Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 2

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 2

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:

து, போன முறை: எட்டாம் வகுப்புப் படிக்கும் கிஷோர், வருங்கால வி.வி.ஐ.பி. தன்னுடைய குழந்தைப் பருவ வாழ்க்கையை, வருங்காலத் தலைமுறைகள் தெரிஞ்சுக்கிறதுக்காக, டைரி எழுதறான். கிஷோரின் இந்த மகத்தான பணி, இதோ தொடருது... 

குறும்புக்காரன் டைரி -  2

ஒரு வழியா, குழந்தைகள் தின விழா பேச்சுப் போட்டியில், பிரபல கிஷோர் ஆகிய நான் வெற்றிகரமா பேசி முடிச்சுட்டேன். ஜவஹர்லால் நேருவைப் பத்தி அப்பா எழுதிக்கொடுத்ததில் அங்கங்கே 'நேரு மாமா’ 'நேரு மாமா’னு இருந்தது. எங்க அப்பாவுக்கு மாமான்னா, எனக்கு தாத்தாதானே? அந்த லாஜிக்ல, 'நேரு தாத்தா' 'நேரு தாத்தா'னு பேசினேன். முன் வரிசையில் இருந்த பிரின்சிபாலும் சீஃப் கெஸ்ட் அங்கிளும் ஏன் அந்த மொறை மொறைச்சாங்கன்னே தெரியலை!

 அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ஒரு வாரம் கழிச்சு இப்போதான் டைரி எழுத டைம் கிடைச்சது. காரணம், இன்னொரு சம்பவம். நேத்து லன்ச் பிரேக்ல, கண்ணை மூடி மெய்  மறந்து பாடிக்கிட்டே கிளாஸைவிட்டு வெளியே வந்தப்போ, சோடாப்புட்டி தினேஷ் மேல மோதி, கீழே விழுந்துட்டேன். அவனுக்கு ஒரு பல்லு உடைஞ்சுபோச்சு.

அந்த ஒரு பல்லு இருந்தா மட்டும், அவன் என்ன சிவகார்த்திகேயன் அங்கிள் மாதிரியா இருக்கப்போறான். ஸாரி சொல்லியும் அடங்கல. என்னைக் கண்டபடி திட்டினான். எப்படிப் பாத்தாலும் நியாயம் என் பக்கம்தான். அவனாச்சும் பார்த்து வந்துருக்கலாம்ல? தெரியாமல் நடந்த அந்தச் சம்பவம், அடுத்த நாள் கேயாஸ் தியரி மாதிரி வேற ஒரு விளைவை உண்டாக்கும்னு நினைச்சுக்கூடப் பார்க்கல.

குறும்புக்காரன் டைரி -  2

அடுத்த நாள். எங்க சயின்ஸ் மிஸ் எல்லாப் பசங்ககிட்டயும், 'எதிர்காலத்துல நீங்க என்னவா ஆகப்போறீங்க?’னு கேட்டாங்க. அட... இத்தனை நாளா நானும் பிரபலமா ஆகணும்னு நினைச்சேனே தவிர, என்னவா ஆகணும்னு முடிவு பண்ணலயே. என்ன பதில் சொல்றதுனே தெரியல. சரி, யாராவது சொல்ற பதிலை அப்படியே சொல்லிடலாம்.

நரேஷ்தான் ஃபர்ஸ்ட். டாக்டராகப் போறதா சொன்னான். வழக்கமா டாக்டர் ஊசி போட்டுக் கொல்லுவாங்க. இவன் டாக்டரானா பேசியே கொன்னுடுவான். ஜெகன், சாஃப்ட்வேர் படிக்கப்போறேன்னு சொன்னான். வீடியோ கேம்ஸ் விளையாடினாலே சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆகிடலாம்னு நினைச்சுட்டான் போல.

என்னோட முறை வந்ததும் டக்குனு எந்திரிச்சு, 'அரசியல்வாதி ஆகப்போறேன் மிஸ்’னு சொல்லிட்டு உக்காந்துட்டேன். ஒரு ஃப்ளோவுல வந்துச்சு, சொல்லிட்டேன். அதுவே என் அரசியல் வாழ்க்கையின் ஆரம்பப் புள்ளியா மாறும்னு நினைக்கல.

உடனே மிஸ், 'அரசியல்வாதினு சொன்னதும் ஞாபகம் வருது. நாளைக்கு கிளாஸ் லீடர் எலெக்ஷன் வைக்கலாம். இஷ்டம் இருக்கிறவங்க பேர் குடுங்க’னு சொன்னாங்க.

மொத்தம் மூணு பதவி. ஒண்ணு, லீடர். மொத்த கன்ட்ரோலும் இவருக்குத்தான். டீச்சர் வராதப்ப, பேசுறவங்க பேரை போர்டுல எழுதிவைக்கணும். லேட்டா வர்றவங்க, கலாட்டா பண்றவங்களை கன்ட்ரோல் பண்றதுனு ஏகப்பட்ட வேலைகள். அடுத்தது, துணை லீடர். தினமும் வந்ததும், போர்டை துடைக்கிறது, ஆபீஸ் ரூம் போயி சாக்பீஸ் எடுத்துட்டு வர்றது,  லீடர் வராத நாட்கள்ல லீடருக்கான வேலைகளைச் செய்றது. சுருக்கமா சொல்லணும்னா, எடுபுடி. மூணாவது, செக்ரட்டரி.  கிளாஸ்ல கலெக்ட் பண்ற ஃபைன் காசுகளை மெயின்டெய்ன் பண்றது, எல்லாரும் லீடருக்குத்தான் போட்டி போடுவாங்க. பணம் சம்பந்தப்பட்டதா இருக்கிறதால, செக்ரட்டரி பதவிக்கு பெயர் கொடுக்கத் தயங்குவாங்க. அதனால, செக்ரட்டரி பதவிக்கு என் பெயரைக் கொடுத்தேன். அப்பவே ஜெயிச்சுட்ட மாதிரி இருந்துச்சு. ஒரு செகண்டு 'செக்ரட்டரி கிஷோர்’ மனசுக்குள்ளே வந்துபோனான்.

''டேய் வினோத், ஐடி கார்டு போடலையா? ஃபைன் கட்டு!'

''என்னது, கிளாஸ்ல மாட்ட பாரதியார் போட்டோ வாங்குறதுக்கு காசு வேணுமா? ஏதாவது பத்திரிகையில வந்த ஸ்டில்லைக் கிழிச்சு ஒட்டுங்கடா'

''மிஸ், இந்த மாசம் ஃபைன் காசு நிறைய வந்திருக்கு. ஆளுக்கு ஒரு ஃபைவ் ஸ்டார் வாங்கிக்குடுத்துடலாம்.'

''செக்ரட்டரி கிஷோர் வாழ்க... வாழ்க!'

ஆஹா! நினைச்சுப் பார்க்கவே எவ்வளவு ஜாலியா இருக்கு. ஆனா, என்னோட திங்க்கிங் அந்த தினேஷ§க்கு எப்பிடித்தான் புரிஞ்சுதோ, பயபுள்ள அவனும் செக்ரட்டரி பதவிக்கு நிக்கிறேன்னு சொல்லிட்டான். 'அன்னபோஸ்ட்டா’ ஜெயிக்க நினைச்சதுல சிக்கல். இவனை எப்படி ஜெயிக்கலாம்னு விடிய விடிய யோசிச்சு, ஒரு பிளான் ரெடி பண்ணினேன்.

குறும்புக்காரன் டைரி -  2

ஓட்டு கேட்க, எங்க ரெண்டு பேரையும் மிஸ் எழுந்திரிச்சு நிற்கச் சொல்லுவாங்க. தினேஷ் எனக்கு முன்னாடி வரிசையில இருக்கான். அவன் நின்னதும் என் பாக்கெட்டுல இருந்து 10 ரூபாயை நைஸா எடுத்து, அவன் காலுக்குக் கீழே போட்டுடுவேன். 'டேய் தினேஷ், உன் 10 ரூபா கீழே கிடக்கு பாரு. 10 ரூபாயையே சேஃப்ட்டியா வெச்சுக்கத் தெரியல. இவனெல்லாம் செக்ரட்டரி ஆகி என்ன ஆகுமோ?’னு ஒரு போடு போடுவேன். எல்லாரும் எனக்கே ஓட்டுப் போட்டுடுவாங்க. ஹா... ஹா... ஹா... எப்படி பிளான்? ராஜதந்திரங்களைக் கரைச்சுக் குடிச்சவன்டா இந்தக் கிஷோர். அரசியல் எனக்கு ஐஸ்க்ரீம் மாதிரி!

அடுத்த நாள், தேர்தல் ஆரம்பம் ஆச்சு. மிஸ் எங்க ரெண்டு பேரையும் எழுந்திரிக்கச் சொன்னாங்க. தினேஷ் எனக்கு முன்னாடி நின்னுட்டு இருந்தான். நான் பாக்கெட்டுல இருந்து 10 ரூபாயை எடுத்து அவன் காலுக்குக் கீழே போட்டேன். அந்த நேரம் பாத்து, என் உயிர்த் தோழன், நாசமாப்போன ஜெகன், 'டேய் கிஷோர், உன் 10 ரூபாய் கீழே விழுந்துடுச்சுடானு’ எடுத்து என்கிட்ட கொடுத்தான்.

சோடாப்புட்டி தினேஷ§ம், 'ஒரு 10 ரூபாயையே ஒழுங்கா புடிக்கத் தெரியல. நீ கிளாஸ் காசை வெச்சிருந்தா என்ன ஆகுமோ’னு என் டயலாக்கை பேசிட்டான். அப்புறம் என்ன? மொத்த ஓட்டும் அவனுக்கு விழுந்துடுச்சு. என் பிளான் எல்லாம் வீணாப்போச்சு. என் அரசியல் வாழ்க்கைக்கும் அப்போதைக்கு எண்டு கார்டு போட்டாச்சு.

                                          (டைரி புரட்டுவோம்...)