்படிக்கு

வருங்கால பிரபலம் கிஷோர்.

                       (டைரி புரட்டுவோம்...)