2015 ஸ்பெஷல்
Published:Updated:

பசங்க - 2 - சினிமா விமர்சனம்

பசங்க - 2 - சினிமா விமர்சனம்

சோட்டா பீம், டோரா, ஆண்ட்ராய்டு தலைமுறைக் குழந்தைகளின் சேட்டை சாம்பிள் இந்த ‘பசங்க - 2’.

அன்லிமிடெட் அட்டகாசம், டூமச் புத்திசாலித்தனம் கொண்ட நிஷேஷ், வைஷ்ணவியை, அவரவர் பெற்றோர் சமாளிக்க முடியாமல் திண்டாடி விடுதியில் சேர்க்கிறார்கள். அங்கு இருந்தும் விடுதலையாகி வருபவர்களை, குழந்தைகள் மனநல மருத்துவர் சூர்யா அரவணைத்துக் கொள்கிறார். பிரச்னை, குழந்தைகளிடம் அல்ல... பெற்றோர்களிடம்தான் என உணர்த்துகிறார். அது என்ன பிரச்னை... என்ன தீர்வு... இதுதான் படம்!

அரசாங்கப் பள்ளிக்கூடம், கம்மர் கட், ஓட்டப் பந்தயம் என ‘பசங்க’ எடுத்த பாண்டிராஜ், தனியார் கான்வென்ட்கள், ஆப்பிள் ஐபேடு, ஆங்கிரி பேர்டு என சிட்டி சுட்டிகளின் உலகத்தை வெர்ஷன் 2.0 ஆக்கி, ‘குழந்தைகள் படம்’ லேபிளில் பெற்றோர்களுக்குப் பாடம் சொல்லியிருக்கிறார்.  

குறும்புச் சேட்டை, விஷமப் பார்வையுடனே வைஷ்ணவி, நிஷேஷ் இருவரும் துறுதுறுவென மொத்தப் படத்தையும் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். முனிஸ்காந்த் - வித்யா, கார்த்திக் குமார் - பிந்து மாதவி தம்பதிகளுடன் தங்களைப் பொருத்திக் கொள்ளும் பெரும்பாலான பெற்றோர்கள், சூர்யா - அமலா பால் போல இருக்க வேண்டும் என நினைக்கவைக்கிறது மூன்று ஜோடிகளின் பாத்திரப் படைப்பும் நடிப்பும்!

பசங்க - 2  - சினிமா விமர்சனம்

சமூக அந்தஸ்துக்காக கான்வென்ட்களில் சேர்க்கப் போராடும் பெற்றோர்கள், பள்ளிக்கூட அறைகளை சுவாரஸ்யம் இல்லாத பட்டறைகளாகக் கருதும் குழந்தைகள் என நிதர்சனத்தை பளிச்சென உணரவைத்திருக்கி றார்கள். ஆனால், தீர்வாகச் சொல்லப்படுவ தென்னவோ நீதிக்கதை அறிவுரைகள்தான்.

ஆனால், அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைப்பர் ஆக்டிவிட்டி(ADHD) சிக்கல் குறித்து பயமுறுத்தாமல்

பசங்க - 2  - சினிமா விமர்சனம்

விவரித்ததற்கு ஹாட்ஸ் ஆஃப். `குழந்தைங்க கெட்டவார்த்தை பேசுறதில்லை; கேட்ட வார்த்தையைத்தான் பேசுறாங்க!’, ‘குழந்தைகளுக்கு ப்ராப்ளம் இல்லைன்னாதான் ப்ராப்ளம்...’ பல பளிச்... சில சமூக வலைபாய்ந்த வசனங்கள். படத்துக்கு ஏற்ற அரோல் கொரேலியின் இசை, குழந்தைகளின் உலகத்துக்குள் புகுந்து கலர்ஃபுல்லாக ஒளிப்பதிவு செய்த பாலசுப்பிரமணியெம் என அனைத்தும் பக்கா காம்போ.  

ஒருவேளை படம் பார்க்கும் குறும்புக்காரக் குழந்தைகள், ‘நாம சரியா இருக்கோம். அப்பா-அம்மாதான் திருந்தணும்’ என நினைத்துவிட்டால்? ஆனாலும், தமிழகப் பெற்றோர்கள் தினசரி எதிர்கொள்ளும் சுவாரஸ்யமான சங்கடங்களை, உள்ளது உள்ளபடி சொல்லிய விதத்தில் ஈர்க்கிறான் இந்தச் சேட்டை சுட்டி!

- விகடன் விமர்சனக் குழு