Published:Updated:

ஷீட் தி வுட்டாலக்கடி கேஸனோவா...

பா.ஜான்ஸன், படம்: பா.காளிமுத்து

`வாடி ராசாத்தி...' பாடல் மூலம் கவனம் ஈர்த்து, `ஷூட் த குருவி...' மூலம் வைரலாகியிருக்கிறார் பாடலாசிரியர் விவேக் வேல்முருகன். 4ஜி வார்த்தைகளோடு விளையாடும் விவேக்கைச் சந்தித்தேன்.

``நான் பண்ற விஷயங்கள் எல்லாமே ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தம் இல்லாமல் இருக்கும். சிவில் இன்ஜினீயரிங் படிச்சேன். பிறகு எத்திராஜ் காலேஜ்ல சிவில் சர்வீஸ் படிக்கிறவங்களுக்கு க்ளாஸ் எடுத்தேன். அந்தச் சமயத்தில் சட்டம் படிக்க ஆர்வம் வந்தது. என் அம்மா விமலா, உயர் நீதிமன்ற நீதிபதி. அப்பா வேல்முருகன்,  வழக்குரைஞர். அதனால பெங்களூர்ல போய் சட்டம் படிச்சுட்டு சென்னையில பிராக்டீஸ் பண்ணிட்டிருந்தேன். இருந்தாலும் லைஃப்ல ஒரு திருப்தி கிடைக்கலை. அப்பதான் வைரமுத்து சாரைச் சந்திக்க வாய்ப்பு கிடைச்சது.

 என் அம்மா பிறந்த நாளுக்காக ஒரு கவிதை எழுதியிருந்தேன். அதை வைரமுத்து சாருக்கும் அனுப்பிவெச்சேன். ‘ஒரு அம்மாவுக்கு மகன் எழுதிய சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று'னு வாழ்த்தினார். அதுக்குப் பிறகுதான் கவிதையையும் தமிழையும் கொஞ்சம் சீரியஸா எடுத்துக்கிட்டேன். என் முதல் கவிதைத் தொகுப்பு ‘வா கடவுள் செய்வோம்’. புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு. புக்கைப் படிச்சுட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சார் என்னைக் கூப்பிட்டார். ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் `பூ அவிழும் பொழுதில்...' பாடலும், `யார் என் மனமா' பாடலும் எழுத வாய்ப்பு தந்தார். அதுக்குப் பிறகு `36 வயதினிலே' படத்தில் எல்லா பாடல்களையும் எழுதினேன். `வாடி ராசாத்தி...' பெரிய ரீச்சானது. இப்படித்தான் ஆரம்பிச்சது என் பயணம்'' - மென்மையாகப் பேசுகிறார் விவேக்.

ஷீட் தி வுட்டாலக்கடி கேஸனோவா...

`` `ஷூட் த குருவி', `டோமரு லார்டு'னு வார்த்தைகள் விசித்திரமா இருக்கே?''

``திட்டமிட்டு எழுதப்பட்ட பாடல்கள்தான் இவை. `ஜில் ஜங் ஜக்' படத்தில் `ஷூட் த குருவி...', `டோமரு லார்டு...', `கேஸனோவா...' மூணு பாடல்களும்  நான் எழுதியிருக்கேன். மூணுமே வேற வேற டைப்ல இருக்கும். `ஷூட் த குருவி...' இசையை வெச்சு எழுதின பாட்டு. `டோமரு லார்டு' பாடல் சென்னை தமிழ்ல லோக்கலா எழுதணும்னு எழுதியது. முதல்ல கேட்டா அதில் வர்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் இல்லைங்கிற மாதிரி தோணும். `அட்டாக் ஆளு வுட்டாலக்கடிமா'னு ஒரு வரி வரும். படத்தில் அட்டாக்னு ஒரு கேரக்டர் இருக்கும். `வுட்டாலக் கடிமா'ங் கிறதுக்கு சென்னை பாஷையில `எடு அந்தக் கம்பை'னு அர்த்தம். `அட்டாக் ஆளு' - கம்பு எடுத்துக்கிட்டு வர்றான்னு அர்த்தம்.

அதேபோலத்தான் `கேஸனோவா' பாட்டும். `ஜேம்ஸ்பாண்ட்’ படத்தில் வர்ற டைட்டில் ட்ராக் மாதிரி ஒரு பாட்டு வேணும்னு சித்தார்த் சொன்னார். முதல்முறை இந்தப் பாடலைக் கேட்டுட்டு `பிடிக்கவே இல்லை, நல்லா இல்லை'னு நிறைய கமென்ட்ஸ் வந்தது. பிறகு, அவங்களே மறுபடி கால் பண்ணி `முதல்முறை நான் தப்பா ஜட்ஜ் பண்ணிட்டேன்’னு சொன்னாங்க. இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி பல விஷயங்களைச் சேர்த்துத் தரும்போது அது எல்லாருக்கும் ரீச் ஆகும்னு சொல்ல முடியாது. ஆனால், யார் டார்கெட்டோ அவங்களைக் கச்சிதமா போய்ச் சேரும்.''

ஷீட் தி வுட்டாலக்கடி கேஸனோவா...

``உங்களுக்குக் கிடைச்ச பெரிய பாராட்டு?''

`` `பூ அவிழும் பொழுதில்...' பாடல் வெளி யானதும் இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டினார்.  `36 வயதினிலே’ படத்தில் `சூரியத் தீயில் ஜோதி வளர்க்கப்போகிறேன்'னு ஒரு வரி. அதைக் கவனிச்ச ஜோதிகா ரொம்பவும் பாராட்டினாங்க. எல்லாப் பாராட்டுகளுக்கும் மேல நான் எது பண்ணாலும் அதுக்கு முழு சப்போர்ட் கொடுக்கிற என் அப்பா, அம்மா, மனைவி மூவருடைய பாராட்டுக்கள்தான் என்னை `அடுத்து என்ன?’ என்பதை நோக்கிக் கொண்டு போகுது.''

`` இனி முழுநேரப் பாடலாசிரியரா?''

`` `இறுதிச்சுற்று’, `இறைவி’, `அரண்மனை-2’, `போக்கிரி ராஜா’, உதயநிதியின் `ஜாலி எல்.எல்.பி' ரீமேக்னு நிறையப் படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கு. அடுத்து என்னன்னு எனக்கே தெரியாத இந்தப் பயணம் ரொம்பச் சுவாரஸ்யமா இருக்கு. இதுதான் முழுநேரமானு இப்போ சொல்லத் தெரியலை. ஆனால், இப்போ இது பிடிச்சிருக்கு!''