Published:Updated:

தமிழ் மக்கள் திருந்த மாட்டாங்க!

கே.கே.மகேஷ்படங்கள் : வீ.சிவக்குமார்

##~##

ஜீன்ஸ், டி-ஷர்ட் டைரக்டரைக் காணோம். பட்டாபட்டி டிராயர், கைவெச்ச பனியன், தார்க்குச்சி, பித்தளை வாளி என்று பட்டிக்காட்டு மனுஷனாக மாறி இருக்கிறார் பாசத்துக்கு உரிய பாரதிராஜா. 'அப்பனும் ஆத்தாளும்’ தொலைக்காட்சித் தொடரின் டைட்டில் பாடலுக்காகத்தான் இந்த வேடமாம். 'நோ பாலிடிக்ஸ் ஓ.கே?’ என்று கண்டிஷனோடுதான் பேச ஆரம்பிக்கிறார்...

 '' 'அப்பனும் ஆத்தாளும்’ உங்க புதுப் பட டைட்டில்னு சொன்னீங்க. அப்புறம் எப்படி இது சீரியல் டைட்டில் ஆனது?''

''கரெக்ட். ஒரு சோஷியல் மெசேஜ் சொல்ற படம் எடுக்க நினைச்சேன். வெறும் ரெண்டே கால் மணி நேரத்தில் அதைச் சொல்ல முடியாது. ஸோ... கொஞ்சம் லிட்டில் பிட் எக்ஸ்டெண்ட் பண்ணி, சின்னத் திரைக்குக் கொண்டுவந்துட்டேன். 750 எபிசோட்ஸ் போன 'தெக்கத்திப் பொண்ணு’ சீரியலில் பெரிசா மெசேஜ் எதுவும் இல்லை. இதில் இருக்குது. வெய்ட் அண்ட் வாட்ச்!''

''சினிமாவை விட்டுட்டு இப்படித் தொடர்ந்து டி.வி. சீரியல் பண்றது அலுப்பா இல்லையா?''

''அண்ட் ஒய் திஸ் கொஸ்டீன்? சினிமா, சமூகத்தில் எனக்குப் பெரிய அங்கீகாரம் கொடுத்துச்சு. ஆனா, அடித்தட்டு மக்களிடம் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தது ஸ்மால் ஸ்கிரீன்தான். இப்போ எந்த வில்லேஜுக்குப் போனாலும், என்னைத் தூக்கிவெச்சுக் கொண்டாடுறாங்க. தே செலிபரேட் மீ. இதில் பெருசா வருமானம்னு ஒரு எழவும் கிடையாது. என் மண்ணைப்பற்றி, என் மக்களைப்பற்றிப் பேசுறேங்கிற பெருமை கிடைக்குது. சீரியல் ஒரு ரொட்டேஷனுக்கு வந்ததும், அடுத்த பட வேலையில் இறங்கிருவேன்!''

தமிழ் மக்கள் திருந்த மாட்டாங்க!

''அடுத்த படம் என்ன?''

'' யா... 'அன்னக்கிளியும் கொடிவீரனும்’. அது அற்புதமான திரைக் காவியம். இது வரை நான் காட்டின கிராமங்கள் வேற. இதில் சொல்லப்போற கிராமம் கம்ப்ளீட்லி டிஃபரென்ட். கதாபாத்திரங்களும் புதுசு. என் நண்பருடைய மகனை ஹீரோவாகவும் இன்னொரு நண்பருடைய மகளை ஹீரோயினாகவும் அறிமுகப்படுத்துறேன். என் நண்பர்கள் ரெண்டு பேரும் பிக் ஷாட்ஸ். எனக்காக அவங்க பிள்ளைங்களை நடிக்க அனுப்பிட்டாங்க. அவங்க யார்னு இப்ப சொல்ல மாட்டேன். இட்ஸ் எ சஸ்பென்ஸ்... ஓ.கே!''

''தமிழ் சினிமா எப்படி இருக்குது?'

''நல்லா இருக்கு. ஆயிரம் கமர்ஷியல் படங்கள் வந்தாலும், நடுவில் சில இளைஞர்கள் அற்புதமாப் பண்ணிடுறாங்க. ரீசன்ட்டா 'வாகை சூட வா’ பார்த்தேன். குட் அட்டெம்ப்ட். 'மைனா’ பார்த்தேன். வெரி ஹேப்பி. வில்லேஜ் படங்களை என்னுடைய காலத்துக்கு அப்புறமும் அழகாப் பண்றாங்க. வெல்டன் மை பாய்ஸ்!''

''தி.மு.க. குடும்ப உறுப்பினர்களின் பிடியில் இருந்து தமிழ் சினிமா மீண்டு வந்திருச்சா?''

''சினிமா ஒரு தொழில். இதில் யாரும் வரலாம். போகலாம். இன்னார்தான் இருக்கணும்னு எந்த நிர்பந்தமும் கிடையாது. சிலருக்கு வெற்றி வரும். சிலருக்குத் தோல்வி வரும். இது ஒரு பொதுச் சந்தை. ஒண்ணு மட்டும் சொல்றேன்... தொழிலில் போட்டி இருக்கலாம். பொறாமை இருக்கக் கூடாது!''

''மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிரா சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவந்தாங்களே...''

''கொலைக்குக் கொலையே தீர்வாகாது. எமோஷனல் மர்டர் இஸ் எ மர்டர். ஆனால், அதற்கு மரண தண்டனை கொடுப்பது திட்டமிட்ட கொலை. உயிர்... ஒரு அற்புதமான விஷயம். இங்கேருந்து ராக்கெட் விடலாம். நிலாலகூட போய் இறங்கலாம். ஆனா, மெஷினால ஒரு புள்ளை பெத்துத் தர முடியுமா? ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து இப்படி ஒரு பிள்ளைதான் வேணும்னு உருவாக்க முடியுமா? என்னால் இன்னொரு பாரதிராஜாவைக் கொண்டுவர முடியுமா? கேன் ஐ கிரியேட் அனதர் பாரதிராஜா? இன்னொரு இளையராஜாவைக் கொண்டுவர முடியுமா? சுஜாதா இஸ் நோ மோர் நவ். கேன் வீ கெட்பேக் சுஜாதா? சக மனிதனை அழிப்பதற்கு நமக்கு எந்த ரைட்ஸும் கிடையாது. இதுபற்றி நான் ஏற்கெனவே அறிக்கைவிட்டேன். அதற்கு மரியாதை கொடுத்து, சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்து இருக்காங்க. அதில் அந்தம்மா என்னுடைய பெயரையும் மென்ஷன் பண்ணி இருக்காங்க. அது பெரிய அங்கீகாரம். அதுக்காக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிச்சு இருக்கோம். அஸ் எ பிரசிடென்ட் ஆஃப் த அசோஸியேஷன், ஸி கேவ் ரெஸ்பான்ஸ் டு மை வேர்டு, ஸோ தி கிரேட் திங்!''  

தமிழ் மக்கள் திருந்த மாட்டாங்க!

''சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதைக் கடுமையாகச் சாடியவர் நீங்கள். நடிகர் விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவர் ஆகிவிட்டார். இப்போது என்ன சொல்கிறீர்கள்?''

(கோபத்தில் முகம் ஜிவுஜிவுக்கிறது...) ''இந்த மக்கள் எந்த விதையை விதைக்கிறார்களோ... அதையே அறுப்பார்கள். கட்-அவுட்டுக்குப் பாலாபிஷேகம் பண்றாங்க. குஷ்புவுக்குக் கோயில் கட்டினாங்க. அரசியலுக்கு வருவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று தீர்மானிக்கிற சக்தி, தமிழ் மக்களுக்கு இதுவரைக்கும் வரலை. நான் கோமாளியா, சர்க்கஸ்காரனா வித்தை காட்டுறதை ரசிக்குறாங்க. அதோட நிறுத்திக்கணும். நான் யார்? என் தொழில் என்ன? திறமை என்னன்னு பார்க்கணும். அதை விட்டுட்டு, என்னைப் பெரிய ஆளா நினைச்சு மேலே கொண்டுவரக் கூடாது. நான் சொல்லியோ, நீங்க சொல்லியோ... தமிழ் மக்கள் திருந்த மாட்டாங்க. காலம் வரும்போது, அவங்க விதைச்சதை அறுவடை செய்றப்ப உணர்வாங்க!''

''தயாரிப்பாளர் சங்கத்துல ஒரே பிரச்னையா இருக்குதே?''

''அது தெரியலையே பிரதர். நான் இங்கே வந்து 20 நாள் ஆச்சு. 9-ம் தேதி ஏதோ எலெக்ஷன் இருக்குனு சொன்னாங்க. 'ஓ.கே. ஐ வில் டிரை டு அட்டெண்ட் தட் எலெக்ஷன்’னு சொல்லி இருக்கேன். தட்ஸ் ஆல்!''

''கூடங்குளம் அணு மின் நிலையம் பிரச்னைபத்தி...''

''எனக்குத் தெரியாத விஷயங்களை நான் பேச மாட்டேன். அது அதிகப்பிரசிங்கித்தனம். நான் ஒண்ணும் சயின்டிஸ்ட் கிடையாது.  'யோவ்... எப்படிய்யா சினிமா எடுக்கப்போற? இந்தக் காலக்கட்டத்துக்கு ஏத்த மாதிரி என்ன செய்யப்போறே?’னு நீ கேளு மிஸ்டர்... நான் சொல்றேன். சும்மா சும்மா என்கிட்ட வந்து... கூடங்குளம் அணு மின் நிலையம்னா என்ன? பிரணாப்புக்கும் சிதம்பரத்துக்கும் என்ன பிரச்னைனு எல்லாம் கேட்காதே. ஐ டோன்ட் லைக் இட்!''

''நீங்க சொல்ல விரும்புற விஷயங்கள்தான் என்ன?''

''பத்திரிகைக்குனு ஒரு தர்மம் இருக்கு. நீங்க நினைச்சா, யாரையும் வளர்த்தும் விடலாம்... கவுத்தும்விடலாம். நாட்டுக்கு எது நல்லதோ... அதை மட்டும் செய்யுங்க. பாரதிராஜாவுக்கு என்ன தெரியுமோ அதை மட்டும் எழுதுங்க. சும்மா பாப்புலாரிட்டிக்காக ஒருத்தனைத் தூக்கி எழுதி, இந்தச் சமூகத்தைக் கெடுத்துராதீங்க. ஒருத்தன் புதுசா ஒரு துறைக்கு வந்தா, 'இதில் உனக்கு என்ன தெரியும்?’னு கேளுங்க. பாப்புலாரிட்டிங்கிற பேர்ல திறமை இல்லாத ஒரு துறைக்குள் அவனைத் திணிக்காதீங்க. த பேட் கல்ச்சர், இன் லாஸ்ட் டென் இயர்ஸ். இங்கேயும் ஆந்திராவிலும்தான் இந்த கல்ச்சர் இருக்கு. இதைப் பார்த்துதான் பொடிப் பசங்ககூட நாளைக்கு சி.எம். ஆகணும்கிறான். எட்டாம் கிளாஸ் முடிக்காதவன் கல்வித் தந்தை ஆகிடுறான். தகுதியே இல்லாதவன் அரசியலுக்கு வர்றான். என் இனிய தமிழ் மக்களே... எனக்குக் கோபம் கோபமா வருது!''