பா.ஜான்ஸன்
ஹீரோயின் ஃப்ரெண்ட்ஸுக்கும் ஃபேன் பேஜ் ஆரம்பிக்கும் சீஸன் இது. ‘நயன்தாராகூட வந்தப் பொண்ணைக் கவனிச்சியா?’, `ஸ்ருதியைவிட அந்தப் பொண்ணுதான்டா ஹாட்...’ என வாட்ஸ்அப்களில் வைரலாகி லைக்குகளை வாரிக் குவிக்கிறார்கள் இந்த நண்பிகள். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில கதாநாயகித் தோழிகளின் பயோடேட்டா இங்கே!
பூர்த்தி
`தங்கமகன்’ படத்தில் ஏமி ஜாக்சனின் நிழல் இவர். ஏமி ஜாக்சனுக்குக் குவிந்த ரசிகர்களின் லைக்குகளில் பாதி, தனக்கும் ஷேர் ஆனதில் பூர்த்தி செம ஹேப்பி.
‘‘நான் பக்கா சென்னைப் பொண்ணு. குழந்தையா இருக்கும்போதே பவுடர் விளம்பரத்துல நடிச்சிருக்கேன். கல்லூரி நாட்கள்ல நிறைய விளம்பரங்கள்ல நடிக்க ஆரம்பிச்சு, இதுவரைக்கும் 800-க்கும் அதிகமான விளம்பரங்கள்ல நடிச்சிட்டேன். நான் நடிக்கிற விளம்பரங்களுக்கு நானே காஸ்டியூம் டிசைனிங் பண்ண ஆரம்பிச்சேன். அப்படித்தான் ‘டிமான்டி காலனி’ படத்தில் காஸ்டியூம் டிசைனர் வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் `எனக்குள் ஒருவன்’ ஹீரோயினுக்கு மட்டும் காஸ்ட்யூம் டிசைன் பண்ணினேன்.

‘தங்கமகன்’ படத்துல ஏமி ஜாக்சனுக்கு காஸ்டியூம் டிசைன் பண்ணப் போனப்பத்தான் ஏமிக்கு ஃப்ரெண்டா நடிங்க’னு தனுஷ் சார் சொன்னார். சரி... முயற்சி பண்ணலாமேனு நடிச்சதுதான்.
ஏமி இப்போ எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட். நானும் ஏமியும் சேர்ந்துதான் படம் பார்த்தோம். படம் முடிஞ்சு வெளிய வந்தப்போ ஏமி முன்னாலயே என்னைப் பாராட்டினாங்க. எனக்கு பயங்கர கூச்சமாப்போச்சு. ஃபேஸ்புக்ல என்னைப் பாராட்டி, கலாய்ச்சி... சில மீம்ஸ்கூட வந்தது. தனுஷ் சாருக்கு போன் பண்ணி, `சார்... எல்லாரும் என்னைக் கலாய்க்கிறாங்க’னு சொன்னேன். ‘என் முதல் படத்துக்கு என்னைக் கலாய்ச்சதைவிடவா?’னு கேட்டுச் சிரிச்சார். தனுஷ் சாரே சொன்னதுக்கு அப்பறம் என்ன... தமிழ்நாட்டுல, தீபிகா படுகோன் தோக்கலாம்; காத்ரினா கைஃப் தோக்கலாம்; பிரியங்கா சோப்ரா தோக்கலாம்; ஆனா, பூர்த்தி தோக்க மாட்டா!”
பூஜா
எஸ் எஸ் மியூஸிக் பூஜா, விரைவில் ஹிரோயினும்கூட.

‘‘அஞ்சு வருஷம் வி.ஜே-வா இருந்தேன். முதலில் மலையாளப் படத்துலதான் நடிச்சேன். நடிப்பைத் தொடரலாமா... வேணாமானு யோசிச்சிட்டு இருந்தப்பதான் ‘காதலில் சொதப்புவது எப்படி?’ பட வாய்ப்பு வந்தது. அதுல நடிக்க ஆரம்பிச்ச பிறகு நடிப்பு ரொம்பப் பிடிச்சிருச்சு.
ஒரே மாதிரி ரோல் இல்லாம தேர்ந்தெடுத்து நடிக்க ஆசை. மத்தபடி ஹீரோயின் ஃப்ரெண்டா நடிக்கிறேன், செகண்ட் லீடா நடிக்கிறேன்னு எந்த விஷயத்தையும் மனசுல நிறுத்திக்கிறது இல்லை. ‘குக்கூ’ மாளவிகா மாதிரி ஒரு கேரக்டர் ரோல் பண்ண ஆசை!’’
தன்யா பாலகிருஷ்ணா
`ஏழாம் அறிவு’, `ராஜா ராணி’, `நீதானே என் பொன்வசந்தம்’ படங்களில் கவனம் ஈர்த்தவர் தன்யா பாலகிருஷ்ணா.
‘‘படிச்சதே சினிமா சம்பந்தமான படிப்புதான். நாலு வருஷம் சென்னையில தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா இருந்தேன். அப்ப ஒரு நாடகத்துல என் நடிப்பைப் பார்த்துட்டு ஏ.ஆர்.முருகதாஸ் சார் அசோஸியேட் ஆடிஷனுக்குக் கூப்பிட்டார். அந்தப் படம் ‘ஏழாம் அறிவு’. அங்க இருந்துதான் நடிப்பு ஆரம்பமாச்சு. அதுக்குப் பிறகு ‘காதலில் சொதப்புவது எப்படி?’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’ படங்கள்ல நடிச்சேன். தெலுங்கில் பூரிஜெகன்நாத் சார் தயாரிச்ச ‘செகண்ட் ஹேண்ட்’ படத்துல நான்தான் ஹீரோயின். இன்னும் சில படங்கள் ரிலீஸுக்கு வெயிட்டிங்.

நான் சூர்யா சாரின் தீவிர ஃபேன். `ஏழாம் அறிவு’ படத்துல முருகதாஸ் சார் ஒரு நீளமான வசனம் கொடுத்து சூர்யா சாரிடம் பேசுற மாதிரி சீன்னு சொல்லிட்டார். எனக்கு பயங்கர நடுக்கம். ஆனா, முதல் டேக்லயே ஓகே பண்ணிட்டேன். சூர்யா சார் பாராட்டினார். தெலுங்கில் மகேஷ்பாபுகூட நடிச்சப்போதான் சொதப்பிட்டேன். அவர்கிட்ட நான் புரப்போஸ் பண்ற மாதிரி ஒரு சீன். நான் கொஞ்சம் பதற்றமாகி உளற, ஏகப்பட்ட டேக்ஸ் போச்சு. மகேஷ்பாபு சார்கிட்ட பலமுறை சாரி சொன்னேன்.
எனக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் `ஏழாம் அறிவு’தான் தமிழ்ல முதல் படம். ஸ்ருதி எந்த பந்தாவும் இல்லாம பழகினாங்க. நயன்தாரா மேடம் என்னை அவங்க தங்கை மாதிரி நடத்தினாங்க.
படம் இயக்கணும்னு ரொம்ப ஆசை. அதுல ஹீரோயின்தான் ஹீரோ. `அருந்ததி’, ‘மாயா’ மாதிரியான ஹீரோயின் சப்ஜெக்ட் இங்க சூப்பர் டூப்பர் ஹிட். அதனால அந்த மாதிரியான கதையோடு நான் சீக்கிரமே ஆக்ஷன் சொல்வேன்” என்கிறார் தன்யா.
மிஷா கோஷல்
‘ஏழாம் அறிவு’, ‘ராஜா ராணி’, ‘வாலு’ என ஏகப்பட்ட படங்களில் ஹீரோயின் ஃப்ரெண்டாகத் தலைகாட்டி யிருக்கும் மிஷா கோஷல், வெற்றி மாறனின் `விசாரணை’ படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.

‘‘நான் சென்னை எஸ்.ஐ.இ.டி காலேஜ்ல படிக்கும்போது சேரன் சாரின் ‘பொக்கிஷம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதுல பத்மபிரியாவுக்கு தங்கையா நடிச்சேன். அதுக்குப் பிறகு ‘நான் மகான் அல்ல’ படத்தில் காஜல் அகர்வால் ஃப்ரெண்டு. ஒரு சில சீன்ல வந்தாலும் நல்ல பேர் கிடைச்சது. அதுக்குப் பிறகு பார்ட் டைமா நடிச்சதை, முழுநேரமா மாத்திக்கிட்டேன். ‘180’, ‘ஏழாம் அறிவு’, ‘இஷ்டம்’, ‘ராஜா ராணி’, ‘வணக்கம் சென்னை’, ‘வடகறி’, ‘வாலு’னு நிறையப் படங்கள்ல நடிச்சேன். வெற்றி மாறன் சார் இயக்கியிருக்கும் ‘விசாரணை’யில் கான்ஸ்டபிள் ரோல் பண்ணியிருக்கேன். இப்போ ‘யாழ்’ படத்தின் ஹீரோயின் நான்.
`விசாரணை’ பட ஷூட்டிங் நாட்களை என்னால் மறக்கவே முடியாது. ‘நீ ஒருசில சீன்ல வந்தாக்கூட மக்கள் உன்னைப் பாராட்டுவாங்க, நல்லா நடிச்சிருக்க’னு வெற்றி சார் பாராட்டினார்!
தேஜஸ்வினி
‘தனி ஒருவன்’ படத்தில் நயன் தாராவுடன் சேர்ந்து ஜாலி கலாட்டா செய்தவர் தேஜஸ்வினி. ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’, ‘மான் கராத்தே’ படங்களில் குட்டிக்குட்டி கதாபாத்திரங்களில் நடித்த இவர், இப்போது ‘ஆந்திரா மெஸ்’ பட ஹீரோயின்.

‘‘நான் சிவில் இன்ஜினீயர். ‘டிசைன் டி.என்.ஏ’ என்ற பேர்ல கட்டட வடிவமைப்பு நிறுவனம் ஒண்ணு நடத்தினேன். லிங்குசாமி சாரோட திருப்பதி பிரதர்ஸ் ஆபீஸ், தோட்டாதரணி சார் வீடுனு நிறைய இன்டீரியர் வொர்க்ஸ் பண்ணினோம். எனக்கு சினிமானா ரொம்பப் பிடிக்கும். அப்போ சன் டி.வி தங்கமழை ஷோவின் ரெண்டாவது சீஸன் நான்தான் ஹோஸ்ட் பண்ணேன். ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பட வாய்ப்பு கிடைச்சது.
நான் சினிமாவுல நடிக்கிறதைப் பார்த்துட்டு எனக்கு நெருக்கமானவங்களே ஆச்சர்யப்படுறாங்க. `தனி ஒருவன்’ படத்துல நயன்தாரா ஃப்ரெண்டா ரெண்டு சீன்தான் நடிச்சேன். அதுக்கே ஏகப்பட்ட போன்கால்ஸ். இப்போ ‘ஆந்திரா மெஸ்’, ‘அழகு குட்டிச் செல்லம்’ படங்கள்ல என் நடிப்பைப் பார்த்துட்டு என்ன சொல்லப்போறாங்களோனு படபடப்பு அதிகமாகிருச்சு!’’ என்கிறார் தேஜஸ்வினி!