Published:Updated:

போர் வீரனின் காதலி!

கார்க்கிபவா

பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் கனவு சினிமா `பாஜிராவ் மஸ்தானி’.
 
மராத்திய சாம்ராஜ்யத்தின் முக்கியமான தளபதி பாஜிராவ் (ரன்வீர் சிங்). அவனது மனைவி காஷிபாய் (பிரியங்கா சோப்ரா). ஒரு சண்டையில் அறிமுகம் ஆகும் முஸ்லிம் இளவரசியான மஸ்தானி (தீபிகா) மீது பாஜிராவுக்குக் காதல் வருகிறது. அவளை இரண்டாவது திருமணமும் செய்துகொள்கிறான். ஒரு பக்கம் மராத்திய சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரிக்கும் போர். இன்னொரு பக்கம், மஸ்தானியை ஏற்க மறுக்கும் குடும்ப உறுப்பினர்களுடன் மனதளவில் போர் என தவிக்கிறான். காதலும் கடமையும் என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்.

போர் வீரனின் காதலி!

பாஜிராவ் அறிமுகம் ஆகும் முதல் காட்சியிலேயே தனது ‘ஸ்டிக்கரை’ ஒட்டிவிடுகிறார் இயக்குநர். மண்ணைக் குவித்து அதில் ஒரு மயில் இறகை நட்டு, தூரத்தில் இருந்து அம்பு எய்து, அதை இரண்டாக்க வேண்டும். பாஜிராவின் அம்போ மண்ணுக்குள் நுழைந்துவிடுகிறது. அவையினர் சிரிக்க, மயில் இறகை எடுக்கச் சொல்கிறான் பாஜிராவ். மண்ணுக்குள் புதைந்திருந்த மயில் இறகின் தண்டு இரண்டாகியிருக்கிறது. வீரமும் விவேகமும் பாஜிராவின் கண்கள்.

இது தீபிகாவின் படம். மஸ்தானியைப் பார்க்க டைம் மெஷின் ஏறிப்போனால், அங்கேயும் தீபிகாவே வாழ்வாரோ என நினைக்கவைக்கிறார். காதலோ, கடமையோ, கருணையோ... கண்கள் மூலமே சொல்லிவிடுகிறார். தனக்குக் காட்சிகள் குறைவு எனத் தெரிந்தும் நடித்திருக்கிறார் பிரியங்கா. ஆனால், நடிப்பில் குறைவைக்கவில்லை.

பரபரவென கதை சொல்வது பன்சாலி வழக்கம் அல்ல. மெதுவாக விரியும் திரைக்கதை நம் கைப்பிடித்து மன்னர் காலத்துக்கும் மராத்திய பூமிக்கும் அழைத்துச்செல்கிறது. தெளிவான ஒளிப்பதிவு, தெறிக்கவிடும் சண்டைக் காட்சிகள், மின்னும் உடைகள், மிரளவைக்கும் கலை என இமைக்காமல் பார்க்கவைக்கிறார் இயக்குநர்.

மெதுவாக நகர்வது ஒரு பிரச்னை அல்ல என்றால், பாஜிராவைச் சந்தித்துவிடுங்கள். அது ஒரு `வாவ்’ அனுபவமாக இருக்கும்!

பாலிவுட் பாட்ஷா

கொஞ்சம் `பாட்ஷா’, கொஞ்சம் `தர்மத்தின் தலைவன்’, கலர் கலர் கார்கள், துப்பாக்கி, தோட்டா, சண்டை என கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு இறக்கிவைத்தால் `தில்வாலே’ ரெடி.
‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ப்ளாக்பஸ்டருக்குப் பிறகு ஷாரூக் கான்-ரோஹித் ஷெட்டி இணைந்திருக்கும் படம். ஜோடியாக கஜோல் ரீஎன்ட்ரி தனி ஸ்பெஷல்.

கோவாவில் கார் கேரேஜ் வைத்திருக்கும் சாதுவான ஆள் ராஜ்(ஷாரூக்). அவரது தம்பி வீர் (வருண் தவான்). இஷிதாவைப் (க்ரித்தி சனோன்) பார்க்கும் வருணுக்கு கண்டதும் லவ். க்ரித்தி சனோனும் ஒரே பாடலில் வருணின் லவ் ரெக்வெஸ்ட்டை டிக் அடிக்கிறார். இவர்கள் காதல் ஒருபுறம் வளர்வதற்குள், ஷாரூக்கின் `பாட்ஷா’ ஃப்ளாஷ்பேக்குக்குச் செல்கிறது படம்.

போர் வீரனின் காதலி!

 பல்கேரியாவில் மிகப் பெரிய டான் காளி (ஷாரூக் தான்). ஒரு சேஸிங்கின்போது ஷாரூக்கின் கார், கஜோல் மீது மோத, அது காதலில் சென்று முடிகிறது. கஜோல் யார் தெரியுமா? ஷாரூக் கும்பலுக்கு எதிரியாக இருக்கும் கேங்லீடர் தேவ் மாலிக்கின் மகள். ஷாரூக்கை அழிக்கவந்த வைரஸ்தான் கஜோல். சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் தந்தையைக் கொன்றது ஷாரூக் என நம்பும் கஜோல், ஷாரூக்கை டுமீல் டுமீல். சிகிச்சையில் உயிர்பிழைக்கும் ஷாரூக், கோவாவுக்கு வந்து மாணிக்கமாக ஆட்டோ ஓட்டுகிறார்... ஸாரி ராஜ் ஆக மாறி கேரேஜ் நடத்துகிறார். 

தம்பி வருணின் காதல் ஷாரூக்குக்குத் தெரியவர, க்ரித்தியின் வீட்டுக்குச் செல்கிறார். ஆம்... கஜோலின் தங்கச்சிதான் க்ரித்தி. `ஒரு கழுதைக்கோ காட்டெருமைக்கோ என் தங்கையைக் கட்டி வெச்சாலும் வெப்பேன். ஆனா, உன் தம்பிக்குக் கட்டிவைக்க மாட்டேன்’ என கஜோல் சீறுகிறார். இரண்டு காதல் ஜோடிகளும் இணைந்தார்களா என்பதே மீதிக் கதை.

நோக்கியா-1100 போல அரதப்பழசான கதை. நெட் இல்லாத ஸ்மார்ட்ஃபோன் போல, விறுவிறுப்பு இல்லாத திரைக்கதை, ஆனால், எல்லா குறைகளையும் ஒற்றை ஆளாகக் சமாளிக்கிறது ஷாரூக்கின் ஸ்கிரீன் பிரசன்ஸ். தம்பி மீது பாசம், ஆக்‌ஷனில் ஆசம், காதலி செய்யும் மோசம் என எல்லாவற்றுக்கும் ஷாரூக் காட்டும் எக்ஸ்பிரஷன் சம்திங் சம்திங். கஜோலின் ரீஎன்ட்ரி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்.

ஷாரூக் வாலேக்களுக்கு மட்டுமே பிடிக்கும் இந்த `தில்வாலே’.

- பா.ஜான்ஸன்