சினிமா
Published:Updated:

சினிமா விமர்சனம் : வாகை சூட வா

விகடன் விமர்சனக் குழு

##~##

செங்கல் சூளையில் அடிமைப்பட்டுக்கிடக்கும் வெள்ளந்திக் கிராம மக்களை 'வாகை சூட வா’ என்று ஓர் அப்பாவி ஆசிரியர் கை பிடித்து அழைத்தால்?!  

 மின்சாரம், போக்குவரத்து வசதிகள் இல்லாத 1960-கள் காலகட்டம். 'கண்டெடுத்தான்காடு’ என்கிற கிராமம். செங்கல் சூளைக் கூலிவேலைதான் அங்கு பிழைப்பு. படிப்பறிவு இல்லாக் கூட்டத்தைக் கொத்தடிமைகளாக நடத்துகிறார் முதலாளி. அங்கு வாத்தியாராக வரும் விமல், குழந்தைகளைக் கல்விப் பாதைக்கு இழுக்க முயற்சிக்கிறார். அது உண்டாக்கும் சலசலப்பு கிராமத்துக்கே ஒரு விடியலை உண்டாக்குகிற கதை!  

கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறைக்காக இயக்குநர் சற்குணத்துக்கு அழுத்தமான கை குலுக்கல். செங்கல் சூளைக் கிராமத்துப் பிள்ளைகளின் குறும்பு, மக்களின் வெள்ளந்தித்தனம், சூளையின் வெப்ப வாழ்க்கையை முழுமையாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

சினிமா விமர்சனம் : வாகை சூட வா

லெதர் பை டிரான்சிஸ்டர், கமலைப் பாசனம், பனையேறும் மீன், களி உணவு, ஓட்டைக் காலணா, அந்தக் காலத்து டப்பா பேருந்து, என அப்படியே அறுபதுகளுக்குக் கடத்திச் செல்கிறது அறிமுகக் கலை இயக்குநர் சீனுவின் உழைப்பு. ஒளிப்பதிவு டோனிலும் இரவு நேரக் காட்சிகளின் ரகசியங்களிலும் ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு அபாரம்!

கிராமத்துச் சிறுவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதும் இனியாவிடம் பணத்தைப் பறிகொடுத்து பட்டினிக்கிடப்பதுமாக அசட்டு வாத்தியார் கேரக்டருக்கு அம்சமாகப் பொருந்துகிறார் விமல். நடை, உடை, பாவனைகளிலும் அசத்தல் அச்சுப்பிச்சு. படத்தைப் பாதி தாங்கி நிற்பது அறிமுக நாயகி இனியாவின் அந்த இரண்டு கண்கள்தான். விமலிடம் காசு கறந்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுவதாகட்டும், விமலுக்குத் தன் மேல் ஈர்ப்பு இருப்பது தெரிந்ததும் பாவாடையை இடுப்பில் சொருகிக்கொண்டு நொடிக்கு ஒரு எக்ஸ்பிரஷனுடன் ஆடுவதாகட்டும்... வண்டல் தேவதை!

'டூநாலெட்டு’ தம்பி ராமையா, குருவிக்காரர் குமரவேல், செங்கல் சூளைச் சிறுவர்கள் எனச் சின்ன சின்ன கேரக்டர்களும் அழகு!

சினிமா விமர்சனம் : வாகை சூட வா

ஜிப்ரான், 'அட’ போடவைக்கிற இசை அறிமுகம். 'சாரைக் காத்து வீசும்போது...’, 'போறானே போறானே...’ பாடல்களும் கதையோடு இழையும் பின்னணி இசையும் மனதை மலரவைக்கின்றன.

இவ்வளவு ப்ளஸ்கள் இருந்தும் நகராமல் அடம் பிடிக்கும் டல் திரைக்கதைதான் மகா மைனஸ். கிராமத்துக் குழந்தைகளுக்குக் கல்விக் கண் திறப்பதுதானே கதையின் அடிநாதம்? ஆனால், அதைக் காட்டிய விதத்தில் அழுத்தமான உணர்ச்சிகளோ, மனதை உலுக்க வேண்டிய காட்சிகளோ... எங்கே சார்?  

ரேடியோ, தூண்டில் தக்கை எனச் சின்னச்சின்ன விஷயங்களைக்கூட நுணுக்கமாகக் காட்டுபவர்கள், உணர்வுபூர்வமான இடங்களில் அவசர கதியில் ஓடி க்ளை மாக்ஸுக்கு வந்துவிடுகிறார்களே!

ஒரு பீரியட் சினிமாவைச் செதுக்கிய அக்கறை அழகு. அந்த அழகுக்கு உழைத்த அளவுக்குக் கதையில் ஆழம் இல்லை. ஆனாலும், அழகான பதிவு!