ம.கா.செந்தில்குமார், படங்கள்: தி.குமரகுருபரன்
‘‘இவங்க பேசுற தமிழைக் கேட்டுட்டே இருக்கலாம். திடீர்னு ஒருநாள் என்னை ‘அத்தான்’னு கூப்பிட்டாங்க. அதிர்ந்துட்டேன். அடுத்த அதிர்ச்சி, ‘இஞ்சாருங்கோ’ங்கிறாங்க. இன்னொரு நாள் எங்க அண்ணன்கிட்ட, ‘என்ன, நித்திரையோ?’னு கேட்டதும், அவரும் அதிர்ந்து, ‘என்னடா இது?’ங்கிறார். வீட்ல எல்லாரும் இவங்க ஈழத் தமிழுக்குப் பொழிப்புரை கேட்கிறாங்க. தமிழ் பிடிக்கும்தான்... ஆனால், நதியா பேசுற தமிழ் ரொம்பப் பிடிக்குதே’’ - அன்பாகப் பேசும் ஆரியை ஆசையாகப் பார்க்கிறார் நதியா. ‘நெடுஞ்சாலை’ ஆரி இப்போது லண்டன் மாப்பிள்ளை. மணமகள் நதியா, லண்டன் வாழ் ஈழப் பெண்.
‘‘நான் நடிச்ச ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படத்தை டி.வி-யில் பார்த்திருக் காங்க. அந்தப் படமும் என் நடிப்பும் அவங்களுக்குப் பிடிச்சிருந்திருக்கு. அவங்க அப்போ லண்டன் வேல்ஸ் பல்கலைக்கழக மாணவி. தன் நண்பர்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னதும், ‘ஆரி என் நண்பர்’னு அவர் சொல்ல, இவங்களுக்கு சர்ப்ரைஸ். போன்ல பேசினாங்க. அப்படித்தான் ஃப்ரெண்ட்ஸ் ஆனோம்’’ - ஆரி விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறார் நதியா.

‘‘முதல்முறையா, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’ படத்தை டி.வி-யில் பார்த்தப்போ, ‘இவரைத்தான் நான் கட்டிக்கப்போறேன்’னு ஆரியைக் காட்டி ஒரு பேச்சுக்கு எங்கம்மாட்ட சொன்னேன். ஆனா, அது உண்மையாகிருச்சு’’ எனச் சிரித்தவர், ‘‘ஒரு கட்டத்தில் ஆரியைப் பற்றியே கதைச்சிட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு, வீட்டுல ஒரு மாதிரி புரிஞ்சுக்கிட்டாங்க. தீவிரமா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. லண்டன், கனடா வாழ் ஈழத் தமிழர்கள்ல சூப்பர் ரிச் கைஸ், டாக்டர், பேங்க் ஆபீஸர்னு தீவிரத் தேடல். ஆனா, அதுக்கு முன்னாடி வரை நான் ஆரியை விரும்புறேன்னு எனக்கே தெரியாது. நைஸ் ஃபீலிங்’’ என வெட்கப்படுகிறார்.
‘‘அப்பா சின்ன வயசுலயே தவறிட்டதால, எனக்குப் பொறுப்புகள் அதிகம். சினிமாவுக்கு வந்த முதல் தலைமுறை ஆள் நான். அதனாலயே ரொம்பக் கவனமா இருப்பேன். பெண்களை ஹேண்டில் பண்ற எந்த டெக்னிக்கும் தெரியாது. அதனால ரொம்பப் பேசாம விலகிப் பேசிட் டிருப்பேன்’’ எனச் சிரிக்கும் ஆரி, ‘‘தனக்கு வர்ற வரன் பற்றி இவங்க சொல்வாங்க. ‘நல்ல பையனா இருந்தா கட்டிக்கவேண்டியதுதானே. வர்றவங்க எல்லாரையும் வேணாம்னு சொன்னா... நீ யாரைக் கல்யாணம் பண்ணிக்கப்போற?’னு ஒருமுறை கேட்டேன். அதுக்கு ‘ஏன் நீ பண்ணிக்க மாட்டியா?’னு கேட்டுட்டாங்க’’ என்கிறார்.
நதியா தொடர்கிறார்... ‘‘ ‘அங்கே ஹெச்.ஆர் வேலை. 2012-ம் வருஷம் லண்டன் ஒலிம்பிக்ஸ்ல 70 ஆயிரம் பேருக்கு ட்ரெயினிங் தந்த அனுபவம் இருக்கு. சென்னை க்ளைமேட், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் எல்லாம் வேற. எமோஷனலா முடிவு எடுத்துட்டு பின்னாடி வருத்தப்படாத’னு நிறைய அட்வைஸ். ‘அப்படியா?’னு ஒருமுறை நேர்லயே கிளம்பி வந்துட்டேன்’’ என்கிற நதியாவைத் தொடர்கிறார் ஆரி.

‘‘தமிழ் சினிமாகூடப் பரவாயில்லைபோல. ஆனா, இவங்க வீட்டுல எல்லாரும் நாட்டாமைதான். முதல்கட்டப் பஞ்சாயத்துக்கள் முடிஞ்சு அவங்க குடும்பத்துல இருந்து இன்வெஸ்ட்டிகேட்டிவ் ஆபீஸர்ஸ் வந்து, ‘யார் இந்தப் பையன்?’னு என்னைப் பத்தி விசாரிச்சுச் சொல்லியிருக்காங்க. ‘ஸ்கைப், வாட்ஸ்அப்ல வாங்க’னு அவங்களின் எல்லா உறவுகளும் இன்டர்வியூ பண்ணாங்க.
லண்டன்ல கல்யாணம் பண்ணனும்னா , 80 நாட்கள் நிச்சயம் அங்க தங்கியிருக்கணும். ‘இந்தியாவுல ரொம்ப சிம்பிள். இங்கேயே கல்யாணம் பண்ணிக்கிட்டா பெட்டர்’னு சொல்லி, நான் ஆரம்பத்துல தங்கியிருந்த சென்னை மண்ணடியில் காளிகாம்பாள் கோயில்ல எளிமையா கல்யாணத்தை முடிச்சிட்டோம்’’ என்கிற ஆரியிடம், ‘‘ ‘நீங்க அங்க லண்டனுக்கு மாப்பிள்ளையாவே வாங்க’னு நாங்க ஒப்புக்கிட்டோம்’’ எனச் சிரிக்கிறார் நதியா.
புது ஜோடிக்கு ஆல் த பெஸ்ட்!