Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 5

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 5

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:

எட்டாம் வகுப்புப் படிக்கும் கிஷோர், வருங்கால வி.வி.ஐ.பி. தன்னுடைய குழந்தைப் பருவ வாழ்க்கையை வருங்காலத் தலைமுறைகள் தெரிஞ்சுக்கிறதுக்காக, டைரி எழுதறான். கிஷோரின் இந்த மகத்தான பணி, இதோ தொடருது...  

ட்ரெயின்ல போறது எனக்குப் புடிக்கும்தான். ஆனா, அறுவை அண்ணனோடு டிராவல் பண்றதுதான் பயங்கர கடுப்பா இருக்கு.

''கிஷோர், ஜன்னல் வழியா பார்க்கும்போது மரங்கள் எல்லாம் பின்னாடி ஓடுதே, ஏன் சொல்லு?'னு கேட்டான் லோகேஷ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஏன்?'

குறும்புக்காரன் டைரி - 5

'அதெல்லாம் டிக்கெட் எடுக்கலை. டிடிஆர்கிட்ட மாட்டிக்கக் கூடாதுனு ஓடுதுங்க.'

ஜோக் அடிச்சுட்டாராம். அவனே பகபகனு சிரிச்சுக்கிட்டான். இப்படிச் சின்னா பின்னமாகும்போது,  எப்படி ட்ரெயின் டிராவலை என்ஜாய் பண்றதாம். ஒருவழியா லோகேஷ் தூங்கினதும் டைரி எழுத ஆரம்பிச்சேன்.

பொங்கல் லீவுக்காக, அப்பாவோட சொந்த ஊருக்குப் போயிட்டு சென்னைக்குத் திரும்பிட்டு இருக்கோம்.

போன வருஷம், எங்க அப்பார்ட்மென்ட்ல  விளையாட ஒரு பயலையும் காணோம். எல்லாரும் பொங்கல் கொண்டாட ஊருக்குப் போயிட்டாங்க. என் ஃப்ரெண்டு ஜெகன்கூட அவங்க தாத்தா வீட்டுக்குக் கிளம்பிட்டேன். வீட்டுல தனியா இருந்தது செம போராயிடுச்சு. அதனாலதான், இந்தத் தடவை பொங்கல் லீவுல கண்டிப்பா ஊருக்குப் போகணும்னு  முடிவு பண்ணியிருந்தேன்.

பாட்டி வீடு, தேனிக்குப் பக்கத்துல இருக்கு. கடைசியா, நான் ஒண்ணாம் வகுப்பு படிக்கும்போது போனதாம்.  எனக்கு கொஞ்சமும் நினைவு இல்லை. அதனால, அப்பா ஓவரா பில்டப் கொடுக்க,  ஆவலோடு ஊரில் போய் இறங்கினேன்.

முதல் நாள், பொங்கல் வெச்சோம், சாமி கும்பிட்டோம், நிறைய சொந்தக்காரங்க பக்கத்துப் பக்கத்து வீடுகள்ல இருந்தாங்க. அப்பாவும் அம்மாவும் ஒவ்வொரு வீட்டுக்கும் கூட்டிட்டுப்போனாங்க. எல்லா வீட்டிலேயும் பொங்கலைக் கொடுத்து திங்கச் சொன்னாங்க. கூடவே, பலகாரங்களையும் கொடுத்தாங்க. எவ்வளவுதான் சாப்பிடுறது?

''வேணாம்னு சொன்னா கோவிச்சுப்பாங்க கிஷோர். மெதுவா சாப்பிட்டுரு''னு காதுல அம்மா கிசுகிசுக்கிறாங்க.

அப்போதான் கவனிச்சு, ''லோகேஷ் எங்கேமா?''னு கேட்டேன்.

''அவன் வரல. வீட்டுலேயே விளையாடுறதாச்  சொல்லிட்டான்'' என்றார் அப்பா.

'ஆக, போன முறை வந்தது அந்தப் பயலுக்கு நினைவு இருக்கு. பாவிப் பய ஒரு சிக்னல் கொடுத்திருந்தான்னா, நானும் வீட்டுலயே விளையாடி இருப்பேனே.’

குறும்புக்காரன் டைரி - 5

ரெண்டாவது நாள், மாட்டுப் பொங்கலுக்கு ஊரே களை கட்டிச்சு. அன்னைக்கு ஊர் க்ரௌண்டுல போட்டிகள் வெச்சாங்க. குறிப்பா, உறி அடிக்கிறது. ஒரு பானையைக் கயிற்றில் கட்டி தொங்கவிட்டிருந்தாங்க. கண்ணைக் கட்டிட்டு  அதை உடைக்கணுமாம். எங்க அப்பார்ட்மென்ட்ல கிரிக்கெட் விளையாடுறப்ப, தெரியாத்தனமா எதையாவது உடைச்சிட்டா  பொளந்துருவாங்க. இங்கே, உடைக்கிறதுதான் விளையாட்டாம். கண்ணைக் கட்டியிருக்கிறவர், கூட்டத்துக்குள்ள அடிக்கப் போக, வீடியோ கேமைவிட செம இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு. இது, பெரியவங்களுக்கான விளையாட்டு. சுட்டிகள் சும்மா கம்பைச் சுத்திட்டு வந்தோம்.

அடுத்தது, பொட்டு வைக்கிற போட்டி. அதாவது, பாரதியார் போட்டோ மாட்டியிருப்பாங்க. கொஞ்சம் தூரத்துல நிக்கவெச்சு, கண்ணைக் கட்டிவிட்டு கையில ஒரு பொட்டைக் கொடுத்துருவாங்க. நாம நடந்துபோய் கரெக்ட்டா பாரதியார் நெத்தியில  பொட்டை வைக்கணும். இதுல சின்னப் பசங்க கலந்துக்கலாம்னு சொன்னதும், வீர சிங்கமா கலந்துக்கிட்டேன். கண்ணைக் கட்டிவிட்டதும், ஃபுல் இருட்டுல ஒண்ணும் தெரியல. மெதுவா நடந்துபோய் போட்டோவைக் கண்டுபிடிச்சு, பொட்டு வெச்சேன். கண்ணைத் தொறந்தா, பாரதியார் வாயில பொட்டு.

லோகேஷ், கலகலனு சிரிச்சு, 'வாயில வைக்கிறதுக்கு அதென்ன புட்டா?'னு சிரிச்சு வெறுப்பேத்தினான்.

மூணாவது நாள்தான் டெரர் அனுபவம். என் கசின்ஸ் சுந்தர், ராஜா ரெண்டு பேரும் நீச்சல் பழகலாம் வாடான்னு இழுத்துட்டுப் போனாங்க.  'பரவாயில்லையே, இந்த ஊர்லயும் ஸ்விம்மிங் பூல் இருக்கே’னு கிளம்பினேன்.

ஒரு தோட்டத்துல இருந்த  கிணத்தைக் காட்டினாங்க. எட்டிப் பார்த்தா,  அவ்ளோ ஆழம். இங்கே குதிச்சா,  தண்ணியில லேண்ட் ஆகுறதுக்கே ரெண்டு நாள் ஆகும் போல. 'இந்தக் கிணத்துக்குள்ளே குதிக்கணுமா? அடப்போங்கடா'னு நகர்ந்துட்டேன்.

அடுத்த செகண்ட், சுந்தரும் ராஜாவும் தொபீர்னு கிணத்துல குதிச்சுட்டாங்க. ''தைரியமா குதி கிஷோர், அண்ணன்கள் பார்த்துப்பாங்க''னு அப்பா சொல்ல, அழுகையே வந்துருச்சு.

'அப்பா, இனிமே ஹோம்வொர்க் ஒழுங்கா செய்றேன். வீட்டுல சேட்டை பண்ண மாட்டேன்பா. கிணத்துக்குள்ளே தள்ளி விட்டுறாதீங்க'னு பதறினேன்.

அப்பா, 'உளறாமக் குதிடா. இந்த சந்தர்ப்பம் மறுபடியும் கிடைக்காது''னு சொல்லி, தள்ளிவிட்டுட்டார்.

''அம்மா...''னு அலறிக்கிட்டே விழுந்தேன். இன்னிக்கு செத்தேன்னு நினைச்சேன். கண்ணைத் திறந்து பார்த்தா, கிணத்துப் படிக்கட்டுல உட்காரவெச்சிருந்தாங்க.

குறும்புக்காரன் டைரி - 5

'முதல் தடவைல அப்படித்தான் இருக்கும். அடுத்த தடவை குதிக்கும்போது பழகிடும்'னு சொன்னான் ராஜா.

'என்னது, அடுத்த தடவையா? ஆளை விடுங்க சாமி, இனிமே ஊர்ப் பக்கமே வர மாட்டேன்'னு கதறினேன்.

ஒருவழியா இந்தப் பொங்கல் ரணகளமா முடிஞ்சது. எல்லாருக்கும் ஒரு பை சொல்லிட்டுக் கிளம்பிட்டோம். இதோ, சென்னைக்கு ட்ரெயினில் திரும்பிட்டு இருக்கோம்.

சடார்னு கண்ணை முழிச்சுப் பார்த்த லோகேஷ், ''என்ன கிஷோர், அனுபவங்களை எழுதிட்டு இருக்கியா? இந்த ட்ரெயின் எல்லாம் ஏன் கூகூகூனு கூவுது சொல்லு?''னு திரும்பவும் ஆரம்பிச்சான்.

கடவுளே... இன்னும் மூணு மணி நேரம் இவன்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபடப்போறேனோ?

               (டைரி புரட்டுவோம்...)