சினிமா
Published:Updated:

சினிமா விமர்சனம் : முரண்

விகடன் விமர்சனக் குழு

##~##

ங்கும் எதிலும் த்ரில் விரும் பும் பணக்கார இளைஞன், கிடைத்த வாழ்க்கையை வாழும் இயல்பான நடுத்தர வயதுக்காரர் - இருவரின் 'முரண்’பட்ட ஒரு பயணம்... ஒரு புள்ளியில் இணைந்தால்?

 தொழிலதிபர் ஜெயப்ரகாஷின் மகன் பிரசன்னா. சினிமா வாய்ப்புக்குத் தவிக்கும் ஓர் இசையமைப்பாளர் சேரன். இருவரும் ஒரு பயணத்தில் நட்பாகிறார்கள். சேரன் தன் மனைவி நிகிதாவுடனான கசப்பான வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கிறார். தன் காதலியின் மரணத்துக்கு, தன் தந்தைதான் காரணம் என்று தன் சோகம் சொல்கிறார் பிரசன்னா. முடிவில், 'உங்க மனைவியை நான் கொல்றேன். என் அப்பாவை நீங்க கொல்லணும். ஓ.கே?’ என்று சேரனோடு திகீர் டீல் பேசுகிறார் பிரசன்னா. இந்தக் கொலைக் கூட்டணியில் சேரன் சேர்ந்தாரா; கொலை செய்தாரா என்பது மீதிக் கதை!

சினிமா விமர்சனம் : முரண்

ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இயக்கத்தில் வெளிவந்த 'ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் எ டிரெயின்’ (Strangers on a Train) படத்தைத் தழுவி 'முரண்’ எடுத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் ராஜன் மாதவ். ஒரு நீண்ட பயணத்தை, மிக ரசனையான வசனங்கள், சம்பவங்களோடு சுவாரஸ்யமாகக் கொடுத்ததில் கவனம் கவர்கிறார்.

பிரசன்னாவுக்கு இந்தப் படம் மாஸ்டர் பீஸ். பணக்கார வளர்ப்பு கொடுத்த பந்தாவுடன் செமமேன்லியாகப் பிரமாதப்படுத்துகிறார். 'அவன்... இவன்’ என்று அப்பாவைக் கலாய்ப்பதும் மீட்டிங்கில் கூலிங் கிளாஸ் தூக்கம்போடுவதுமாக அலட்டல் திமிருடன் முன் பாதியில் வசீகரிப்பவர், தந்திர நரி யாகப் பின் பாதியில் மிரட்டுகிறார். நிகிதாவிடம் அவமானப்படுவதும், பிரசன்னாவின் துரத்தல் தாங்காமல் அல்லாடுவதுமாக பாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் சேரன். பிரசன்னாவின் ஒவ்வொரு சேட்டைக்கும் பொசுக் பொசுக் என்று காரைவிட்டு மூட்டை முடிச்சுகளுடன் சேரன் இறங்குவது குபீர் காமெடி. ஹரிப்ரியாவுக்கும் சேரனுக்கும் இடையிலான காதல்தான் ஒட்டவே இல்லை.  

நிகிதா, ஹரிப்ரியா இருவரில் டார்ச்சர் மனைவியாக வரும் நிகிதாவே பாஸ் மார்க் வாங்குகிறார். ஜெயப்ரகாஷ் நல்லவரா... கெட்டவரா என்பதை ஒரே காட்சியில் விளக்கியதும் அந்த படீர் ட்விஸ்ட்டும் செம வெயிட்!

சினிமா விமர்சனம் : முரண்

சாஜன் மாதவ்வின் பின்னணி இசை படத்தின் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பலம். பாடல்கள்தான் ஸ்பீட் பிரேக். செம ஸ்பீட் கதைக்கு பத்மேஷின் ஒளிப்பதிவு நல்ல மைலேஜ். நெடுஞ்சாலையில் ஓடும் காருக்கு அங்கிட்டும் இங்கிட்டுமாகப் பயணித்துப் பரபரக்கின்றன கேமரா கோணங்கள்!

முதல் 20 நிமிடங்கள் பிரசன்னாவும் சேரனும் பே...சிக்கொண்டே இருப்பது அலுப்பு. கொலை செய்துவிட்டு, அதை எளிமையான விபத்தாக மாற்றிவிடுகிற பிரசன்னா, தன் அப்பாவை மட்டும் கொலை செய்ய சேரனை ஏன் கட்டாயப்படுத்துகிறார்? ஏதாவது ஒரு 'திட்டமிட்ட விபத்தில்’ தன் அப்பாவையும் கொன்று இருக்கலாமே? அவ்வளவு பெரிய 'அம்மா சோகம்’ இருக்கிற சுமா (லிண்டா), பிரசன்னாவிடம் பொசுக்கென்று மடங்குவதற்கு அழுத்தமான காட்சிகளே இல்லை.

இப்படி அடிப்படைக்கே முரணான கேள்விகள் இருந்தாலும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமே இல்லாத த்ரில் பயணம்!