Published:Updated:

தீமையைக் கழற்று... நன்மையை உடுத்து!

பா.ஜான்ஸன்

''ஒரு ரசிகனா எனக்கு சினிமா ரொம்பப்  பிடிக்கும். குறிப்பா இயக்குநர் சேரனின் 'பாரதி

தீமையைக் கழற்று... நன்மையை உடுத்து!

கண்ணம்மா’, 'பொற்காலம்’ படங்கள் தந்த பாதிப்புல சென்னை கிளம்பி வந்த ஆள் நான். நேரா சேரன் ஆபீஸுக்குப் போய் வாய்ப்பு கேட்டேன், கிடைக்கலை. அடுத்து போய் நின்ன இடம் பாலு மகேந்திரா ஆபீஸ்.  அவர்கிட்டயும் சேர முடியலை. கடைசியா எப்படியோ போராடி ஷங்கர் சார்கிட்ட சேர்ந்தேன். 'அந்நியன்’, 'சிவாஜி’, 'எந்திரன்’னு மூணு படங்கள்ல, சினிமா மேக்கிங் பத்தி நிறையக் கத்துக்கிட்டேன்''  - ஆடம்தாசனின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் அனுபவம் பளிச்சிடுகிறது. ஷங்கர் பட்டறையில் இருந்து வந்திருக்கும் அடுத்த இயக்குநர். படத்துக்கு 'பாம்பு சட்டை’ எனப் பெயர் வைத்துத் திரும்பிப்பார்க்க வைக்கிறார்.

''அது என்ன 'பாம்பு சட்டை’?''

''முதல்ல 'வான் கண்டேன் திசைகண்டேன்’னுதான் தலைப்பு வெச்சிருந்தோம். அப்புறம் இது ரொம்பக் கவிதையா இருக்குன்னு 'பாம்பு சட்டை’ டைட்டில் பிடிச்சோம். மனிதர்கள் எப்பவும் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி தங்களோட முந்தைய குணத்தை கழட்டிப் போட்டுட்டு, புதிய குணத்தை அணிஞ்சுக்குவாங்க. இந்தப் படம் அதைத்தான் பேசுது. அதனால்தான் இந்தத் தலைப்பு.''

''என்ன சொல்லப்போகுது 'பாம்பு சட்டை’?''

''நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம்தான் கதை. ஆனா, அதைச் சொல்றவிதம் வேற மாதிரி இருக்கும். உங்களுக்கு திடீர்னு பணத்தேவை ஏற்படுது. உங்க நண்பர் ஒருத்தர்கிட்ட கேக்கிறீங்க... அவரும் உதவுறார். அதை எடுத்துக்கிட்டு உங்க தேவையை நிறைவேற்றப்போற இடத்துலதான் தெரியுது, நீங்க கையில வெச்சிருக்கிறது எல்லாம் கள்ளநோட்டு. ஏற்கெனவே இருந்த சிக்கல் இன்னும் பெருசாகுது. இப்போ என்ன பண்ணுவீங்க? இதுமாதிரி சூழல்ல ஹீரோ மாட்டிக்கிறார். இதுக்கு இணையா ஒரு காதலும் இணைஞ்சு பயணிக்குது. இந்தப் படம் உங்களைச் சிரிக்க வைக்கும்; அழ வைக்கும்; சிந்திக்கவும் வைக்கும்.''

தீமையைக் கழற்று... நன்மையை உடுத்து!

''பாபி சிம்ஹா எப்படி?''

'' 'ஜிகர்தண்டா’ படம் பார்த்தப்பதான் இந்தக் கதைக்கு சிம்ஹா பொருத்தமா இருப்பார்னு தோணுச்சு. அருமையா நடிச்சிருக்கார். சிம்ஹா மட்டும் இல்ல கீர்த்தி சுரேஷ், அண்ணி கதாபாத்திரத்தில் நடிச்சிருக்குற பானு, சார்லி, சோமசுந்தரம்னு எல்லாரும் அவ்வளவு அழகா நடிச்சிருக்காங்க. முதல் படம், குறிப்பிட்ட நேரத்துக்குள்ள முடிக்கணும்கிற என் பதற்றத்தைப் பாதியா குறைச்சதே இவங்க எல்லாரும்தான்.''  

''ஷங்கர்கிட்ட என்ன கத்துக்கிட்டீங்க?''

''திட்டமிடல். பொதுவா பேப்பர்ல ஷாட் பிரிப்போம். அதை முடிச்சதும் அந்த பேப்பருக்குப் பின்னால ஒவ்வொரு ஆங்கிலுக்கும் ஏ, பி, சி, டி-னு பிரிப்பார். ஒருத்தர் எட்டிப்பார்க்குற ஷாட் தேவைனு வைங்க... எட்டிப் பார்க்குறது 'ஏ’, ஒரு கண்ணுக்கு மட்டும் டைட் ஷாட்னா 'பி’, கண் சிமிட்டுறது 'சி’... இப்படி 'ஓ’ வரைக்கும் போகும். அவ்வளவு பெர்ஃபெக்ட் ப்ளானிங். இன்னொரு முக்கியமான விஷயம், கூட்டத்தை எப்படிக் கையாள்றதுனு அவர்கிட்ட கத்திக்கிட்டேன். ஆயிரம் பேர், மூவாயிரம் பேர் ஸ்பாட்ல இருந்தாலும் சுலபமா சமாளிக்கிற எனர்ஜியை அவர்தான் எங்களுக்குத் தந்தார்.''