Published:Updated:

அழகு குட்டி செல்லம் - சினிமா விமர்சனம்

அழகு குட்டி செல்லம் - சினிமா விமர்சனம்

குழந்தைகளால் ஆறு குடும்பங்களில் நடைபெறும் உணர்வுபூர்வமான மாற்றங்கள்தான் கதை.

உலகெங்கிலும் இருந்து கிடைக்கும் பண உதவியால், 120 வருடங்களாக இயங்கிவரும் பள்ளிக்கு ஒரு  பிரச்னை. அதைத் தீர்க்க நினைக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் குழுவுக்குத் தேவை, ஒரு கைக்குழந்தை. அது அவர்களுக்குக் கிடைத்ததா?

மூன்று பெண் குழந்தைகளின் தகப்பன் கருணாஸின் மனைவி மீண்டும் கர்ப்பம். இந்த முறையாவது ஆண் குழந்தை பிறக்குமா? சிறு வயதிலேயே காதலில் விழுந்து, கர்ப்பமாகிறாள் கிரிஷா. அவள் குழந்தையைப் பெற்றெடுத்தாளா? விவாகரத்து கேட்டு நீதிமன்றப் படி ஏறியிருக்கும் நரேன் - தேஜஸ்வினி தம்பதி பிரிந்தார்களா? மலடி என்ற பட்டத்தோடு திரியும் வினோதினிக்கு, தத்தெடுக்க ஒரு குழந்தை கிடைத்ததா? இலங்கைப் போரில் குழந்தையைப் பறிகொடுத்த அகில் - ரித்விகா ஜோடிக்கு இன்னொரு குழந்தை பிறக்குமா? இத்தனை கிளைக்கதைகளும் வந்துசேரும் அந்த க்ளைமாக்ஸில் என்ன நடந்தது என்பதுதான் `அழகு குட்டி செல்லம்'.

அழகு குட்டி செல்லம் - சினிமா விமர்சனம்

சினிமா என்றதும் குழந்தைகளை மிகைப்படுத்திக் காட்டாமல் இயல்பாகவே உலவவிட்ட இயக்குநர் சார்லஸுக்கு ஒரு சல்யூட். ஒவ்வொரு குழந்தையும் நம் கால்களைச் சுற்றித்திரியும் நம் வீட்டுப் பிள்ளைகளாக ஒட்டிக்கொள்கிறார்கள். அநாதைச் சிறுவனாக வந்து கலகலப்பூட்டி, எல்லோருக்கும் உறவாகும் கென் கருணாஸ் வசீகரிக்கிறான். டீன் ஏஜ் பெண்ணாக வரும் கிரிஷாவின் கண்களே பாதி வசனத்தைப் பேசிவிடுகின்றன. மனைவியை அடிப்பது, உணர்ந்து தேம்புவது... என மனசைக் கனக்கவைக்கிறார் கருணாஸ். ரித்விகா, வினோதினி, நரேன், மற்ற குழந்தைகள் என எல்லோருமே கச்சிதம்.

கைக்குழந்தையை ஸ்கூல் பேகில் வைத்து நடத்தும் அந்தக் கண்ணாமூச்சி ஏரியா, அப்ளாஸ் அள்ளுகிறது.ஆனால், அந்த ஜாலி கேலி முதல் பாதியில் இல்லையே பாஸ்? மொத்த அழுகையையும் சந்தோஷத்தையும் இரண்டாம் பாதியில் புதைத்துவிட்டு, முதல்  பாதியில் அலைபாய்கிறது திரைக்கதை. கைக்குழந்தையை பள்ளி மாணவர்கள் எப்படிக் கொண்டுவருவார்கள் என்று கூடவா

அழகு குட்டி செல்லம் - சினிமா விமர்சனம்

ஃபாதர் யோசிக்க மாட்டார்? ஜான் விஜய் காமெடி டிராக் கமர்ஷியலுக்கு என்றால், வெரி சாரி டைரக்டர்.

ஆறு கதைகளுக்கும் அத்தனை வித்தியாசங்கள் காட்டி சிரிக்கிறது விஜய் ஆம்ஸ்ட்ராங் கேமரா. இமைகளில் தேங்கி நிற்கும் கண்ணீரை, தளுக்கென வெளிக்கொணர்கிறது
வேத் சங்கர் சுகவனத்தின் இசை. இன்னமும் காதுகளில் ரீங்காரம் இடுகிறது ‘உன்னைப் பாத்தா போதும்...' பாடல்.

`அழகு குட்டி செல்லம்’, கொஞ்சம் நீளமான ஹைக்கூ!

- விகடன் விமர்சனக் குழு