Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 4

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 4

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:

எட்டாம் வகுப்புப் படிக்கும் கிஷோர், வருங்கால வி.வி.ஐ.பி. தன்னுடைய குழந்தைப் பருவ வாழ்க்கையை வருங்காலத் தலைமுறைகள் தெரிஞ்சுக்கிறதுக்காக, டைரி எழுதறான். கிஷோரின் இந்த மகத்தான பணி, இதோ தொடருது... 

'ஏன்டா இந்தப் புது வருஷம் பொறந்தது’னு இருக்கு.

பின்னே... விடியக்காலை அஞ்சு மணி. கணக்கு வாத்தியாராக நான், ஜெகனுக்கு எக்ஸாம் பேப்பரில் முட்டை போட்டு, அவன் முதுகுல நாலு போடுறது மாதிரி, கனவுல இருக்கிற நேரம். அந்த நேரத்துல எழுப்பி,  'படி... படி’னு சொல்றாங்க அம்மா.

குறும்புக்காரன் டைரி - 4

'இன்னிக்கு லீவுதானே மம்மி'னு கொட்டாவியோடு கேட்டா, ''வருஷத்துல மொத நாள் கிஷோர், இன்னிக்குப் படிச்சா, வருஷம் ஃபுல்லா நல்லா படிப்பு வரும்'னு சொல்றாங்க.

அம்மாவின் பல தியரிகளில் இதுவும் ஒண்ணு. (திங்கள்கிழமை ஹாஸ்பிட்டல் போனா, திரும்பத் திரும்ப போவோம்னு  இன்னொரு தியரி). குத்துமதிப்பா ஒரு பக்கத்தை ஓப்பன் பண்ணிக்கிட்டு, சத்தமாக வாசிக்க ஆரம்பிக்க, பக்கத்துல என்னைவிட சத்தமா இன்னொரு குரல்,

என் அண்ணன் லோகேஷ், 'உப்பு சத்தியாகிரகத்துக்குத் தலைமை தாங்கியவர் காந்தியடிகள்... உப்பு சத்தியாகிரகத்துக்கு தலைமை தாங்கியவர் காந்தியடிகள்'னு கத்திக்கிட்டு இருந்தான். லைட்டா எட்டிப் பார்த்தேன். கையில் கணக்குப் புத்தகம்.

'அடேய்... கணக்குப் புத்தகத்துல ஏதுடா காந்தி. இதுதான் காந்தி கணக்கோ?’

வாக்கிங் கெட்டப்போடு வந்த அப்பா, 'புது வருஷத்துக்கு என்ன ரெசல்யூஷன் எடுத்துக்கப்போறீங்க?'னு கேட்டார்.

குறும்புக்காரன் டைரி - 4

வருஷம் பொறந்தா இது ஒரு கடமை. ஒரு கெட்ட பழக்கத்தை விடுறதாவோ, நல்ல பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறதாவோ சபதம் எடுத்துக்கணும். மறுநாள், தேதியைக் கிழிச்சு குப்பைத்தொட்டியில் போடும்போது, சபதத்தையும் சேர்த்துப் போட்டுடணும். போன வாரம் எதுக்கெல்லாம் அம்மாகிட்ட திட்டு வாங்கினமோ, அதையெல்லாம் எழுதி, இனிமே பண்ண மாட்டேன்னு எழுதினா, சபதம் முடிஞ்சது.

யோசிச்சுப் பார்த்தா, கைவிடுற அளவுக்கு என்கிட்ட ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. பேசிக்கலி,  ஐ யம் எ குட் பாய். அதனால, அடுத்தவங்க ரெசல்யூஷன் எடுக்க ஹெல்ப் பண்ணலாமேனு தோணிச்சு. போறபோக்குல ஒரு பொதுச் சேவை.

முதல்ல, அம்மாவுக்குத்தான். எப்போ பாரு சீரியல் பாத்துக்கிட்டு இருப்பாங்க. அடுத்த தோசை தட்டுக்கு வர்றதுக்கு, விளம்பர இடைவேளை வரைக்கும் வெயிட் பண்ணணும். ஒரு சீரியலில் ஹீரோயினுக்கு பிரச்னை வந்தா, எங்க சாப்பாட்டில் உப்பு ஜாஸ்தியாகிடும். அதனால, 'இந்த வருஷத்துல இருந்து சீரியல் பார்க்க மாட்டேன்னும், எந்த ஹீரோயினுக்கு என்ன ஆனாலும் கவலைப்பட மாட்டேன்’னும் அம்மாவை ரெசல்யூஷன் எடுக்கச் சொல்லணும்.

அப்பாவும் தொப்பையைக் குறைக்க  இன்னையில் இருந்து தினமும் வாக்கிங் போகப்போறாராம். இதே மாதிரி அஞ்சு வருஷங்களாச் சொல்லி, வருஷத்துக்கு ஒரு வாக்கிங் ஷூ வாங்கிட்டார். வாக்கிங் போனா தொப்பை குறையும்கிறதுல எனக்கு நம்பிக்கை இல்லை. ஏன்னா, யானைகள் தினமும் கிலோமீட்டர் கணக்கில் நடக்குது. அதுக்குத் தொப்பை குறைஞ்சுக்கிட்டா இருக்கு? அதனால, இந்த ரெசல்யூஷன் அவருக்கு செட் ஆகாது. அதுக்குப் பதிலா, ஒவ்வொரு வாரமும் சண்டே எங்களை வெளியே கூட்டிட்டுப் போறதா ரெசல்யூஷன் எடுக்கச் சொல்லணும்.

குறும்புக்காரன் டைரி - 4

அடுத்து, என் அண்ணன் லோகேஷ், இனிமே தம்பியை ஏமாத்த மாட்டேனு சபதம் எடுக்கவைக்கணும். ரெண்டு நாளைக்கு முன்னாலகூட ஒரு கேம் விளையாடக் கூப்பிட்டான். ரெண்டு கைகளையும் டேபிள்ல குப்பறவெச்சு, கைகளுக்கு மேலே காபி கப்பைவெச்சு பேலன்ஸ் பண்ணணும்.

'நீ முதல்ல விளையாடு கிஷோர். எத்தனை நிமிஷம் பேலன்ஸ் பண்றேனு பாக்குறேன்'னு, என் ரெண்டு கைகள் மேலேயும், தளும்பத் தளும்ப காபி கோப்பைகளை வெச்சான். எப்படியும் ஜெயிக்கணும்னு பேலன்ஸ் பண்ண ஆரம்பிச்சப்போ, 'பை கிஷோர், நான் டியூஷன் கிளம்புறேன்'னு கிளம்பிட்டான்.

என்னா ஒரு வில்லத்தனம். நான் கையை எடுத்து, காபி கொட்டிட்டா, அம்மா பொளந்துடுவாங்க. அரை மணி நேரம் அசையாம இருந்தேன். ஒரு வழியா அம்மா வந்து காப்பாத்தினாங்க. இது மாதிரி பல தடவை ஏமாத்தி இருக்கான். இனிமே, வயசுல சின்னப் பையனை ஏமாத்த மாட்டேன்னு இந்தப் பயலை சபதம் எடுக்கச் சொல்லணும்.

என் ஃப்ரெண்டு ஜெகனுக்குக்கூட  புத்தாண்டு சபதம் வெச்சிருக்கேன். எப்போ பாரு கார் கேம் விளையாடுறவன். எங்க ஸ்கூல் பஸ்ல இவன் பக்கத்துல உட்கார்ந்து வந்தா அவ்வளவுதான். என்னமோ ரேஸ்ல போற மாதிரியே ஃபீல் பண்ணிக் கத்துவான். இந்த வருஷத்தில் இருந்து கார் கேம் விளையாட மாட்டேன்னு ரெசல்யூஷன் எடுக்கச் சொல்லணும்.

குறும்புக்காரன் டைரி - 4

அப்படியே எல்லார்கிட்டேயும் சொன்னேன். ஆனா, இன்னிக்கி ராத்திரி, டைரி எழுதிக்கிட்டு இருக்கேன். பக்கத்து வீட்டு ஆன்ட்டிகூட அம்மா, ஏதோ சீரியல் பற்றி சீரியஸா பேசிக்கிட்டு இருந்தாங்க, அட போங்கப்பா... உங்களை எல்லாம் திருத்தலாம்னு பார்த்தா, யாரும் ரெசல்யூசனை மதிக்கவே மாட்டேங்குறீங்க!

(டைரி புரட்டுவோம்...)