Published:Updated:

ரீலான ரியல் சம்பவங்கள்!

ரீலான ரியல் சம்பவங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரீலான ரியல் சம்பவங்கள்!

பா.ஜான்ஸன், கார்த்தி

ண்மைச் சம்பவங்களை மையமாகவைத்து எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேவருகிறது. அவற்றுக்குக் கிடைக்கும் பாராட்டுக்கள், பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகள் தவிர, அவற்றை ஒரு செல்லுலாய்டு பதிவாகக் கருதும் மனநிலையும் வந்துவிட்டது. கடந்த வாரம் வெளியான இரண்டு `உண்மைச் சம்பவ'ப் படங்கள் இங்கே!

`ஏர்லிஃப்ட்’


குவைத்தில் வாழும் தொழிலதிபர், ரஞ்சித் கட்டியல், வளைகுடா நாடுகளின் மீதான சதாம் உசேனின் படையெடுப்பு குவைத்திலும் பரவிவிட்டது என்கிற செய்தியை அறிந்ததும் பதறுகிறார். மக்கள் அனைவருக்கும் உயிர் பயம் பரவுகிறது. குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் எங்கு செல்வது, என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்க, அவர்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்க முடிவுசெய்கிறார் ரஞ்சித் கட்டியல். தனி ஆளாக இதைச் செய்ய முடியாது. எனவே, இந்திய அரசிடம் உதவி கேட்கிறார். அரசாங்கமும் `ராணுவ விமானங்களைக்கொண்டு இதைச் செய்ய முடியாது. ஏனெனில், அங்கு வருவதற்கு ராணுவ விமானங்களுக்கு அனுமதி இல்லை’ என, பயணிகள் விமானங்கள் மூலம் 1,70,000  இந்தியர்களை மீட்கிறது. கின்னஸ் சாதனையான இந்த உண்மைச் சம்பவத்தை மிகச் சிறந்த சுவாரஸ்ய சினிமாவாக மாற்றி யிருக்கிறார்கள்.

ரீலான ரியல் சம்பவங்கள்!

ரஞ்சித் கட்டியல் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் அபாரக் கச்சிதம். சதாம் ஆட்களிடம் அடங்கிப்போவதும், ஒருவித பய ரியாக்‌ஷன்களை வெளிப்படுத்துவதும் என சூப்பர் பெர்ஃபாமன்ஸ்.
சி.ஆர்.டி ஸ்கிரீன் டி.வி-களும், ரேடியோ கேசட்டுகளும், தொலைபேசிவழித் தொடர்பு களும் மட்டுமே தொழில்நுட்பங்களாகக் கொண்டிருந்த காலத்தில் இத்தனை பெரிய நிகழ்வு நடந்தது ஆச்சர்யம் என்றால், அதை அப்படியே திரையிலும் காட்டியிருப்பது இன்னும் ஆச்சர்யம். கதாபாத்திரங்கள், கலவரத்தின் தீவிரம் என எதிலும் குறை வைக்காமல், பரபரவென படத்தைக் கொண்டுபோனதில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன்.

திரையில் நிகழும் காட்சிகள் மூலம் பதற்றத்தை நமக்கும் கடத்துகிறது ப்ரியா சேத்தின் கேமரா. படத்துக்கு சம்பந்தம் இல்லாமல் பெல்லி டான்ஸ், அக்‌ஷய் - நிம்ரத் கவுர் ரொமான்ஸ் என கமர்ஷியல் மசாலாக்கள் படத்தோடு ஒட்டவில்லை.

இருப்பினும் கடைசிக் காட்சியில் தேசியக் கொடியை அசைக்கும்போது சிலிர்த்து எழவைக்கும் உணர்வு, அத்தனை குறை களையும் மறக் கடிக்கிறது.

`தி 33'

செய்தித்தாள்களில், ஆள்துளைக் கிணறுகளில் சிக்கிக்கொண்ட குழந்தை பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் மீட்பு... மாதிரியான செய்திகளைப் படித்திருப்போம். ஆனால், ஆபத்துகள் இருப்பது தெரிந்தும், அதைவிட ஆழமான சுரங்கங்களில் மனிதர்கள் இன்னமும் வேலைபார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  2010-ம் ஆண்டு சிலியில் இருக்கும் ஒரு சுரங்கத்தில் 33 சுரங்கப் பணியாளர்கள் மாட்டிக்கொள்ள, பல நாடுகளின் உதவியுடன் அவர்கள் அத்தனை பேரையும் உயிரோடு மீட்டனர். அதைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் `தி 33’.

ரீலான ரியல் சம்பவங்கள்!

செம்பும் தங்கமும் கலந்திருக்கும் 100 ஆண்டுகள் பழமையான சுரங்கம் ஒன்றில் 33 நபர்கள், அன்றைய வேலைக்காக ஒருவழிப் பாதையில் பயணப்படுகிறார்கள். மலைகள் நகர்வதாக எடுத்துக் கூறியும், அதன் உரிமையாளர் எதையும் கண்டுகொள்ளவில்லை. சுமார் 2,300 அடிக்கும் கீழ் இருக்கும் அவர்கள் திரும்பிச் செல்வதற்கான பாதையை முற்றாக மறைக்கிறது மலை. சுரங்கத்தின் உரிமையாளர்கள் மாட்டிக் கொண்ட 33 பேரையும் மீட்க முடியாது என அறிவிக்கிறார்கள்.

சுரங்கத்துக்குள் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் இல்லாததால், 10 டிரில்லர்களை வைத்து அந்த இடத்தைத் துளையிடுகிறது சிலி அரசு. குறுக்கே சிக்கியிருக்கும் மலை, டிரில்லர்களின் பாதையை மாற்றிவிடுகிறது. எல்லாம் தோல்வியில் முடிய, திட்டத்தைக் கைவிடுகிறார்கள். இறுதி சோதனையாக ஒரு டிரில்லரை அனுப்ப, அது 33 பேர் பாதுகாப்பாகத் தங்கியிருக்கும் இடத்தை அடைகிறது. `நாங்கள் அனைவரும் நலம்’ என ஒரு துணியில் எழுதி டிரில்லரில் மாட்டுகிறார்கள் பணியாளர்கள். உலகையே உலுக்கிய இந்தச் சம்பவத்துக்காக 33 உயிர்களையும் காக்க பல நாடுகள் உதவி புரிகின்றன. அனைவரும் பத்திரமாக மீட்கப்படுகிறார்கள்.

`டெஸ்பராடோ', `தி மாஸ்க் ஆஃப் ஸாரோ' மாதிரியான படங்களில் நடித்த ஆன்டானியோ பண்டாரஸ் ஹீரோவாகக் கலக்கியிருக்கிறார்.

சமீபத்திய நிகழ்வு என்பதுதான் படத்தின் பலம், பலவீனம் இரண்டுமே. பலருக்கும் தெரிந்த செய்தி என்பதால், எப்படியும் 33 பேரையும் காப்பாற்றிவிடுவார்கள் எனத் தெரிந்துவிடுவதால், படம் டாக்குமென்ட்ரிபோல் நகர்கிறது.

படம் முடிந்ததும், உண்மையாக சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட 33 பேரையும் காண்பிக் கிறார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரங்க உரிமையாளர்கள் போதுமான ஆதாரம் இல்லாததால், தண்டனை இன்றி விடுவிக்கப் படுகிறார்கள். உண்மையிலேயே 2013-ம் ஆண்டில் சிலி நீதித் துறை இந்த வழக்கின் விசாரணையை இப்படித்தான் முடித்தது. உலகம் எங்கும் நீதி ஒரே நிலையில்தான் இருக்கிறது.