Published:Updated:

கோபக்காரிகள்!

பா.ஜான்ஸன்

`கோபக்கார இந்திய தெய்வங்கள்' - இப்படிச் சொன்னால் சரியாக இருக்குமா? இந்தியாவின் முதல் ‘ஃபீமேல் பட்டீஸ்’ சினிமா, ‘ஆங்ரி இந்தியன் காடஸஸ்’தான் தற்போதைய பாலிவுட் வைரல்.
முழுக்க முழுக்க பெண்களுக்காக ஒரு சினிமா, பெண்களைப் பற்றிய சினிமா, பெண்கள் தங்களைப் பற்றி பேசிக்கொள்ள ஒரு சினிமா. ஆனால், இதை இயக்கியிருப்பது ஓர் ஆண்.

புகைப்படக் கலைஞர் ஃப்ரீடா (சாரா ஜேன் டையஸ்), தோழிகள் அனைவரையும் கோவாவில் இருக்கும் தன் வீட்டுக்கு அழைக்கிறார். பிஸியான தொழிலதிபர் சு @ சுரஞ்சனா (சந்தியா), கத்ரினா கைஃப் போன்று பாலிவுட்டில் நடிகையாக முயன்று கொண்டிருக்கும் ஜோ @ ஜோன்னா (அம்ரித்), பாடகியாக முயற்சிசெய்யும் மேட் @ மதுரிமா (அனுஷ்கா), சமூகப் போராளி நர்கீஸ் (தனிஷ்தா),  திருமணமான பேம் @ பமிலா (பாவ்லீன்)... இவர்களுடன் வீட்டுவேலை செய்யும் லக்‌ஷ்மி (ராஜ் ஸ்ரீ)யையும் சேர்த்து ஏழு பேர்.

ஃப்ரீடாவுக்குத் திருமணம். திருமணத்துக்கு முன்னர் தன் தோழிகளுடன் பேச்சுலரேட் பார்ட்டி (பெண்களுக்கான பேச்சுலர் பார்ட்டி) கொண்டாடத் தொடங்குகிறாள் ஃப்ரீடா. வழக்கமாக ஆண்கள் நடத்தும் பார்ட்டியின் அத்தனை கொண்டாட்டங்களும் இங்கும் இருக்கின்றன. அதற்கு நடுவே ஒவ்வொரு வருக்குள்ளும் இருக்கும் கோபம், வருத்தம், வெறுப்பு வெளிப்படுகின்றன. இதோடு சேர்த்து எதிர்பாராத ஒரு சம்பவம் இந்த பார்ட்டியை மறக்க முடியாத ஒன்றாக மாற்றுகிறது.

கோபக்காரிகள்!

ஓரினச்சேர்க்கை, பெண்ணுக்குப் பெண் மீதே வரும் காதல், குழந்தையின்மைக்குப் பதில் சொல்லும் நிர்பந்தம், சினிமாவில் பெண் பயன்படுத்தப்படும் விதம், அலுவலக வேலைகளில் குழந்தையைக் கவனிக்க முடியாதது என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலம் ஒவ்வொரு பிரச்னையைப் பேசியிருப்பதும், ஒருதலைப்பட்சமாக இல்லாமல் அவர்களிடம் இருக்கும் தவறுகள் பற்றியும்  கையாண்டிருக்கிறார் இயக்குநர் பன் நலின்.

‘சேலை கட்டினா மட்டும் எல்லாம் சரியாகிடுமா?', `நைட்ல வெளிய போகக் கூடாது, இந்த மாதிரி டிரெஸ் போடாத... ஏன், பசங்கள ஒழுங்கா வளர்க்கலாம்ல?', `பசங்க மட்டும்தான் சைட் அடிக்கணுமா?' எனப் பொளந்து கட்டுகிறார்கள் கோபக்காரிகள். `செக்ஸ் பற்றி ஏன் பேச மறுக்கிறோம்?’, `ஓரினச்சேர்க்கையால் எந்தக் கலாசாரம் அழியப்போகிறது?’, `பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்ன?' இப்படிப் படம் முழுக்க கேள்விகள் நிறைந்திருக்கின்றன.

`படம் அவ்வளவு ஆபாசமா?' எனக் கேட்டால் ஒரு காட்சி சொல்கிறேன். ஆபாசமா இல்லையா என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

ஃப்ரீடா மௌன விரதம் இருக்கிறாள். அவளது தோழிகளுக்கு, தான் திருமணம் செய்து கொள்ளப்போவது யாரை எனச் சொல்ல வேண்டும். அவள் மணந்துகொள்ளப்போவது ஒரு பெண்ணை. என்னால் என் துணையுடன் உடலுறவு வைத்துக்கொள்ள முடியாது என்பது அவள் கொடுக்கும் க்ளூ. அதை அவள் சைகையில் சொல்கிறாள். இது உங்களுக்கு ஆபாசமாகத் தோன்றுகிறதா...உங்களால்தான் இந்தப் படம்.  இல்லையா? எனில்... உங்களுக்காகத்தான் இந்தப் படம்!

பல திரை விழாக்களிலும் கலக்கிய படத்தை சென்சார் போர்டு பார்த்து அதிர்ந்திருப்பது நன்றாகவே தெரிகிறது. 16 கட், டைட்டில் கார்டு தொடங்கி படத்தில் சில காட்சிகள் வரை வரும் காளி படத்தை ப்ளர் செய்தது என நாம் பார்க்கும் படம் செகண்ட் குவாலிட்டிதான். எதைப் பற்றி எல்லாம் பேசாமல் இருப்பதால் பாலியல் வன்முறைகள் வருகின்றன எனச் சொல்கிறோமோ அதை மீண்டும் ரகசியமாகவே வைக்கச் சொல்லிக் கத்தரித்திருக்கிறது சென்சார்.

அங்கு வெட்டப்பட்ட காட்சிகளை எடுத்து சென்சாருக்கு முன், சென்சாருக்குப் பின் என யூடியூப் வீடியோவாக வெளியிட அது வைரலானது தனிக் கதை.