Published:Updated:

சலிக்காத ரயில்... சளைக்காத காதல்!

ம.கா.செந்தில்குமார்

‘‘மலை, யானை, கடல், ரயில்... இவை எல்லாம் எப்போதுமே சலிக்காத பிரமாண்டங்கள். தினமும் பார்க்கிற ரயிலானாலும் அது கடக்கும்போது டாட்டா காட்டும் குழந்தைகளை இன்னமும் பார்க்கலாம். என்னைக்கும் அலுக்காத, சலிக்காத அந்தத் தன்மைதான் ரயிலின் சிறப்பு. முந்தைய மூணையும் பின்னணியா வெச்சு படங்கள் பண்ணியாச்சு. இப்ப ரயில் வருது. படத்தின் பெயரையே `ரயில்'னு வைக்கலாமானு ஒரு யோசனை’’ - நிதானமாகப் பேசுகிறார் அழகியல் இயக்குநர் பிரபு சாலமன். ஹீரோ... தனுஷ்.

‘‘கல்லூரி முடிச்சிட்டு டெல்லி பக்கம் காசியாபாத்ல ஆறு மாசம் சூப்பர்வைசர் வேலைபார்த்தேன். அப்ப டெல்லி டு காசியாபாத்துக்கு தினமும் ரயில் பயணம்தான். அது நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்தது. ஒரு நாடே ரயிலில் பயணமாகுதோனு சந்தேகம் வர்ற அளவுக்கு அது ஒரு நகரும் சமூகம். ‘ரயிலைப் பின்னணியா வெச்சு படம் எடுத்தா, எப்படி இருக்கும்?’னு அப்ப நினைச்சுக்குவேன். அந்தக் கனவு இப்ப சாத்தியமாகி இருக்கு.’’

சலிக்காத ரயில்... சளைக்காத காதல்!

‘‘‘மைனா’வில் மலை; `கும்கி’யில் யானை; அப்புறம் `கயல்’ல கடல். இப்ப ரயிலும் ரயில் சார்ந்ததும்னு பின்னணியை முடிவுபண்ணிட்டுத்தான் கதையை யோசிப்பீங்களா?’’

‘‘பாட்டி கதையே ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்’னு களத்தோடுதானே ஆரம்பிக்குது. அப்பதான் அது என்ன ஊர், அங்கு என்ன மாதிரியான மனிதர்கள் இருந்தாங்கனு நம் கற்பனையை விஸ்தரிக்க அந்தக் களம் இடம் கொடுக்கும். காதல், வீரம், துக்கம், சந்தோஷம்னு உணர்வுகள்...  அம்மா, அப்பா, தங்கை, சித்தி, சித்தப்பானு உறவுகள்னு எல்லா கதைகளும் ஒண்ணுதான். ஆனால், அது வெளிப்படும் களம் வெவ்வேறா இருக்கும்போதுதான் புதுசாவும் பிரமிப்பாவும் இருக்கும். அருவி, மலை பின்னணியில் ரயில் வர்றதைக் காட்டும்போது ஒரு கவிதைபோல இருக்கும். அதுவே கேமராவை லோ ஆங்கிளில் வைத்து, பூமி அதிர ஓடும் ரயிலின் சக்கரங்களைக் காட்டும்போது உள்ளுக்குள் உதறல் எடுக்கும். ரயில் ஒண்ணுதான்... ஆனால், அதைக் காட்டும் கோணங்களில் நம் உணர்வு வித்தியாசப்படும். இப்படி வித்தியாசமா விளையாடுறதுக்கு இந்தக் களம் இடம் தரும். இப்ப என் ஜனம் ஆயிரத்தெட்டு துக்கத்திலேயும் பாரத்திலேயும் திரியுது. அவங்ககிட்ட போய் உட்கார்ந்து ஆழமா அழச் சொல்ல முடியாது. ஆக்‌ஷன், நகைச்சுவை, காதல்னு எல்லாத்தையும் ரயில் பெட்டி மாதிரி  இணைச்சு ஒரு அழகான பொழுதுபோக்கு சினிமா பண்ணியிருக்கேன்.’’

‘‘தனுஷ் எப்படி இந்த ரயிலுக்குள் ஏறினார்?’’

‘‘ஒரே இடத்தில் நிலையா ஹோட்டல் இருப்பது பெரிய விஷயம் கிடையாது. ஆனால், 100 கி.மீ வேகத்தில் ஓடும் ரயிலுக்குள்ளேயே ஒரு நடமாடும் ஹோட்டல், அதுக்குனு பேன்ட்ரி வெண்டா்ஸ், மேனேஜர்ஸ், கான்ட்ராக்டர், சூப்பர்வைசர்னு ஒரு பெரிய டீம் இருக்கும். எல்லாருக்கும் சரியான நேரத்துல உணவைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் அந்தக் களமே எனக்கு புதுசா இருந்தது. இதுதான் நம்ம ஹீரோ ஸ்பாட்னு ஃபிக்ஸ் பண்ணினேன். அப்படி யோசிக்கும்போது, இந்த பேன்ட்ரி வெண்டரா யார் இருந்தா மிகச் சரியா இருப்பாங்க? என் மண் சார்ந்த ஒரு முகமாவும் இருக்கணும், அந்தத் தோற்றம் பொய் சொல்லவும் கூடாதுனு என் ஸ்கிரிப்ட் சொல்லும்போது, என் மூளைக்குள்ள வந்து நின்னது தனுஷ் மட்டும்தான். ஒரே மீட்டிங்தான். ‘இப்படி ஒரு விஷயம் இருக்குது சார், இதை நான் பண்ணணும்னு ஆசைப்படுறேன்’னு ஒரு லைன் சொன்னேனே தவிர, ஸ்கிரிப்ட்கூடச் சொல்லலை. அவ்வளவு ஹம்பிளா என் கனவை நிறைவேற்ற ஒப்புக்கிட்டார். யூனிஃபார்ம் மாட்டிக்கிட்டு ஒரு டீ கேனைத் தூக்கிட்டு வந்து நின்னப்ப, அவர் தனுஷா எனக்கு தெரியவே இல்லை. என் பூச்சியப்பனாவே இருந்தார். அதுதான் இந்தப் படத்தின் முதல் வெற்றி.’’

சலிக்காத ரயில்... சளைக்காத காதல்!

‘‘ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், பெர்ஃபார்மர் தனுஷுக்கு எப்படி ஈடுகொடுத்து நடிச்சிருக்காங்க?’’

‘‘படத்துல கீர்த்தியின் பெயர் சரோஜா. மலையாளப் பெண்ணா நடிச்சிருக்காங்க. வெறும் மலையாளியை மட்டும் கூப்பிட்டுவந்து நடிக்கவைக்க முடியாது. தமிழும் தெரிஞ்சிருக்கணும். தெரிஞ்சாதான் நாம சொல்றதை மனசுக்குள் நிறுத்தி, இயல்பா நடிக்க முடியும். என் சரோஜா கேரக்டருக்கு கீர்த்தி அவ்வளவு பொருத்தமா இருக்காங்க.’’

‘‘காதல் கதையா?’’

‘‘யெஸ்... சரோஜா, ஒரு நடிகையின் டச்சப் கேர்ள். படப்பிடிப்பை முடிச்சிட்டு ட்ரெயின்ல வர்ற டீம்ல அவளும் ஒருத்தி. பூச்சியப்பன் டீ விக்கிற பையன். அவங்க இருவருக்குள் இருக்கிற லட்சியங்கள், நிலைமைக்கு மீறிய ஆசைகள், காதலை எப்படிப் பரிமாறிக்கிறாங்க, அவங்க காதலுக்கு வரும் பிரச்னைகள்னு எதிர் பார்ப்பைத் தூண்டும் கதை. கதாபாத்திரங்களோடு சேர்ந்து ரயிலில் பயணம்செய்வது போன்ற ஒரு சுவாரஸ்யத்தை ரசிகர்களுக்கும் தர்றதுதான் இந்தக் கதையின் சிறப்பு.’’

சலிக்காத ரயில்... சளைக்காத காதல்!

‘‘பள்ளி மாணவன், காதலன், கணவன், தாதானு தனுஷ் அந்த ஒல்லி உடம்புக்குள் எந்த கேரக்டராகவும் மாறிடுறாரே, அவரோட கிராஃபை எப்படிப் பார்க்கிறீங்க?’’

``அது வரம் சார். அடுத்தடுத்து மூணு படங்களை புதுமுகங்களை வெச்சே எடுத்துட்டு இப்ப அவரோட வொர்க் பண்ணும்போது, அந்த கான்ட்ராஸ்ட்டை உணர்றேன். ஒரு பெர்ஃபார்மர்கூட வேலை செய்யும்போது என் டென்ஷன் கம்மியாகுது. சரியானதை சரியான விகிதத்தில் சொல்றதுக்கு ஒரு குறிப்பிட்ட உணர்வை வெளிப்படுத்தணும், அதுக்கு இவ்வளவுதான் அசையணும், இப்படித்தான் பேசணும்னு ஒரு நடிகரா எனக்கு சரியா செய்றார். அவரோட கிராஃப்ட்ல அவர் தெளிவா இருக்கார். ‘எனக்கு இதுல தனுஷ் தெரியலை, பூச்சியப்பன்தான் தெரியுறான்’னேன். ‘நீங்க எதிர்பார்த்தது இதுதானே சார். வந்துடுச்சுல்ல. சந்தோஷம்’னார். நடிகர்களை அவங்க லெவல்ல இருந்து இறக்கிக் கொண்டுபோறது சமயங்கள்ல பெரும் போராட்டமா இருக்கும். தனுஷ் அப்படி இல்லை. அவர் ரொம்ப ஸ்பெஷல்!’’

‘‘ரயிலில் படப்பிடிப்பு. ஏகப்பட்ட சவால்களைச் சந்திச்சிருப்பீங்களே?’’

‘‘ஒரு ரயில் பெட்டியின் நீளம் 70 அடி; அதற்குள் நடந்துபோக அகலம் ஒன்றரை அடி. அதுக்குள்ள ட்ராலி வைக்கணும், க்ரேன் இருக்கணும், கதையையும் சொல்லணும்னு அதுக்குள்ளதான் நான் 60 சீன்களைப் பண்ணணும். ஒரே களம் என்பது ஆடியன்ஸுக்குப் போரடிக்கக் கூடாது. லைட்டிங்கும் மாறிக்கிட்டே இருக்கணும். டெல்லி டு சென்னை பயணத்தில் ஒரே நாளில் நடக்கும் இந்தக் கதையின் படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் சவால்தான். ஆனால், இப்ப ரஷ் பார்க்கிறப்ப எல்லாமே புதுசா இருக்கு. சந்தோஷமாவும் இருக்கு.’’

சலிக்காத ரயில்... சளைக்காத காதல்!

‘‘இந்த மாதிரியான படங்களுக்கு டெக்னீஷியன்கள் பெரிய பலம். உங்களுடைய டீம் பற்றி சொல்லுங்க...’’

‘‘சத்யஜோதி ஃபிலிம்ஸ். ‘மூன்றாம் பிறை’, ‘இதயம்’னு என் கல்லூரி நாட்கள்ல இருந்தே அவங்க படங்களைப் பார்த்து வளர்ந்தவன். ‘கும்கி’ முடிச்சதும், ‘ஒரு படம் பண்ணணும்’னாங்க. ‘ரயிலுக்குள் ஒரு படமா... எப்படி?’னு கேட்டார் தியாகராஜன் சார். டீடெயிலா சொன்னேன். கைதட்டிக் கை கொடுத்தார். ‘ட்ரெயின் என்பதால் சவுண்டுல வித்தியாசப்படணும். ட்ரெயின் வரும்போது, புறப்படும்போது, பாலத்தைக் கடக்கும்போது... ஜெல் ஆகணும். அந்தப் பாட்டுக்குள்ள சின்ன சிக்குபுக்கு இருக்கணும்’னு சொன்னேன். மூணு மெலடி, அந்த எக்ஸ்பிரஸ் வேக ஃபாஸ்ட் பீட்னு இமான் எக்ஸலென்ட்டா பண்ணியிருக்கார். பல மாநிலங்களைக் கடக்கும் ரயிலை நமக்குள் கடத்தியதில் கேமராமேன் வெற்றிக்கு பெரும் பங்கு உண்டு. நமக்கு தெரிஞ்சது சினிமா மட்டுமே. அதைச் செஞ்சிட்டே இருப்போம். அழகா இருக்கும் சார் வாழ்க்கை!’’