Published:Updated:

யார் அந்த சார்லி?

பா.ஜான்ஸன்

யார் என்றே தெரியாத ஒருவனைத் தேடி ஒரு பெண் பயணிக்கும் கதைதான் ‘சார்லி’.

டெஸாவுக்கு (பார்வதி), வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறுகிறார். தோழி மூலம் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் குடியேறுகிறார். அந்த வீடு முழுக்க புத்தகங்கள் நிறைந்திருக்கின்றன. அதில் ஒரு காமிக்ஸ் புத்தகத்தை எடுத்துப் பார்க்கிறார். அந்தக் கதை முடிவு இல்லாமல் இருக்கிறது. அதை வரைந்தது, முன்னர் இங்கு தங்கியிருந்த சார்லி (துல்கர்) எனப் புரிகிறது. கதையின் தொடர்ச்சியை அறிந்துகொள்ள, வீட்டில் இருந்த துல்கரின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு அவரைத் தேடிப் புறப்படுகிறார் பார்வதி. அவரைக் கண்டுபிடித்தாரா... அந்தக் கதையின் தொடர்ச்சி என்ன என்பதே மீதிக் கதை.

முக்கியத்துவமே இல்லாத அந்தப் பயணம் அத்தனை அழகாக, சுவாரஸ்யமாக நீள்வதே படத்தின் ஜீவன். படத்தில் அதிக பில்டப்கள் என்னவோ துல்கருக்குத்தான்... ஆனால், நிஜ ஹீரோ பார்வதி. துல்கரைத் தேடும் தீவிரம், பின்னர் அதைப் பாதியில் கைவிட்டு அடையும் விரக்தி என பார்வதியின் ரியாக்‌ஷன்கள் அனைத்தும் அத்தனை ஆசம்!

யார் அந்த சார்லி?

துல்கருக்கு இது ஒரு சேஞ்ச் ஓவர். முரட்டுத்தனமான கெட்டப், உடல்மொழி என அனைத்திலும் அபூர்வ மாற்றம். பார்வதி தன்னைத் தேடுவது தெரிந்ததும், ‘என்னை ஒருத்தி தேடிவரும்போது அந்தச் சந்திப்பு சாதாரணமா இருந்தா எப்படி?’ என அவரிடம் சிக்காமல் தப்பிக்கும் இன்விசிபிள் மேன் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார் துல்கர்.

பார்வதியின் பயணமும், தேடலும்...சார்லியின் விளையாட்டும் என இயக்குநர் மார்ட்டின் பிரகாட்டின் திரைக்கதை அபாரம். ஜோமன் டி ஜானின் ஒளிப்பதிவு, கோபி சுந்தரின் இசை அந்தப் பயணத்தின் பாதையை கூடுதல் அழகாக்கியிருக்கின்றன.

படம் பார்த்ததும் ஒரு குழப்பம் வரும். உண்மையில் சார்லி யார்? ஆனால், படம் சார்லி பற்றியது அல்ல. சார்லியைப் பற்றி தெரிந்துகொள்ள உந்தித் தள்ளும் பயணத்தில், நாம் பார்க்கும் ஜன்னலோரக் காட்சிகளும், அதில் கிடைக்கும் அனுபவங்களுமே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz