Published:Updated:

சினிமா விமர்சனம் : சதுரங்கம்

விகடன் விமர்சனக் குழு

##~##

திரையில் இயல்பான ஒரு பத்திரிகை யாளனைப் பதிவு செய்த விதத்தில்... முதல் சபாஷ்!

 நேர்மையான நிருபர் ஸ்ரீகாந்த் எழுதும் புலனாய்வுக் கட்டுரைகளால் அமைச்சர்கள், அதிகாரிகள், தாதாக்கள் எனப் பலரும்  பாதிக்கப்படுகிறார்கள். ஸ்ரீகாந்த்தின் காதலி சோனியா அகர்வால் கடத்தப்படுகிறார்.  சோனியாவைக் கடத்தியது யார்? அவர் மீட்கப்பட்டாரா என்பதைப் பரபரப்பாக, விறுவிறுப்பாகச் சொல்கிறது 'சதுரங்கம்’.

தெருமுக்குக் கூட்டத்தில் அமெரிக்க அதிபருக்கே ஜார்ஜ் புஷ்ஷ§க்கே(!) சவால்விடும் அரசியல்வாதி, பீச்சில் அக்கம் பக்கம் பற்றி அக்கறைப்படாமல் ரொமான்ஸும் காதலர்கள், அண்ணா சாலையில் உச்சா அடிப்பவர் என்று வருகிற ஆரம்பக் காட்சிகளும், அதையடுத்து வரும் 'ஆடுவோமே... பள்ளுப் பாடுவோமே’ பாடலும் இயக்குநர் கரு.பழனியப்பனைப் பளிச்சென்று அடை யாளம் காட்டுகின்றன.

சினிமா விமர்சனம் : சதுரங்கம்

மிரட்டுபவர்களை அலட்சியமாக எதிர்கொள்வது, சோனியாவிடம் சுகமான ரொமான்ஸ் செய்வது, சோனியாவைத் தேடி ஏரியாவாரியாக அலைந்து திரிவது என ப.திருப்பதிசாமி கேரக்டரில் பாந்தமாகப் பொருந்துகிறார் ஸ்ரீகாந்த். ஆனால், காதலியைத் தேடி போலீஸ், நண்பர்கள் என்று யாருடைய துணை யும் இல்லாமல் தனி ஆளாகப் போவதும், சண்டை போடுவதும் ஹி...ஹி...ஹீரோயிஸ பில்ட்-அப்கள்.

பழைய துள்ளும் இளமையில் சோனியா அகர்வால். கண்டவுடன் காதல் இல்லாமல் காரணங்களோடு காதல் வருவது யதார்த்தம். ஸ்ரீகாந்த் திடம் காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும்போதும், 'நானாத்தான் உன்னைத் தேடி வந்தேன். நீயா எனக் காக எதையும் செய்யலை...’ என்று ஏங்கும்போதும் பிரமாதம்!

முதல் பாதியில் நிதானமாகக் கவிதை கோக்கும் திவாகரின் ஒளிப்பதிவு, இரண்டாம் பாதியில் தடதடவென அதகளம் காட்டுகிறது. வித்யாசாகரின் இசையில் 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’, 'என்ன தந்துவிட்டாய்’ இரண்டு பாடல்களும் இதயம் நிறைக்கின்றன. 'விழியும்... விழியும்’ பாடலில் அறிவுமதியின் வரிகளும் வித்யாசாகரின் இசையும் மயக்கம்!

சினிமா விமர்சனம் : சதுரங்கம்

'எங்களை மாதிரி தப்பான ஆளுங்க ஜெயிப்போம்னு நம்புறோம். ஆனா, உங்களை மாதிரி நல்லவங்க தோத்துருவோம்னு பயப்படுறீங்க’, 'போலீஸ்காரன் போலீஸ் வேலை பார்க்கிறான். டாக்டருக்குப் படிச்சவன் டாக்டர் வேலை பார்க்கிறான். ஆனா, பத்திரிகைக்காரன் மட்டும் ஏன்டா எல்லா வேலையும் பார்க்குறீங்க?’ என்று படம் நெடுக வரும் அழுத்தமான வசனங்கள்.  ஆனால், முத்தம் கேட்கும் இடத்தில் எல்லாம் கருத்து சொல்லிக்கொண்டே இருப்பது... கருத்துச் சத்தம். விறுவிறுப்பாக நகரும் படத்துக்குக் க்ளைம£க்ஸ் திருஷ்டிப் பொட்டு.

ரொம்பவே லேட். ஆனாலும் சுவாரஸ்ய மான ஆட்டம்!