Published:Updated:

“நயன்தாரா பிடிக்கும்!”

சர்ப்ரைஸ் சமந்தாசார்லஸ்

மந்தா, இப்போ செம சமத்து டார்லிங். விஜயுடன் `தெறி’, சூர்யாவுடன் `24’, தனுஷுடன் `வடசென்னை’ என பொண்ணு ரொம்ப பிஸி!

``கலகலன்னு நிறையப் படங்கள் பண்ணிட்டு இருந்தேன். எது ஹிட்... எது ஃப்ளாப்? எதுவும் தெரியாது. தமிழ், தெலுங்கு இரண்டிலும் பிஸியாக ஓடினேன். ஒருநாள் கௌதம் வாசுதேவ் மேனன் சார் `நீ ரொம்பத் தப்புப் பண்ற. நீ செலெக்ட் பண்ற படங்கள் சரியில்லை’னு சொன்னார். என்னை ஒரு முழு நடிகையா மாத்தினவர் அவர். அவர் சொன்னது எனக்கு ரொம்ப டிஸ்டர்பிங்கா இருந்தது. சரியான கதைகளைத் தேர்ந்தெடுத்தேன். அவர்தான் இந்த மாற்றத்துக்குக் காரணம்.’’

‘‘ `சமந்தா இப்போ நல்லா நடிக்கிறாங்க'னு நிறைய பாசிட்டிவ் ரிவியூஸ் வருதே?’’

‘‘எல்லா பாராட்டுகளும் என் டைரக்டர்ஸுக்குத்தான். ராஜமௌலி சார், த்ரிவிக்ரம் சார், ஏ.ஆர்.முருகதாஸ் சார், கௌதம் வாசுதேவ் மேனன் சார்னு நல்ல டைரக்டர்ஸ்கூட வொர்க் பண்ண கிடைச்ச வாய்ப்புகள்தான், என்னை ஒரு நல்ல நடிகையா மாத்தியிருக்கு.’’

 “நயன்தாரா பிடிக்கும்!”

‘‘விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ்னு தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் படம் பண்றீங்க. எப்படி இருக்கு அந்த அனுபவம்?’’

‘‘பெரிய நடிகர்களோடு நடிக்கிறதுதான் ஈஸியான விஷயம். செம புரொஃபஷனலா இருப்பாங்க. ஈகோ, பந்தா எதுவுமே இருக்காது. நடிகைகளுக்கு நல்ல மரியாதை கொடுப்பாங்க. விஜய், தனுஷ், சூர்யானு திரும்பத் திரும்ப படம் பண்றேன்னா, அவங்களுக்கு என்னோட வொர்க் எதிக்ஸ் பிடிச்சிருக்குன்னுதானே அர்த்தம்? எனக்கும் அவங்களோடு வேலைசெய்றது ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனால்தான் அவங்களோடு அடுத்தடுத்து படங்கள் நடிக்கிறேன்.''

‘‘உங்கள் ரோல்மாடல் யார்?’’

‘‘ரேவதி மேடம்!’’

‘‘இப்போதைய நடிகைகளில் யார் நல்லா நடிக்கிறாங்க?’’

‘‘நயன்தாரா! அவங்க சரியான படங்களை செலெக்ட் பண்ணி ரொம்ப நல்லா நடிக்கிறாங்க. அவங்க கேரக்டர்ஸ் ஒவ்வோரு படத்திலும் அழகழகா, வித்தியாசமா அமையுது.’’

‘‘உங்க நண்பர் நடிகர் சித்தார்த் வெள்ள நிவாரணங்களில் நேரடியா இறங்கி வேலைசெய்தார். அவர்கிட்ட பேசினீங்களா?’’

‘‘நிச்சயம் பாராட்டப்படவேண்டிய விஷயம். சித்தார்த் மட்டுமா... நிறையப் பேரு ஹெல்ப் பண்ணியிருக்காங்க. எல்லோருமே இங்கே ஹீரோஸ்தான்.’’

‘‘நீங்களும் சித்தார்த்தும் ட்விட்டர்ல சண்டை போட்டுக்கிட்டீங்கனு ஒரு நியூஸ் வந்ததே?’’

``ப்ளீஸ் வேண்டாம். இப்போதைக்கு என் கவனம் முழுக்க முழுக்க சினிமாவில் மட்டும்தான் இருக்கு. மற்ற விஷயங்கள் பற்றி யோசிக்க நேரம் இல்லை!’’

சமந்தா டிட் பிட்ஸ்!

* சமந்தா என்றால் 'கடவுள் அவர்கள் கோரிக்கையைக் கேட்டார்' என அர்த்தம்.

* சமந்தாவுக்கு, டேவிட், பிரபு என இரண்டு அண்ணன்கள்.

* ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பி.காம் படித்திருக்கிறார்.

* மெரினா, பெசன்ட் நகர் என சென்னை கடற்கரைகளில் நள்ளிரவில் நடப்பது சமந்தாவின் ரிலாக்ஸ் ரெசிப்பி.

* அசைவப்  பிரியர். தினமும் மீன் சாப்பிடப் பிடிக்கும்.