Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 3

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 3

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:

ட்டாம் வகுப்புப் படிக்கும் கிஷோர், வருங்கால வி.வி.ஐ.பி. தன்னுடைய குழந்தைப் பருவ வாழ்க்கையை, வருங்காலத் தலைமுறைகள் தெரிஞ்சுக்கிறதுக்காக, டைரி எழுதறான். கிஷோரின் இந்த மகத்தான பணி, இதோ தொடருது... 

ரீட்சையில முட்டை வாங்கியிருந்தாக்கூட இவ்வளவு வருத்தப்பட்டிருக்க மாட்டேன்.  ஆனா, ஸ்கூல்ல கொடுத்த ஒரு முட்டையால் நான் பட்ட பாடு இருக்கே!

குறும்புக்காரன் டைரி -  3

நேத்து, சோஷியல் சயின்ஸ் பாடம் எடுக்கிற கீர்த்தனா மிஸ், உள்ளே வரும்போதே பையோட வந்தாங்க. பேரன்டல் பத்தியும் ரெஸ்பான்சிபிலிட்டி பத்தியும் என்னென்னமோ சொல்லிட்டு, ''உங்க எல்லாருக்கும் ஒரு டெஸ்ட்''னு சொன்னதும், பக்குனு ஆயிடுச்சு,

பையில் இருந்து முட்டைகளை வெளியே எடுத்தாங்க, 'ஆளுக்கொரு முட்டை தரப்போறேன். அதை, ஒரு நாள் ஃபுல்லா பாதுகாத்து, நாளைக்கு கொண்டுவந்து கொடுக்கணும். இதுதான் டெஸ்ட்'னு சொன்னாங்க.

'முட்டை உடைஞ்சாலும் பிரச்னை இல்லே கிஷோர், புது முட்டை வாங்கி வந்துட்டா போச்சு?'னு ஜெகன் கிசுகிசுக்க, எப்படித்தான் மிஸ்ஸுக்கு கேட்டுச்சோ? ஒவ்வொரு முட்டையிலும் மார்க்கரில் கையெழுத்துப் போட்டு கொடுத்தாங்க. சரியான பல்பு வாங்கினோம்கிறதை இங்கே பெருமையாப் பதிவு பண்ண முடியாது, ஸோ...

என் கையில முட்டையைக் கொடுக்கும்போதே நடுங்க ஆரம்பிச்சுட்டேன். ஒரு நிமிஷத்துக்கே இந்த கதின்னா, 24 மணி நேரத்துக்கு எப்படித்தான் பாதுகாக்கிறதோ? ஏற்கனவே முட்டைக்கும் எனக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கு.

குறும்புக்காரன் டைரி -  3

போன வருஷம், எங்க வீட்டுக்குப் பக்கத்துல பிரபுன்னு ஒரு பையன் இருந்தான். அன்னிக்கு அவங்க வீட்டுல ஒரு ஃபங்ஷன். நானும் அம்மாவும் போயிருந்தோம். அப்போ, பிரபுவோட அம்மா ''முட்டை பொடிமாஸ் பண்ணியிருக்கேன். சாப்பிடுறியா கிஷோர்?''னு கேட்டாங்க.

''அதுக்கென்ன ஆன்ட்டி, சாப்பிடுறேன்''னு சொன்னேன். எங்க பாட்டி வீட்டுல முட்டை பொடிமாஸ் சாப்பிட்டு இருக்கேன். அந்தச் சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா, பிரபு அம்மா கொடுத்தது வாயில வைக்க முடியலை. யாரும் பார்க்கதப்போ, ஹால்ல இருந்த பூச்செடிக்குள்ளே கொட்டிட்டேன்.

கொஞ்ச நாள் கழிச்சு, பிரபுவோட அம்மா, எங்க அம்மாகிட்ட, ''வீட்டுல எலி செத்த நாத்தம் அடிக்குது, எங்கே இருந்து வருதுனு தெரியலை. கண்டுபிடிக்கணும்''னு புலம்பினாங்க.

எனக்குத் தெரிஞ்சுபோச்சு. பூச்செடிக்குள்ளே போட்ட முட்டை வேலையைக் காட்ட ஆரம்பிச்சுடுச்சு.

இதெல்லாம் மைண்ட்ல ஓடிட்டு இருக்கும்போதே, ''நீங்க நாளைக்கு இந்த முட்டையை எந்த கன்டீஷன்ல கொண்டுவர்றீங்கனு பார்த்து, இன்டர்னல் மார்க்ஸ் போடுவேன்''னு மிஸ் இன்னும் பயமுறுத்திட்டு கிளம்பினாங்க.

குறும்புக்காரன் டைரி -  3

சிலர் முட்டையை தூக்கிப்போட்டு கேட்ச் புடிச்சு விளையாடினாங்க. இந்த ஜெகன், கர்சீப்ல சுத்தி சேஃப்ட்டியா சட்டைப்பையில வெச்சுக்கிட்டான். ''தெரியுமா? இதுக்கு, குட்டி ஜெகன்னு பேர் வெச்சிருக்கேன்'னு அவன் சொன்னது, செம காமெடியா இருந்துச்சு.

ஒரு வழியா முட்டையை ஸ்கூல்ல பத்திரப்படுத்திட்டேன். ஆனா, வீட்டுலதான் என்ன பண்றதுன்னே தெரியல. நேத்து, வீட்டுல என் அண்ணன் லோகேஷோட ஹோம்வொர்க் நோட்டுல கிறுக்கிட்டேன். எப்போடா என்னைப் பழி வாங்கலாம்னு காத்திருக்கான். அவன் கண்ணுல படாம காப்பாத்தணும். முட்டையைப் பேப்பர்ல சுத்தி ஸ்கூல்பேக்குல வைக்க நினைச்சேன். ஆனா, லோகேஷ் ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் என் பேக் மேலதான் அவன் பேக்கைப் போடுவான். ஸோ, அது பாதுகாப்பு இல்லை.

பீரோ மேல, கிளிக் கூண்டுக்குள்ளே என எங்கே வெச்சாலும் அவன் கண்ணுல பட்டுத் தொலைச்சுடும். கடைசியில ஃபிரிட்ஜ்ல வெச்சுட்டேன். காலையில பார்த்தால்,  முட்டை இல்லை. ஒரு செகண்ட் இதயமே நின்னுடுச்சு. ''அடப்பாவி லோகேஷ். என் முட்டையைக் கொடுடா''னு அவன் சட்டையைப் பிடிச்சுக் கேட்டேன்.

அவன் அப்பாவியா, ''எந்த முட்டை?''னு கேட்கறான். இவன் எடுக்கலைன்னா, முட்டை, கோழியாகி ஓடிப்போயிருக்குமோ?

சோகமா ஸ்கூலுக்கு வந்தா, சில கேர்ள்ஸ் அவங்க முட்டையை, கலர் பெயிண்ட்  அடிச்சு டெக்கரேட் பண்ணி எடுத்துட்டு வந்திருந்தாங்க. ஜெகன், முட்டையில் குட்டி ஜெகன்னு எழுதிட்டு வந்திருந்தான். ஒரு சிலர் முட்டையை உடைச்சிட்டு சோகமா இருந்தாங்க. அப்பாடா... கம்பெனிக்கு ஆள் இருக்குனு தோணிச்சு.

குறும்புக்காரன் டைரி -  3

கீர்த்தனா மிஸ் எல்லாருடைய முட்டையையும் பார்த்து மார்க் போட்டுகிட்டே வந்தாங்க. என்கிட்ட வந்ததும், டிஃபன் பாக்ஸைத் திறந்து காண்பிச்சேன்.

ஆமா, ஃபிரிட்ஜ்ல இருந்த என் முட்டையை எடுத்துதான் அம்மா எனக்கு ஆம்லேட்  ரெடி பண்ணியிருக்காங்க. மிஸ் எதுவும் கேட்காம, கிஷோர்ங்கிற பேருக்கு நேரா மார்க் ஜீரோனு போட்டாங்க. இந்த ரிசல்ட்தான் காலையிலேயே தெரிஞ்சுடுச்சே! கடைசியா, எல்லோரோட முட்டைகளையும் வாங்கி, குப்பைத் தொட்டிக்குள்ளே மிஸ் போட்டப்போ, எல்லோருக்கும் 'ஙே’னு ஆயிடுச்சு.

ஆனா, இதிலிருந்து ஒரு விஷயம் புரிஞ்சிக்கிட்டேன். ஒரு முட்டையையே ஒரு நாளைக்கு நம்மால பாதுகாப்பா வெச்சுக்க முடியலை. நம்ம அப்பாவும் அம்மாவும் நம்மை இத்தனை வருஷம் பாதுகாப்பா கவனிச்சுக்கிட்டு இருக்காங்களே, பேரன்டா இருக்கிறது கஷ்டம்தான்ல.

(டைரி புரட்டுவோம்...)