Published:Updated:

இசைஞர்கள்!

புதுசா... இளசா... ரவுசா... கார்க்கிபவா, படம்: பா.காளிமுத்து

ந்த வருடம் அதிகம் அறிமுகமானவர்கள், இசையமைப்பாளர்கள் தான். யூ-ட்யூபில் ஹிட்ஸ் அள்ளி, ஐ-ட்யூன்ஸ் டெளன்லோடில் லைக்ஸ் குவிக்கிறார்கள். இதில் ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் லியோன் ஜேம்ஸ், நிவாஸ் கே.பிரசன்னா, ஜஸ்டின் பிரபாகரன், சி.எஸ்.சாம், ஷான் ரோல்டன், சங்கர் ரங்கராஜன் என ஆறு இசையமைப்பாளர்களையும் ஒன்றுசேர்த்தேன். போன்களை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு, பேசத் தயாரானார்கள் இசைஞர்கள்.

``சென்னைதான் நமக்கு எல்லாமே. மூணு வயசுலேயே கீபோர்டு வாசிக்க ஆரம்பிச்சிட்டேன். அப்பப்ப பாட்டு கம்போஸ் பண்ணி, யூ-ட்யூப்ல அப்லோடு பண்ணுவேன். அப்படிப் போட்ட ஒரு பாட்டுத்தான் `வாய்யா என் வீரா'. அது ஆன்லைன்ல செம ஹிட். அதைக் கேட்ட ராகவா லாரன்ஸ் சார் ` `காஞ்சனா-2’ படத்துக்கு யூஸ் பண்ணட்டுமா?’னு கேட்டார். அப்படித்தான் சினிமாவுக்குள் வந்தேன். இப்ப
`கோ-2’ ஆல்பமும் நல்ல ரீச் ஆகி நிறைய கான்ஃபிடன்ஸ் கொடுத்திருக்கு'' -  சர்ப்ரைஸ் சந்தோஷத்தைத் தொடங்கி வைத்தவர் லியோன் ஜேம்ஸ்.

“நானும் லியோனும் நிறைய ‘பேண்ட்ஸ்’ வாசிச்சிருக்கோம். எனக்கும் கீபோர்டுதான் ஃபேவரிட். சொந்த ஊரு, திருநெல்வேலி. ஒண்ணாவது படிக்கும்போதே மியூஸிக் டைரக்டர் ஆகணும்னு முடிவுபண்ணின பையன் நான். அதுக்காகவே சென்னை வந்தேன். ஃபேமிலியும் செம சப்போர்ட்” என மெல்லிய புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் நிவாஸ் கே.பிரசன்னா. `தெகிடி' படத்தின் ‘விண்மீன் விதையில்...’ பாடல் மூலம் தெறி என்ட்ரி கொடுத்தவர் நிவாஸ்.

``நான் மதுரைப் பையன். இசையில் ஆர்வம் இருந்ததால்தான், சென்னைக்கே வந்தேன். ஹாரிஸ் ஜெயராஜ் சார்கிட்ட மூன்றரை வருஷம் உதவியாளரா வேலைசெஞ்சேன். அப்ப நிறையக் குறும்படங்கள் பண்ணேன். அதுல ஒண்ணுதான் ‘பண்ணையாரும் பத்மினியும்’. அதே இயக்குநர் அதைப் படமா எடுத்தப்ப, நானே இசையமைச்சேன். முதல் படத்துலயே வாலி சார் பாட்டு எழுதினார். `உனக்காகப் பொறந்தேனே எனதழகா...’ ட்யூன் கேட்டுட்டு ‘எழுதுறதுக்கு ஈஸியான மெட்டா இருக்கு. நிச்சயமா ஹிட் ஆவும்யா’னு சொன்னார். எனக்குக் கிடைச்ச மறக்கவே முடியாத பாராட்டு” என உருகுகிறார் ஜஸ்டின் பிரபாகரன்.

இசைஞர்கள்!

`‘நான் பக்கா ஐ.டி பையன். பாடுற ஆர்வத்துல இண்டஸ்ட்ரிக்குள் வந்தப்ப `அம்புலி’, `ஆ’ படங்கள்ல பின்னணி இசையமைக்கிற வாய்ப்பு கிடைச்சது. அது மூலமா சில ஜிங்கிள்ஸ் பண்ற சான்ஸ் பிடிச்சேன். `மெல்லிசை' படத்தோட இயக்குநர் ரஞ்சித் அதைக் கேட்டு இம்ப்ரஸாகி வாய்ப்பு தந்தார். அந்த ஆல்பம் அஃபிஷியலா ரிலீஸ் ஆகும் முன்னாடியே, நெட்ல லீக் ஆகிருச்சு. அதில் ஒரு வருத்தம் இருந்தாலும் மியூஸிக்குக்குக் கிடைச்ச வரவேற்பு எல்லாத்தையும் மறக்கடிச்சது. கலைப்புலி தாணு அண்ணா என் பாட்டு கேட்டுப் பாராட்டினதோடு, அடுத்து ஒரு பெரிய படத்துக்கு சான்ஸ் தந்திருக்கார். அது என்ன படம்னு அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். அதுவரை சஸ்பென்ஸ்” என தம்ஸ்அப் காட்டுகிறார் சி.எஸ்.சாம்.

``என் முதல் ஆசை நல்ல எழுத்தாளர் ஆவது. ஆனா, ‘பிராண்டிங்’ படிக்கப் போயிட்டேன். அப்பா, அம்மா ரெண்டு பேரும் இசைக் கலைஞர்கள். அதனால கர்னாடக சங்கீதம் பாடினேன். அப்புறம் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஒண்ணா சேர்ந்து நாங்களே பாட்டு எழுதிப் பாடிட்டிருந்தோம். கொஞ்ச நாள் அப்படி இண்டிபெண்டன்ட் மியூஸிக் பண்ணினேன். அதுல கிடைச்ச வாய்ப்புதான் சினிமா. இப்ப பாடகர்,  இசை யமைப்பாளர்னு டபுள் ரைடு” என, சமத்துப் பிள்ளையாகப் பேசுகிறார் ஷான் ரோல்டன். `முண்டாசுப்பட்டி', `சதுரங்க வேட்டை', `ஆடாம ஜெயிச்சோமடா', `வாயை மூடி பேசவும்', `144' படங்களின் இசையமைப்பாளர் ஷான். `நானும் ரெளடிதான்' படத்தில் வரும் `கண்ணான கண்ணே நீ கலங்காதடி...’ பாடல் இவரின் குரலுக்கான அடையாளம்.

ஜாலி கேலி டீமுக்கு நடுவில் நல்ல பிள்ளையாக இருக்கிறார் ‘குற்றம் கடிதல்’ படத்தின் இசையமைப்பாளர் சங்கர் ரங்கராஜன்.

இசைஞர்கள்!

“பள்ளி நாட்கள்ல இருந்தே நான் கீபோர்டு பிளேயர். `குற்றம் கடிதல்’ படத் தயாரிப்பாளர் கிறிஸ்டி என் நண்பர். அவர் இயக்குநர் பிரம்மா விடம் அறிமுகப்படுத்தினார். அவருக்கும் என் வொர்க் பிடிக்கவே, `குற்றம் கடிதல்' படத்துக்கு இசை யமைச்சேன். முதல் படத்திலேயே பாரதியார் பாட்டுக்கு இசையமைக்கிற சான்ஸ். மெட்டை மாத்தாம பி.ஜி.எம்-ல சாரங்கி கருவியைச் சேர்த்துப் பண்ணேன். படத்துக்கு முக்கியமான பாட்டு. அது வொர்க்அவுட் ஆனதுல ரொம்ப சந்தோஷம். பாரதிராஜா சார் அதைக் குறிப்பிட்டுப் பாராட்டினது டபுள் சந்தோஷம்” என்கிறார் சங்கர்.

“பொண்ணுங்களை இம்ப்ரஸ் பண்ண பசங்க எடுக்கிற முதல் ஆயுதம் கிட்டார்தான். நீங்கள்லாம் எப்படி?” - கலாட்டாவைத் தொடங்கிவைத்தோம்.

``கிட்டார் வொர்க்அவுட் ஆகலை பாஸ். கிட்டார் பார்க்க அழகா இருக்கிறதால, பொண்ணுங்க கிட்டாரைத்தான் பார்க்கிறாங்க. வி ஆர் பாவம்” என்ற ஷான் ரோல்டனை எல்லோருமே சந்தேகத்துடனேயே பார்க்க, ஷான் சைலன்ட்.

``சினிமாவில் பின்னணி இசை பெரிய விஷயமாச்சே. அதுக்கு என்ன மாதிரியான ஹோம்வொர்க் பண்றீங்க?’’ எனக் கேட்டதும் முதலில் மைக்கைக் கைப்பற்றியவர் லியோன் ஜேம்ஸ்.
“நிறையப் படங்கள் பாப்போம். அது பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம். எப்படி எமோஷன்ஸை இசை மூலமா அடுத்த லெவலுக்கு எடுத்துட்டுப் போயிருக்காங்கனு பேசுவோம்” என்ற லியோன் ஜேம்ஸைத் தொடர்ந்தார் சாம்.

“ராஜா சார், ரஹ்மான் சார் எல்லாம்தான் எங்க டீச்சர்ஸ். எந்த சீனுக்கு எப்படி பி.ஜி.எம் போட்டிருக்காங்க, எந்த இடத்துல இசையே இல்லாம நகர்த்தியிருக்காங்க, என்ன மாதிரியான சவுண்டு யூஸ் பண்றாங்கனு எல்லாத்தையும் இப்போ பாடமாகப் படிக்கிறோம்'' என்றார்.

``இப்ப சி.டி மார்க்கெட் இல்லைனு சொல்றாங்க. ஆனா, இசைக்கு எல்லா இடத்திலும் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. சினிமா பத்தி நிறையப் பேசினாலும், எங்க டார்கெட் எல்லாம் இண்டிபெண்டன்ட் மியூஸிக்தான். இன்னும் 10 வருஷத்துல தமிழ் சினிமாவில் தனியே பாட்டு இருக்காது. அந்தப் படத்தோட பாட்டுங்ககூட தனியா ஆல்பமாதான் வரும்” என அதிரவைத்தார் ஷான்.

``இப்போ நிறைய இசையமைப்பாளர்கள் கம்ப்யூட்டர் உதவியோடு `ஆட்டோ ட்யூன்' போடுறாங்க. இதனால கிரியேட்டிவிட்டி இல்லைனு ஒரு பேச்சு இருக்கே?'' என்ற கேள்விக்குக்கு நிவாஸ் கே.பிரசன்னா சட்டெனப் பதில் சொன்னார்.

“நேரம் இல்லாம தொடர்ந்து வேலைகள் நடக்கிறப்ப, சின்னச் சின்னத் தப்பை மறைக்க ஆட்டோ ட்யூன் பயன்படுத்துறாங்க. ஆனா, அதுவே நல்ல இசையைக் கொடுத்திடாது. கலைக்காகத்தான் டெக்னாலஜியே தவிர, டெக்னாலஜியால் ஒருபோதும் கலையைக் காப்பாத்த முடியாது. ஆனா, தெலுங்குல இந்த ஆட்டோ ட்யூன் நல்லாவே வொர்க்அவுட் ஆகுது. நம்ம தமிழ் ரசிகர்களுக்கு இசை அறிவு அதிகம். அப்படி எல்லாம் இங்கே ஏமாத்திட முடியாது” என்று நிவாஸ் சொல்ல, அதற்கு எல்லோரும் லைக் பட்டனை அழுத்தினார்கள்.