Published:Updated:

சினிமா விமர்சனம் : வெடி

விகடன் விமர்சனக் குழு

சினிமா விமர்சனம் : வெடி

விகடன் விமர்சனக் குழு

Published:Updated:
##~##

ங்கையைக் காப்பாற்றத் துடிக்கும் அண்ணனின் அதிரடி 'வெடி’! 'அண்ணன் - தங்கை’ உறவு தோன்றி, சினிமா தோன்றாத காலம் முன் தோன்றிய கதைதான். விஷாலைவைத்து வெடிவெடித்து இருக்கிறார்கள். தெலுங்கில் ஹிட் அடித்த 'சௌர்யம்’ படத்தை சௌகர்யமாகக் கடத்தி இருக்கிறார் இயக்குநர் பிரபுதேவா.

 தூத்துக்குடியைத் தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கும் தாதா சாயாஜி ஷிண்டே. தன்னை எதிர்ப்ப வர்களின் குடும்ப உறுப்பினர்களைத் துன்புறுத்தி, எதிரியைத் தன் வழிக்குக் கொண்டுவருவது சாயாஜி ஸ்டைல். ஆனால், ஒற்றை உறவுப் பிணைப்புகூட இல்லாத ஏ.எஸ்.பி. விஷால் இவர் பிடிக்குள் அடங்காமல் திமிறுகிறார். சாயாஜியை சிறையிலும் அடைக்கிறார். இந்த இடத்தில், சிறு வயதில் காணாமல் போன விஷாலின் தங்கை கொல்கத்தாவில் இருப்பதாகத் தகவல் வர, அவரைத் தேடிப் போகிறார் விஷால். இது வில்லனுக்குத் தெரியாமல் இருக்குமா? விஷாலைத் தேடிச் செல்கிறார் சாயாஜி. அங்கே அடிதடி சரவெடி!

சினிமா விமர்சனம் : வெடி

முதல் காட்சியில் இருந்து க்ளைமாக்ஸ் வரை அடுத்தடுத்து என்ன நடக்கும் என நாம் நினைக்கிறோமோ அது எல்லாம் அப்படி அப்படியே நடக்கிறது. விஷாலின் கேரக்டரில் எந்தப் புதுமையும் இல்லை. ஆனால், ஆக்ஷனில் மனிதர் அனல் கொளுத்துகிறார். தூத்துக்குடி, கொல்கத்தா என ஆல் ஏரியாவிலும் ஆட்களைத் தூக்கிப்போட்டுப் பந்தாடுகிறார்!

சில சமயங்களில் டீச்சர்போல் காட்சி அளித்தாலும் சமீரா ரெட்டி கல்லூரி மாணவி. கல்லூரியே இவர் பின்னால் சுற்றுகிறதாம். ஆனால், விஷால் மட்டும் இவரைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால், அவரை சமீரா சுற்றுகிறாராம். சுத்துற பூமி தாங்குமா சாமி?

சாயாஜிக்கு டப்பிங் பேசியவர் பாவம்... 'டேய்... டோய்...’ எனக் கத்திக் குமித்ததில் லிட்டர் கணக்கில் சீரகத் தண்ணி குடித்து இருப்பார். 'லேட்டா வந்தா உன் தங்கச்சி பொணத்தை நீ பார்ப்ப... சீக்கிரம் வந்தா உன் பொணத்தை அவ பார்ப்பா’, 'போலீஸ்னா பயம் இருக்கக் கூடாது... பயந்தா போலீஸா இருக்கக் கூடாது’... இப்படித் தப்படிக்குத் தப்படி 'பஞ்ச்’ பச்சடி!

சினிமா விமர்சனம் : வெடி

கொஞ்சமாக வந்தாலும் ஊர்வசி, ஸ்ரீமன் கூட்டணி கலகலப்பு. சின்னச் சின்ன கடி ஜோக்குகளை ஊர்வசி அடிக்கிற டைமிங்கில் தியேட்டரே சிரிக்கிறது!

பாடல் காட்சிகளில் அழகை ஊற்றி சண்டைக் காட்சிகளில் பதறவைக்கிறது ஆர்.டி.ராஜசேகரின் கேமரா. விஜய் ஆண்டனி யின் இசையில் 'இப்படி மழை அடித்தால் நான் எப்படிக் குடை பிடிப்பேன்’,  'என்ன ஆச்சு’ பாடல்கள்  ஐ-பேடு, செல்போன்களில் இடம் பிடிக்கும் ரகம்!

'இச் இச் இச் கொடு’ பாடலில் கிராமத்து மனிதர், ஆடு-மாடு, சைக்கிள்களின் கட்-அவுட்களில் மட்டுமே பிரபுதேவாவின் ரசனை தெரிகிறது.    

வெடி... ஓவர் மசாலா நெடி!