சினிமா
Published:Updated:

“ஏ.ஆர்.ரஹ்மான் என் இன்ஸ்பிரேஷன்!”

 “ஏ.ஆர்.ரஹ்மான் என் இன்ஸ்பிரேஷன்!”
News
“ஏ.ஆர்.ரஹ்மான் என் இன்ஸ்பிரேஷன்!”

பா.ஜான்ஸன், படம்: கே.ராஜசேகரன்

மிழ் சினிமாவின் வைரல் வாய்ஸுக்குச் சொந்தக்காரர் சித் ஸ்ரீராம். `கடல்’ படத்தில் ‘அடியே... அடியே.... என்ன எங்க நீ கூட்டிப்போற...’ பாடல் மூலம் என்ட்ரி கொடுத்தவர், ‘ஐ’ படத்தில் ‘என்னோடு நீ இருந்தால்...’, `நானும் ரெளடிதான்’ படத்தில் ‘எனை மாற்றும் காதலே...’ என தனித்துவக் குரலால் கரையவைத்தவர்.

``நான் பிறந்தது மயிலாப்பூர். ஆனால், பிறந்த ஒரு வருஷத்துலேயே குடும்பத்தோடு சான்ஃபிரான்சிஸ்கோ போயிட்டோம். என்  தாத்தா கர்னாடக இசைக்கலைஞர். அவர் மூலமாகத்தான் எனக்கு இசை அறிமுகமானது. நாலு வயசு இருக்கும்போது ஒவ்வொரு சம்மர் லீவுக்கும் சென்னை வந்து கர்னாடக இசை கத்துக்க ஆரம்பிச்சேன். பத்து வயசுக்குப் பிறகு மற்ற இசைகள் மேல ஆர்வம் வந்தது. 2008-ல் பெர்க்லி மியூஸிக் ஸ்கூல்ல சேர்ந்தேன். 2010-ல் இருந்து நானே பாட்டு எழுதி, இசையமைச்சு, சில பாடல்களை யூடியூப்ல அப்லோட் பண்ணுவேன். டிசம்பர் சீஸன் கச்சேரியில் பாடுறதுக்காக ஒருமுறை சென்னைக்கு வந்தப்போதான் ரஹ்மான் சார், ‘கடல்’ படத்தில் `அடியே... அடியே...’ பாடல் பாடும் வாய்ப்பு தந்தார். அதுக்குப் பிறகு  ஏகப்பட்ட வாய்ப்புகள்...” - பேச்சில் உற்சாகம் பொங்குகிறது சித் ஸ்ரீராமுக்கு.

 “ஏ.ஆர்.ரஹ்மான் என் இன்ஸ்பிரேஷன்!”

‘‘ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், `அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ‘தள்ளிப்போகாதே...’ பாடல் செம வைரல் ஆகியிருக்கே... இதை எதிர்பார்த்தீங்களா?’’

‘‘இந்தப் பாடலை டிசம்பர் முதல் வாரத்துல ரிக்கார்ட் பண்ணினோம். மறுபடியும் டிசம்பர் 31-ம் தேதி ரஹ்மான் ஸ்டுடியோவுல இருந்து கூப்பிட்டாங்க. பாட்டுல சில மாற்றங்கள் செய்து, மறுபடியும் ரிக்கார்ட் பண்ணினோம். அப்போ `நிச்சயம் இது ஒரு ஸ்பெஷல் பாட்டு'னு தோணுச்சு. ஆனால், இந்த அளவுக்கு ரீச் ஆகும்னு எதிர்பார்க்கலை. பாட்டு ரிக்கார்ட் பண்ணி முடிச்ச அடுத்த நாள் புத்தாண்டு ஆரம்பமாச்சு. அன்னைக்கே ரிலீஸ் பண்ணிட்டாங்க. புத்தாண்டின் முதல் பரிசு இந்தப் பாட்டுத்தான்.''

‘‘ஓ.கே... ரஹ்மான் இசையில் தொடர்ந்து பாடுறீங்க. அவருடனான உங்க அனுபவம் சொல்லுங்க?’’

‘‘அவர்தான் என் இன்ஸ்பிரேஷன். அவர் பாடுறதோ, மியூஸிக் பண்றதோ இல்ல அவர் பேசறதுகூட அவ்வளவு பியூரா இருக்கும். அவரோட வேலைசெய்ற சூழலே தெய்வீகமா இருக்கும். அவர்கிட்ட பாராட்டு வாங்குறது அவ்வளவு ஈஸி இல்லை. ‘அடியே...’ பாட்டின் இறுதியில், கொஞ்சம் ராகம் சேர்த்து நானாவே பாடினேன். ரஹ்மான் சார் ‘தட் வாஸ் கூல்’னு பாராட்டினார்.’’

‘‘இப்போதைய இசையமைப்பாளர்களில் அனிருத் இசையில் பாடியிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி?’’

``நான் லாஸ் ஏஞ்சலஸ்ல இருக்கும்போது அனிருத் `எனை மாற்றும் காதலே...’ ட்யூன், பாடல் வரிகள் ரெண்டையும் அனுப்பிவெச்சார். ட்யூனைக் கேட்டதுமே ரொம்பப் பிடிச்சது. உடனே பாடி, ரிக்கார்ட் பண்ணி அனுப்பிட்டேன். ரொம்ப சீக்கிரமா முடிஞ்ச பாட்டுல அதுவும் ஒண்ணு.’’

 “ஏ.ஆர்.ரஹ்மான் என் இன்ஸ்பிரேஷன்!”

‘‘இண்டிபெண்டன்ட் மியூஸிக் மேல ரொம்பத் தீவிரமா இருக்கீங்களே?’’

‘‘ மியூஸிக்கை நான் மூணு வகையா பார்க்கிறேன். சினிமாவுல பின்னணிப் பாடுறது, கச்சேரிகள்ல கர்னாடக இசை பாடுறது, இன்னொண்ணு இண்டிபெண்டன்ட் மியூஸிக். மூணுமே வேற வேற மாதிரி ஒரு திருப்தி தரும். ஆனா, இண்டிபெண்டன்ட் மியூஸிக்ல, பாடல் மூலம் நான் யாருனு இந்த உலகத்துக்குக் காட்ட முடியும். `நாம் எழுதுற வரிகளுக்கு, நாமே அமைக்கும் இசை’னு தனித்துவம் இருக்கும்.’’

‘‘உங்க பாடல்கள் எல்லாம் இங்கிலீஷ்லதான் இருக்கு. தமிழ்ல ஆல்பம் பண்ணும் ஆர்வம் இருக்கா?’’

``இப்போ நான் ‘இன்சோம்னியாக்’னு ஒரு ஆல்பம் பண்றேன். இன்னும் சில மாதங்கள்ல ரிலீஸ் பண்ணும் ப்ளான் இருக்கு. தமிழ்ல ஆல்பம் பண்ணும் ஆசை இல்லாமலா இருக்கும்? என்னன்னா... எனக்கு அந்த அளவுக்கு தமிழ்ல பாடல் எழுத வராது. அப்படி ஒரு பாடலாசிரியர் கிடைச்சா நிச்சயமா பண்ணுவேன்.’’

‘‘பெர்க்லி இசைக் கல்லூரியில் படித்த அனுபவம் எப்படி உதவுது?”

‘‘அங்க எப்பவுமே நிறைய இசையமைப் பாளர்கள் இருப்பாங்க. அங்கே நான் படிக்கலைனா, மியூஸிக்ல இவ்வளவு ஆர்வம் காட்டியிருக்க மாட்டேன். எப்படி ஒரு பாட்டு எழுதணும், ரிக்கார்டிங் பண்ணணும்னு எல்லாவற்றையும் கத்துக்கிட்டது பெர்க்லி காலேஜ்லதான். வெறும் ஹாபியா மட்டும் இருந்த இசையை பேஷனா மாத்தினது பெர்க்லி காலேஜ்தான்.’’

 “ஏ.ஆர்.ரஹ்மான் என் இன்ஸ்பிரேஷன்!”

‘‘தமிழ் சினிமா இசையமைப்பாளர் ஆகிற ஆசை இருக்கா?’’

‘‘வாய்ப்பு வந்தா நிச்சயம் பண்ணுவேன். ஆனால், அந்த வாய்ப்பு அவ்வளவு சாதாரணமா வந்துடாது. முதல்ல என்னை அதுக்குத் தகுதிப்படுத்திக்கணும். அதுக்கு அப்புறம்தான் வர்ற வாய்ப்பைப் பயன்படுத்துவேன்.’’

‘‘‘தள்ளிப்போகாதே...’ பாடலை சிம்புவும் பாடியிருக்காரே..?’’

‘‘அதைப் பத்தி நான் எதுவும் சொல்ல விரும்பலை.”