Published:Updated:

“இளையராஜா சொன்னது பிடிச்சிருந்தது!”

சார்லஸ், ம.கா.செந்தில்குமார்

“இளையராஜா சொன்னது பிடிச்சிருந்தது!”

சார்லஸ், ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
“இளையராஜா சொன்னது பிடிச்சிருந்தது!”

‘நெஞ்சே எழு’ ரஹ்மான்

‘‘இந்தப் பெருமழை சமயம் நான் மும்பையில் இருந்தேன். தரைவழி, வான்வழியாகக்கூட வர முடியாத நிலை. என் வீட்டின் தரைத்தளத்தில் இருந்த ரிக்கார்டிங் ஸ்டுடியோ முழுக்கத் தண்ணீர். இப்ப அதை புதுசா கட்டமைக்கிறோம். இதேபோல நம் மக்கள் பலருக்கும் பல பாதிப்புகள். அவர்களுக்கு என்னால் முடிந்த ஆறுதலும் தேறுதலும்தான் இந்தத் தொடர் இசை நிகழ்ச்சி, ‘நெஞ்சே எழு’ ’’ - நிசப்த அறையில் நிதானமாக ஒலிக்கிறது ஏ.ஆர்.ரஹ்மானின் குரல்.

‘நெஞ்சே எழு’ என்ற தலைப்பில் தமிழக நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தவருகிறார் ரஹ்மான். இதன் மூலம் கிடைக்கும் நிதியின் ஒரு பகுதி வெள்ள நிவாரணத்துக்குச் செல்ல உள்ளது.

‘‘இந்த மழை வெள்ளத்தில் தன்னார்வலர்களின் மனிதநேய உதவிகளையும் மக்களின் ஒற்றுமையையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘பெருமைப்படுகிறேன்! மனிதாபிமானத்துக்கான எடுத்துக் காட்டாக ஒட்டுமொத்த தமிழ்நாடும் மாறியிருக்கிறது. இந்த மழைக்கு முன்னர் வரை இந்தியா ஒரு குழப்பநிலையில் இருந்தது. பிரிவினைப் பேச்சுகள் அதிகமாகக் கேட்டுக்கொண்டு இருந்தன. ஒரு பெரிய பிரச்னை, ஒரு பேரிடர் வரும்போது அதை எப்படிக் கையாள்வது என்பதை மக்கள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு நின்றதன் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவுக்கே தமிழ்நாடு உணர்த்தியிருக்கு. சாதி, மதங்களின் பேரைச் சொல்லி நம்மைப் பிரிக்கப்பார்த்தவர்களைத் தலைகுனிய வெச்சிருச்சு நம் மக்களின் ஒற்றுமை. இன்னும் ஒரு முக்கியமான விஷயம், நம் வேலையை நாம் பண்ணினால் வெளியில் இருந்து யாரையும் எதிர்பார்க்கத் தேவை இல்லைங்கிற உண்மையையும் இந்த வெள்ளம் புரிய வெச்சிருக்கு.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இளையராஜா சொன்னது பிடிச்சிருந்தது!”

‘‘உங்க ஃபவுண்டேஷன், கே.எம்.கன்சர்வேட்டரி இசைப் பள்ளி... இசையைத் தாண்டி எந்த அளவுக்கு இவற்றில் நேரம் செலவிட முடிகிறது?’’

‘‘இந்த மாதிரி உதவிகளும் மனிதநேயமும்தான் நம்மை உயிர்ப்போடு வெச்சிருக்கு. கே.எம்.கன்சர்வேட்டரியை என் தங்கை ஃபாத்திமா தான் கவனிச்சுக்குறாங்க. ஃபாரின்ல கன்சர்வேட்டரினா ஒரு வரையறை இருக்கு. ஆனா, நம் ஊர்ல இது புதுசு. நம் கலாசாரத்துக்கு ஏற்ற மாதிரி நாம்தான் அதை உருவாக்கணும்; வளர்த்தெடுக்கணும். எனக்கு ஒரு நல்ல ஆர்க்கெஸ்ட்ரா கொண்டுவரணும்னு ஆசை. பொருளாதாரத்தில் பின்தங்கிய எழுபது எண்பது பேருக்கு இலவசமா இங்கே இசை கத்துக்கொடுத்துட்டிருக்கோம். அவங்களைவெச்சே ‘சன்ஷைன் ஆர்க்கெஸ்ட்ரா’ என்ற பெயரில் இசைக்குழு ஒண்ணு தொடங்கியிருக்கோம். அதில் உள்ள பத்து பசங்க, என்கூட ‘நெஞ்சே எழு’ ஷோவில் வாசிக்கப்போறாங்க. கே.எம்.கன்சர்வேட்டரியில் படிக்கிற சின்னப்பசங்க ரொம்ப நல்லா இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் வாசிக்கிறாங்க. 15 வருஷம் கஷ்டப்பட்டுக் கத்துக்கிட்டு வாசிக்கிறதை ரொம்ப சர்வசாதாரணமா ரெண்டு, மூணு வருஷங்கள்ல பண்ணிடுறாங்க. அதுக்கு உதாரணம் ஜேக்கப் சாமுவேல், லிடியன் நாதஸ்வரம். யூடியூப் போய் பாருங்க, நான் சொல்றது உண்மைனு உங்களுக்கே புரியும்.’’

‘‘சூப்பர்... உங்க இசைக்கு வருவோம்... ‘ரோஜா’ டு ‘ஓ காதல் கண்மணி’... இந்தப் பயணம் எப்படி இருக்கிறது?’’

‘‘நீங்க சொன்ன பிறகுதான் நான் இசைத் துறைக்கு வந்து 20 வருடங்களுக்கு மேல ஆச்சுனு தோணுது. ஆனால், எனக்கு அப்படி ஒண்ணும் தெரியலை (சிரிக்கிறார்). இன்னும் கொஞ்ச வருஷம் போன பிறகுதான் இதெல்லாம் தெரியும்னு நினைக்கிறேன். நான் இசையில் இன்னும் கத்துக்கவேண்டியது நிறைய இருக்கு. அதுதான் தினமும் மனசுல தோணும். கிளாசிக்கல் மியூஸிக்கை இன்னும் ஆழமாக் கத்துக்கணும்.”

‘‘ இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசைபோல அடுத்த தலைமுறைக்கான தனித்துவமான மியூஸிக் ஸ்டைல் இன்னும் இங்கே  வரவில்லையோ?’’

‘‘இப்ப மூவி மேக்கிங்கே மாறிடுச்சே. இப்ப யாரும் பாரம்பர்யமான முறையில் படம் பண்றது இல்லையே. ஜனங்ககிட்ட இருந்த அந்த இன்னொசென்ஸ் இப்ப இல்லை. முன்னாடி ஒரு இங்கிலிஷ் படம் பார்க்கணும்னா, சஃபயர் தியேட்டர் போகணும். இப்ப நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், டி.வி.டி-னு வீட்டுக்குள்ளேயே பாலிவுட், ஹாலிவுட்னு எல்லாம் வந்துருச்சு. யெஸ்... இங்க சவால்கள் அதிகமாயிருச்சு. ரசனைகள், தேவைகள் மாறிட்டே இருக்கு. ஆனா, இதுக்கிடையிலும் எல்லாரும் நல்லாவே பண்றாங்க.’’

“இளையராஜா சொன்னது பிடிச்சிருந்தது!”

‘‘ஜி.வி.பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், அனிருத்  போன்ற இளைஞர்களின் இசையைக் கவனிப்பது உண்டா?’’

‘‘புது மனிதர்கள், இளைஞர்கள் இண்டஸ்ட்ரிக்குள் வர்றது ரொம்ப நல்ல விஷயம். முன்னாடி இருந்ததைவிட இப்ப எல்லாரும் ரொம்ப வளர்ந்திருக்காங்க.

10 வருஷத்துக்கு முன்னாடி நான் பார்த்த இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் எல்லார்கிட்டயும் நல்ல முன்னேற்றம் இருக்கு. இசையைப் பற்றிய அறிவு இருக்கு. புதியவர்களின் இசையில் ஒரு எளிமை இருக்கு. ஆனா சிலர் இன்னும் பழைய மாதிரியே இருக்காங்க.”

‘‘தமிழ்ப் படங்கள் பார்க்கிறீர்களா, சமீபத்தில் என்ன படம் பார்த்தீர்கள்?’’

‘‘என்னை தியேட்டருக்குக் கொண்டு போவது ரொம்ப ரொம்பக் கஷ்டம். கடைசியா பார்த்தது ‘பாகுபலி’. ‘பாஜிராவ் மஸ்தானி’ டிரெய்லர் பிடிச்சிருந்தது. அந்தப் படம் பார்க்கணும். 2016-ம் ஆண்டு ஆஸ்கருக்கு 50-க்கும் மேலே படங்கள் தேர்வாகியிருக்கு. வோட்டிங் ஆரம்பிச்சிருச்சு. அந்தப் படங்கள் எல்லாம் பார்க்கணும்.”

‘‘இப்போதைய இயக்குநர்களில், ‘இவர் நல்ல படங்களா பண்றார். இவரோட ஒரு படம் பண்ணணும்’னு யாராவது நினைக்கவைத்திருக் கிறார்களா?’’

‘‘ ‘ஜிகர்தண்டா’ பார்த்தேன். பிடிச்சிருந்தது. வயலன்ஸ் கொஞ்சம் ஜாஸ்தி இருந்தாலும் சில மொமன்ட்ஸ் ரொம்ப பொயட்டிக்கா இருந்தது. படம் பார்த்த பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரெண்டு மூணு முறை மீட் பண்ணிப் பேசினார். இப்ப ‘ஒய்.எம் மூவிஸ்’ங்கிற பேர்ல ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சிருக்கேன். அதில் முதல் கட்டமா ஒரு இந்திப் படம், ரெண்டு தமிழ்ப் படங்கள் பண்றோம். மூணுமே மியூஸிக்கல் சப்ஜெக்ட். இந்திப் படத்தை விஷ்வேஷ் கிருஷ்ண மூர்த்தி இயக்குகிறார். தமிழ்ப் படங்களைப் பற்றி அடுத்தடுத்த மாதங்கள்ல சொல்றேன்.’’

‘‘ஹாலிவுட் பட  வேலைகள் எப்படிப் போய்க்கொண்டிருக் கின்றன?’’

‘‘கால்பந்து வீரர் ‘பீலே’ பற்றிய ஒரு பிரேசிலியன் படத்துக்கு மியூஸிக் பண்ணியிருக்கேன். அடுத்து ‘மொஹமத்’ ஈரானியப் படம். ஐந்து வருஷங்கள் ஹாலிவுட்ல இருந்தாச்சு. 2016 முழுக்க சென்னையில்தான் இருப்பேன். இல்லைனா, அப்புறம் ‘இவர் யார்?’னு கேட்க ஆரம்பிச்சிருவாங்க. இந்த வருஷம் கௌதம் மேனன் படமும், சூர்யா படமும் ரெடி. ஷங்கரின் ‘2.0’ இருக்கு. தவிர படத் தயாரிப்பிலும் என் கவனம் அதிகமா இருக்கும்.’’

‘‘உங்கள் குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோ வந்துவிட்டாரே. ஜி.வி.பிரகாஷ் நடிச்ச படங்களைப் பார்த்தீர்களா?”

‘‘இன்னும் பார்க்கலை. ஆனா பயங்கரமா நடிக்கிறார்னு சொல்றாங்க. ‘வெர்ஜின் பசங்க சாபம் சும்மா விடாது’னு ஒரு டயலாக் யூடியூப்ல பார்த்தேன். அதைவெச்சு நிறைய டப்ஸ்மாஷ்லாம் பண்ணியிருந்தாங்கல்ல... இன்ட்ரெஸ்ட்டிங்.”

‘‘உங்கள் பையன் அமீன் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் பாடிய பாடலுக்கு நல்ல நல்ல கமென்ட்ஸ் வந்ததே... அவருக்கு எதில் ஆர்வம்?’’

‘‘இப்போதைக்கு ப்ளே ஸ்டேஷன் விளையாடுறதுலதான் தீவிரமா இருக்கார். சார், இப்போ நல்லா படிக்கிறார். மத்த விஷயங்களை அப்புறம் பார்ப்போம்.’’

“இளையராஜா சொன்னது பிடிச்சிருந்தது!”

‘‘ஆடியோ ரிலீஸான அடுத்த நிமிடமே, ‘இது இங்க இருந்து சுட்டது’, `அது அந்த இங்கிலீஷ் ஆல்பம் காப்பி’னு விமர்சனங்கள் வந்துவிடுகின்றன. இந்த காப்பி - பேஸ்ட் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

‘‘ஒருகட்டத்துல எல்லாருக்கும் அப்படித்தான் தோணும். எஸென்ஸ் புரிஞ்சதுன்னா, அப்பட்டமான காப்பிக்கும் இன்ஸ்பிரேஷனுக்கும் வித்தியாசம் புரிஞ்சுப்பாங்க. அப்பட்டமா காப்பியடிக்கிறது என்பது வேறு... இன்னொரு மியூஸிக்கின் பாதிப்பு இருப்பது என்பது வேறு. சில நேரங்கள்ல பீட்ஸ் ஒரே மாதிரி இருக்கும். நான் கம்போஸ் பண்ண ஆரம்பிச்ச புதுசுல எனக்கும் அப்படித்தான் தோணும். கம்போஸ் பண்ணிட்டிருக்கும்போதே, இது ‘ஜனகனமண’ மாதிரியே இருக்குல்ல’னு விதவிதமான குழப்பங்கள் வரும். ஆனால் மனசுக்குள்ள இருந்து மியூஸிக் பண்ண ஆரம்பிக்கும்போது, இந்தப் பிரச்னைகள் வராது. கிரியேட்டிவ் மைண்ட் வேலைசெய்ய ஆரம்பிச்சுட்டா, மற்ற விஷயங்களைத் தேடவேண்டிய அவசியம் இருக்காது.’’

‘‘2015-ம் ஆண்டின் முக்கியமான இசை இழப்புகளில் ஒன்று எம்.எஸ்.வி...’’

‘‘தமிழ் சினிமா இசைக்கு அவர் ஒரு ஆக்ஸிஜன் மாதிரி. எம்.எஸ்.வி-ராமமூர்த்தி சார் இருவருக்கும் ஒரு டிரிபியூட் பண்ணணும்னு ஆசை. அதுவும் குறிப்பா அவங்க மெலடியை மட்டும் எடுத்துக்கிட்டு... விரைவில் அது நடக்கும்.’’

‘‘சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கிறீர்கள்... அதில் மற்ற விஷயங்களையும் பார்ப்பது உண்டா?’’

‘‘அமெரிக்கா, லண்டன்னு ரொம்பத் தள்ளிப்போய் ‘ஜெய் ஹோ’ டூர் பண்ணிட்டி ருந்தப்போ, நான் என்ன பண்றேன்னு நம் மக்களுக்குச் சொல்லணும்னு விளையாட்டா ஆரம்பிச்சதுதான் ட்விட்டர், ஃபேஸ்புக். அது அப்படியே பழகிருச்சு. மத்த விஷயங்கள் எதையும் படிக்கிறது இல்லை. என் ஸ்டேட்டஸுக்கு வர்ற கமென்ட்ஸைப் படிப்பேன். சொல்ல முடியாது... திடீர்னு ஒருநாள் டீஆக்டிவேட் பண்ணாலும் பண்ணிருவேன்.’’

‘‘இளையராஜாவின் 1,000-வது படம் ‘தாரை தப்பட்டை’. உங்களின் ஆரம்ப காலத்தில் அவருடன் பயணப்பட்டிருக்கிறீர்கள். அதைப் பற்றி...’’

‘‘முதல் ஒன்றரை வருஷம் அவர்கூடத்தான் வொர்க் பண்ணினேன். சமீபத்தில் அவர் கோவாவில் சொன்ன ஒரு விஷயம் ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘எல்லா பள்ளி மாணவர் களுக்கும் இசையைக் கத்துக்கொடுக்கணும்’னு சொல்லியிருந்தார். அதை 100 சதவிகிதம் நான் சப்போர்ட் பண்றேன். மியூஸிக் கத்துக்கிறவங்களோட மனநிலை வேற மாதிரி இருக்கும். வார்த்தைகளில் சொல்றதைவிட மியூஸிக்ல இன்னும் நல்லா எக்ஸ்பிரஸ் பண்ண முடியும். யெஸ்... மியூஸிக் இஸ் வெரி பவர்ஃபுல்.’’

‘மரியான்’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘நெஞ்சே எழு’ பாடலை வரிகள் மாற்றி, மழை வரிகள் சேர்த்து ‘நெஞ்சே எழு’ கான்சர்ட்டின் தீம் பாடலாக மாற்றியிருக்கிறார். நாம் கேட்டதும் அந்தப் பாடலை தன் ஐபோனில் ஓடவிடுகிறார்.

‘ஆயிரம் கனவுகள் கலைந்தாலும்
இருளால் காலம் உறைந்தாலும்
கண்ணீர் நதியாய் ஆனாலும்
தூங்கும் நகரம் மிதந்தாலும்
தமிழா நாமும் இணைந்தோமே
மீண்டும் எழுவோமே
நெஞ்சே எழு... நெஞ்சே எழு’!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism