Published:Updated:

"சந்தோஷமா இருக்கேன் பிரதர்!”

"சந்தோஷமா இருக்கேன் பிரதர்!”
News
"சந்தோஷமா இருக்கேன் பிரதர்!”

ம.கா.செந்தில்குமார்

‘‘அப்பா, மத்தவங்க சுதந்திரத்துல தலையிட மாட்டார், அது மகனாவே இருந்தாலும்கூட. ‘இந்தப் பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்’னு ஃபாரின்ல இருந்து போன்ல சொன்னதும், ‘கல்யாணம் எப்படா?’னு கேட்டார். `சினிமாவுக்குப் போறேன்’னு சொன்னப்பவும் எந்த எதிர்ப்பும் காட்டலை. ஆனால், நான் முழுநேர நடிகனா பரபரப்பா நடிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இறந்துட்டார். அந்த ஒரு வருத்தத்தைத் தவிர மத்தபடி சூப்பரான ஸ்வீட்டான வாழ்க்கை. சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கேன் பிரதர்’’ - இந்த இயல்பும் மகிழ்வும்தான் விஜய் சேதுபதி.

‘காதலும் கடந்துபோகும்’, ‘சேதுபதி’, ‘இறைவி’, ‘இடம் பொருள் ஏவல்’... என ரிலீஸுக்கு அணிவகுத்து நிற்கின்றன அரை டஜன் படங்கள். 2016-ம் ஆண்டை `விஜய் சேதுபதி ஆண்டு' என்றே சொல்லலாம்.

‘‘ ‘சூது கவ்வும்’ படத்துக்குப் பிறகு நலன் குமரசாமியுடன் ‘காதலும் கடந்துபோகும்’. என்ன ஸ்பெஷல்?’’

‘‘கரடுமுரடா இருக்கிற ஒருத்தனுக்கும் ஹைஃபையா இருக்கிற ஒரு பொண்ணுக்கும் ஏற்படுற அன்புதான் ‘காதலும் கடந்துபோகும்’. ரொம்ப ஸ்வீட்டான, அழகான காதல் கதை. ஆனால், படத்தில் காதல் இருக்காது. ஆமாம் ஒருத்தருக்கொருத்தர் `ஐ லவ் யூ' சொல்லிக்க மாட்டாங்க. கதாபாத்திரங்களுக்குள்ள அந்தப் பரிமாற்றம் பெருசா இல்லைனாலும் ஆடியன்ஸ் மனசுல அந்த லவ் ஃபீல் ஆகும். அங்கங்க மாஸாவும் செம ஃபன்னாவும் இருக்கும். என்னைப் பொறுத்தவரை இது திரும்பத் திரும்பப் பார்க்கணும்னு தோணவைக்கிற படமா இருக்கும்.’’

"சந்தோஷமா இருக்கேன் பிரதர்!”

‘‘அடுத்து ‘சேதுபதி’னு போலீஸ் லைன் பிடிச்சிட்டீங்க... இறங்கி அடிக்கலாம்னு முடிவா?’’

‘‘‘சேதுபதி’ ட்ரெய்லர் பார்த்துட்டு, ‘இப்படித்தான் படம் இருக்கும்’னு நீங்க ஒண்ணு நினைக்கிறீங்கள்ல, ஆனால் அது அல்ல அந்தப் படம். ஹீரோவை ஏத்திவைக்கிறது, உயர்த்திவெச்சுப் பேசுறதுதான் மாஸ்னா, இதுவும் ஒரு மாஸ் படம்தான். ஆனால், நீங்க எதிர்பார்க்கிற மாஸ் கிடையாது. இயக்குநர் அருண்குமார் தன் பாணியில் பேசியிருக்கார். ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் ‘சேதுபதி’. ஆக்‌ஷன்ல மாஸும், ஃபேமிலியில் அந்த எமோஷன்ஸும் ரொம்ப இயல்பா வந்திருக்கு.’’

‘‘மறுபடியும் மல்ட்டி ஹீரோஸ் படம் பண்றீங்க. ‘இறைவி’யில் என்ன சொல்லவர்றீங்க?’’

‘‘ ‘இறைவி’ மாதிரி ஒரு கதையை எழுதினதுக்கும் அதைப் படமா எடுத்ததுக்கும் முதல்ல கார்த்திக் சுப்புராஜுக்குப் பெரிய நன்றி. இதுல நடிச்சதுக்கு ரொம்பப் பெருமைப்படுறேன். அம்மா, மனைவி, சகோதரி, மகள்னு ஏதோ ஒருவகையில் பெண்ணின் தொடர்பு இல்லாமல் இங்கே யாருமே இருக்க முடியாது. அவங்க இல்லைனா நம்ம வாழ்க்கையில் எமோஷன்ஸே இல்லை. அதை உணர்த்துற படமா ‘இறைவி’ இருக்கும். எப்பவுமே இந்த மாதிரியான படங்கள் ஏதோ கருத்து சொல்ற படமா போய்ச் சேரும். ஆனால், அந்த மாதிரி இல்லாம பக்கா என்டர்டெய்னிங் ஃபிலிமா வந்திருக்கு. கருத்து சொல்ற தொனி கூடவே கூடாதுங்கிறதுல, கார்த்தி ரொம்ப உறுதியா இருந்தார். ‘இறைவி’, கருத்தும் சொல்லும்; கலகலப்பாவும் இருக்கும்.’’

‘‘நலன் குமரசாமி, கார்த்திக் சுப்புராஜ், அருண்குமார்... என நேற்றைய ‘நாளைய இயக்குநர்கள்’ எல்லோரும் இன்றைய விஜய் சேதுபதி இயக்குநர்கள். என்ன காரணம்?’’

‘‘நாம யாரையும் பிடிச்சு இழுக்க முடியாது. இவங்க எவ்வளவு சென்சிபிள்னு எல்லாருக்குமே தெரியும். ‘என் கதைக்கு சரியான ஆள் யாரோ அவங்களை வெச்சுத்தான் பண்ணுவேன்’கிறதுல உறுதியா இருக்கிறவங்க. இந்த மூணு பேர் படங்கள்லயும், நான் பொருந்த மாட்டேன்னு நினைச் சிருந்தாங்கன்னா, ஃப்ரெண்டுங்கிறதுக்காக என்னை வெச்சு படம் பண்ணவே மாட்டாங்க. நானும் அதை எதிர்பார்க்க மாட்டேன். அந்தக் கதைகளுக்கு நான் சரினு அவங்களுக்குப் பட்டுது... கூப்பிடுறாங்க. எனக்கும் அந்தக் கதைகள் பிடிச்சிருந்தது. பரஸ்பரம் முழு மனசோடு வொர்க் பண்றோம்.’’

‘‘அடுத்தடுத்து படங்கள் பண்றது நல்ல விஷயம். ஆனால், ஒரே சமயத்தில் இவ்வளவு படங்கள் முடங்கி இருக்கிறதை எப்படிப் பார்க்கிறீங்க?’’

‘‘அந்தப் படங்கள் முடங்கி இல்லை... முடிச்சு ரெடியா இருக்கு. ரிலீஸ் தள்ளித் தள்ளிப் போய் இப்ப வரிசையில் நிற்குது. நான் படத்தை ஒப்புக்கிட்ட மாதிரி நடிச்சு, முடிச்சுக்கொடுத்து ரொம்ப நாள் ஆச்சு. எப்பவோ வந்திருக்கவேண்டிய படங்கள். அது வராததுக்கும் சில காரணங்கள் இருக்கு. இங்கே எத்தனை படங்கள் பண்றோம்கிறது முக்கியம் இல்லை; அவை எத்தனை ரசிகர்களைப் போய் சேருதுங்கிறதுதான் முக்கியம். எந்தத் தொந்தரவும் இல்லாமல், அந்தப் படங்கள் வெளிவரணும்.’’

‘‘ ‘நானும் ரௌடிதான்’ பட வெற்றி, உங்களுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்குமே?’’

‘‘அந்தப் படம் பார்த்தவங்க எல்லோரும் `செம காமெடியா இருந்தது'னு சொன்னாங்க. அந்த ஸ்கிரிப்ட் எழுதுறதுக்கு மிகப் பெரிய மெனக்கெடல் வேணும். அதுல ஹ்யூமர் அவ்வளவு அழகா வந்திருக்கும். ஆனால், நடிக்கும்போது எனக்குத் தெரியலை. டப்பிங் பேசும்போது ‘இதை விக்கி எப்படிப் பண்ணினாப்ல!’னு எனக்கு ஆச்சர்யமா இருந்தது. ஏன்னா, எமோஷன்ஸ் வரும், அடுத்த செகண்ட்லயே காமெடி, திரும்ப எமோஷன்ஸ்னு இடைவெளி இல்லாம மாறி மாறி வரும். அது விக்கி எடுத்த தைரியமான முடிவு. இந்தப் படத்தைப் பற்றி சொல்றதா இருந்தா விக்கிதான் பிரதானம். பாட்டு எழுதுறது, மியூஸிக்ல தனி கவனம் செலுத்துறதுனு அவர் ஒரு ஃபயரா உழைச்சுக்கிட்டே இருந்தார். அடுத்து தயாரிப்பாளர் தனுஷ். அவர் சப்போர்ட் இல்லைனா அந்தப் படம் கிடையாது.’’

"சந்தோஷமா இருக்கேன் பிரதர்!”

‘‘அடுத்ததும் தனுஷ் தயாரிப்பில் ஒரு படம் பண்றதா தகவல். `சிவகார்த்திகேயனுக்குப் போட்டியாகத்தான் தனுஷ் உங்களை வளர்த்துவிடுறார்'னு வர்ற செய்திகளை எப்படி எடுத்துக்கிறீங்க?’’

‘‘அவங்க ஏதோ போரடிக்குது பேசிக்கிறாங்கனு விட்றவேண்டியதுதான். என்ன நடக்குதுனு எங்களுக்குத்தான் தெரியும். விக்னேஷும் நானும் ‘போடா போடி’ முடிந்ததில் இருந்தே பேசிட்டிருந்தோம். அப்ப இந்தப் படத்துல நான் ஹீரோவே கிடையாது. ஏன்னா, அது எனக்கு எழுதின கதை கிடையாது. என்னால சின்னப் பையனால்லாம் நடிக்க முடியாதுனு நம்பினேன். தேதி தள்ளிப்போயிட்டே இருந்தது. ‘விக்கி... இந்தக் கதையைத் தூக்கிவெச்சிட்டு, எனக்கு வேறு ஒரு கதை ரெடி பண்ணு. நான் தேதி தர்றேன்’னு சொன்னேன். அப்ப விக்கி, `எனக்காக இந்தக் கதையை நீங்களே பண்ணுங்க. நல்லா வரும்’னு சொன்னார். அப்படி ஆரம்பிச்சதுதான் ‘நானும் ரௌடிதான்’ படம். அடுத்தும் தனுஷ் சார் தயாரிப்புல நடிக்கிறது தொடர்பா பேச்சுவார்த்தை போயிட்டிருக்கு.’’

‘‘ ‘காக்கா முட்டை’ மணிகண்டன் உங்களின் நீண்டநாள் நண்பர். அவரின் இந்த வெற்றி பற்றி சொல்லுங்க?’’

‘` ‘காக்கா முட்டை’ படத்தின் வெற்றி, என்னை எந்த வகையிலும் ஆச்சர்யப்படுத்தலை. ஏன்னா, மணிகண்டன் இதைவிடப் பெரிய இடத்துக்குப் போகவேண்டிய ஆள். அவர் வெரி மெச்சூர்டு ஃபிலிம் மேக்கர். தான் சிந்திக்கிறதை ஃப்ரேம்ல கொண்டுவர்றதுக்கு எவ்வளவு மெனக்கெடுவார், எவ்வளவு பொறுமை காப்பார்னு எனக்கு நல்லாவே தெரியும். அவர் போற இடங்கள் இன்னும் ஆழமா இருக்கும். அடுத்து அவர் இயக்கத்தில் ‘ஆண்டவன் கட்டளை’ படம் பண்றேன்.’’

‘‘ ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ மாதிரியான படங்கள் வெற்றி பெறாததில் வருத்தம் உண்டா?’’

‘‘ ‘பண்ணையாரும் பத்மினியும்’ உண்மையில் கொண்டாடியிருக்கவேண்டிய படம். இது நான் சொல்லலை. பார்த்தவங்க சொன்னது. ஆனாலும் அது ரசிகர்களைப் போய்ச் சேர்ந்தது. அதன் தோல்விக்கு சில காரணங்கள் இருக்கு. அதைச் சொல்லாமல் தவிர்க்கிறது நல்லது. அதை எல்லாம் வெளிப்படையா பேசுற அளவுக்கு இங்கே யாருக்கும் எந்தச் சுதந்திரமும் இல்லை. அடுத்து `புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தில் ஜனா சார் டைரக்‌ஷன்ல நடிச்சதே பெருமை; சந்தோஷம். ஏன்னா, அது முந்தாநாள் நைட் உட்கார்ந்து யோசிச்சு எழுதின படம் கிடையாது. நான் அந்தப் படத்தின் மூலமா நிறையக் கத்துக்கிட்டேன். அந்தப் படம் பேசின அரசியல் போய்ச் சேரணும்னு ஆசைப்பட்டேன். அது போய்ச் சேராததுக்கு சிலர் செய்த வேலைகள்தான் காரணம். அது எனக்கு நல்லாவே தெரியும். அதை நான் சொல்ல விரும்பலை.’’

‘‘தொடர்ந்து இரண்டு மூன்று ஹீரோக்கள்கூட சேர்ந்து நடிக்கிறீங்க. நல்ல விஷயம். ஆனால், அது உங்களின் வளர்ச்சியைப் பாதிக்காதா?’’

‘‘நீங்க வெளியே இருந்து ஒண்ணைப் பார்க்கிறீங்க. ஆனால், உள்ளுக்குள்ள வியாபாரமா ஒண்ணு பார்க்கப்படுது. அது சேர்ந்து நடிப்பதைப் பண்ணவிடாம செய்யுது. கதாநாயகனா எனக்கு சில கருத்துக்களைக் கொண்டுவந்து சேர்க்கிறாங்க. அது சில சமயத்துல குழப்பங்களை ஏற்படுத்துது. ஆனால், எனக்கு ஒரு விஷயம் பிடிச்சிருந்தா நிச்சயம் யார்கூட வேணும்னாலும் சேர்ந்து நடிப்பேன். அதுல எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.’’

‘‘நீங்க தயாரிச்ச `ஆரஞ்சு மிட்டாய்’ ரிசல்ட்டை எப்படி எடுத்துக்கிட்டீங்க?’’

‘‘ அது ரொம்ப நல்ல படம். அதை கொரியாவில் திரையிட்டோம். அவங்களுக்கு, நம் மொழிகூடத் தெரியாது; என்னையும் யார்னு தெரியாது. படம் பார்த்தாங்க. முடிஞ்சதும் கேள்வி-பதில் செஷனில், ‘எதுக்கு அந்தப் பெரியவர் அவ்வளவு கோவமா இருக்கார்?’னு கேட்டாங்க. அந்தக் கேள்வியில் அவங்க என் படத்தை எவ்வளவு ஆழமாப் பார்த்திருக்காங்கனு புரிஞ்சுக்க முடிஞ்சது. நான் ஒரு படத்தை எடுத்ததாலேயே அது சரியான படம்னு வாதம் பண்ண வரலை. ஆனால், அந்தக் கதையைப் புரிஞ்சிக்கிட்ட ரசிகர்கள்கிட்ட இருந்து நல்ல கமென்ட்கள் வாங்கிட்டேன். அது இன்னும் சரியான சமயத்தில் ரிலீஸ் ஆகியிருந்தா நல்லா போயிருக்கும். நான் இன்னும் சினிமா வியாபாரம் சரியா கத்துக்கலை. ஆனாலும் அடுத்து ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தைத் தயாரித்து முடிச்சிருக்கோம். விருது விழாக்களுக்குப் போய் வந்த பிறகு, அது தமிழகத் திரைக்கு வரும்.’’

"சந்தோஷமா இருக்கேன் பிரதர்!”

‘‘பயங்கர பிஸியா இருக்கீங்களே. வீட்ல பசங்க, மனைவி என்ன சொல்றாங்க. அவங்களுக்கு நேரம் ஒதுக்க முடியுதா?’’

‘‘என் பசங்களுக்கு ‘நானும் ரௌடிதான்’ ரொம்பப் பிடிச்சிருந்தது. என் மனைவிக்கு ‘ஆரஞ்சு மிட்டாய்’ பிடிக்கும். நான்கைந்து முறை பார்த்துட்டாங்க. அதிக நேரம் ஒதுக்கி அவங்ககூட இருக்க முடியலை என்பது வருத்தம்தான். ஆனால், சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ஆபீஸ் போய் வந்தப்ப இருந்ததைவிட இப்ப அதிகமாவே நேரம் ஒதுக்குறேன். காரணம், கொஞ்சம் வசதி வாய்ப்பு வந்ததுதான். வெளியூர் ஷூட்டிங்ல இருந்தாக்கூட பார்க்கணும்னு தோணுச்சுன்னா உடனே வரவெச்சு நாலஞ்சு நாட்கள் கூடவே தங்கவெச்சுக்கிறேன். வீ ஆர் ஹேப்பி பிரதர்.’’