Published:Updated:

வருது... வருது விருது... விருது

வருது... வருது  விருது... விருது
பிரீமியம் ஸ்டோரி
News
வருது... வருது விருது... விருது

கார்க்கிபவா

சோஷியல் மீடியாவில் அடுத்த ஒரு மாதத்துக்கு ட்ரெண்ட் ஆகப்போகும் டாபிக் #oscar2016. கடந்த ஆண்டு வெளியான படங்களில் இருந்து இறுதிச்சுற்றுக்குத் தேர்வான படங்களின் பட்டியலை, ஆஸ்கர் குழு வெளியிட்டு இருக்கிறது. பட்டியல் வெளியான மறு விநாடியில் இருந்தே ஓவர்டைம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் உலக சினிமா ரசிகர்கள்!

வருது... வருது  விருது... விருது

இந்த முறை ஆஸ்கரின் ஹாட் ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் படங்கள் பற்றியும், நடிகர்கள் பற்றியும் ஒரு மைக்ரோ கவரேஜ் இங்கே...

மேட் மேக்ஸ்

வருது... வருது  விருது... விருது

ஆஸ்கர் அடித்தே தீரும் என்ற லிஸ்ட்டில் முதலில் இருக்கும் படம் `மேட் மேக்ஸ்'. பரந்துவிரிந்த பாலைவனத்தை ஆள்கிறான் கொடுங்கோலன் இம்மார்ட்டன் ஜோ. அவனுக்கு ஐந்து மனைவிகள். வறுமையில் வாடும் அந்த நாட்டு மக்களைப்போல் இல்லாமல், இவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இந்த ஐந்து மனைவிகள் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுக்க நினைக்கிறான் ஜோ. ஆனால், அந்த ஐந்து பெண்களைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல நினைக்கிறாள் ஃப்யூரியோஸா. இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொள்கிறான் மேக்ஸ். `ரோட் மூவி'யான `மேட் மேக்ஸ்' முழுவதுமே ஆச்சர்ய வண்டிகளும் சாகச சேஸிங்குகளும்தான். சென்டிமென்டல் கதை, சுவாரஸ்யமான திரைக்கதை, அதிரடி ஆக்‌ஷன் என பக்காவான கமர்ஷியல் மெட்டீரியல். இயக்கம், ஒளிப்பதிவு, விஷுவல் எஃபெக்ட்ஸ் என 10 பிரிவுகளில் நாமினேட் ஆகியிருக்கிறது இந்தப் படம். எட்டு லட்சியம்... ஐந்து நிச்சயம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறது `மேட் மேக்ஸ்' டீம்.

ரெவனென்ட்

வருது... வருது  விருது... விருது

இந்த வருடமும் ஆஸ்கர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கிறார் லியோனார்டோ டிகாப்ரியோ. ஆனால், கடந்த முறைகள்போல் இல்லாமல் `ரெவனென்ட்' படம் நிச்சயம் டிகாப்ரியோவுக்கு ஆஸ்கர் விருதைப் பெற்றுத்தரும் என நம்புகிறார்கள் அவரது ரசிகர்கள். `ரெவனென்ட்' என்றால் செத்துப்பிழைத்தவன் என அர்த்தம். ஆள் இல்லாத அடர்ந்த பகுதிக்குள் சென்ற `வேட்டைக்காரர்கள்' டீமை கரடி ஒன்று தாக்குகிறது. அதில் அடிபடும் டிகாப்ரியோவை, சாகட்டும் என விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறது டீம். ஆனால் பனியிலும் பசியிலும் நம்பிக்கை இழக்காமல், தன் அன்பான குடும்பத்தை நினைத்தபடி பயணித்துத் தப்பிப் பிழைக்கிறார் டிகாப்ரியோ. மீண்டும் நாட்டுக்குள் வரும் அவர், கைவிட்டவர்களைப் பழிவாங்கினாரா என்பதே `ரெவனென்ட்' படத்தின் அதிரடி க்ளைமாக்ஸ். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து படமாக்கியிருக்கிறார்கள். சிறந்த படம், இயக்கம்... என 12 பிரிவுகளில் `வி ஆர் வெயிட்டிங்' எனக் காத்திருக்கிறது `ரெவனென்ட்'.

தி டேனிஷ் கேர்ள்

வருது... வருது  விருது... விருது

சிறந்த நடிகர் விருதில் டிகாப்ரியோவுக்கு சவால்விடுபவர் எடி ரெட்மாய்ன்.  சென்ற வருடம் `தி தியரி ஆஃப் எவ்ரிதிங்' படத்துக்காக ஆஸ்கர் விருதை வென்ற எடி, இந்த முறை `தி டேனிஷ் கேர்ள்' படத்துக்காக நாமினேட் ஆகியிருக்கிறார். பெண்ணாக மாற விரும்பும் ஓவியக் கலைஞன் கேரக்டரில் எடி தந்திருப்பது அதிரிபுதிரி பெர்ஃபார்மன்ஸ். `படம் சுமார்தான். ஆனால், எடிக்கு அவார்டு ரெடி' என்கிறது அவரது ரசிகர் மன்றம். மொத்தம் நான்கு விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம்.

தி மார்ஷியன்

வருது... வருது  விருது... விருது

விநோதமான சூழ்நிலையில் ஹீரோ தனியே மாட்டிக்கொள்ளும் ஹாலிவுட் டெம்ப்ளேட்டில் வந்த இன்னொரு படம் `தி மார்ஷியன்'. செவ்வாய்கிரகத்துக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் குழுவில் இருக்கும் மாட் டெமோன், அங்கே மாட்டிக்கொள்கிறார். தான் உயிரோடு இருக்கிறேன் என்ற சிக்னலை பூமிக்குத் தரும் வரை அவர் உயிர்பிழைத்திருக்கும் வித்தைகளே ‘தி மார்ஷியன்'. `செவ்வாய்கிரகத்துல விவசாயம் எல்லாம் செய்றான்ப்பா!’ என ரசிகர்கள் கிண்டல் அடித்தாலும், பாக்ஸ் ஆபீஸைத் தகர்த்தெறிந்தது படம். இப்போது ஆஸ்கரிலும் சிறந்த நடிகர் உள்பட ஏழு பிரிவுகளில் நாமினேட் ஆகியிருக்கிறது.

ஜாய்

வருது... வருது  விருது... விருது

உலகம் கொண்டாடிய ஜெனிஃபர் லாரன்ஸின் இன்னொரு படம் `ஜாய்'. ஹாலிவுட்டில் ஆண்களுக்கு மட்டும் அதிகச் சம்பளம் கொடுப்பதாக சென்ற ஆண்டு முழுவதும் குரல் எழுப்பினார் ஜெனிஃபர். `ஜாய்' படம் வந்ததும் `அவர் கேட்பதில் தவறு இல்லை' என்றனர் ரசிகர்கள். `சிங்கிள் மதராக' குழந்தையை வளர்ப்பதுடன், தன் குடும்ப பிசினஸை வெற்றிக்கு இட்டுச்செல்லும் கேரக்டரில் கலக்கியிருந்தார் ஜெனிஃபர். இவருடன் சிறந்த நடிகைக்கான பட்டியலில் மல்லுக்கட்டுகிறார்கள் சார்லட் ராம்ப்ளிங் (45) மற்றும் சாய்ரோஸ் ரொனான் (புரூக்லின்). ஆனால், `ஜெனிஃபர் லாரன்ஸுக்கு ஆஸ்கர் நிச்சயம்' என்கின்றன ஹாலிவுட் தகவல்கள்.

வருது... வருது  விருது... விருது

இவை தவிர `பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்', `தி வாக்' போன்ற படங்களும் விருதுகளை வெல்லக்கூடும். அனிமேஷன் படங்களில் `இன்சைட் அவுட்' படத்துக்கு விருது கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. மோஸ்ட் எக்ஸ்பெக்டட் `விஷுவல் எஃபெக்ட்ஸ்' பிரிவில் புழுதிபறக்கும் `மேட் மேக்ஸு'க்கும், குழந்தைகள் கலாட்டாவான `ஸ்டார் வார்ஸு'க்கும் டிஷ்யூம் டிஷ்யூம். `க்ரீடு' படத்துக்காக சில்வெஸ்டர் ஸ்டாலோனுக்குச் சிறந்த துணை நடிகர் விருது கிடைக்கலாம்.

இந்த முறை சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவிலும் சரி, மற்ற பிரிவுகளிலும் சரி... நம்ம ஊர் ஆட்கள் எவருக்கும் விருது கிடைக்க வாய்ப்பு இல்லை. மேலும், முக்கிய விருதுகளுக்கான பரிந்துரையில் ஒரு கறுப்பினர்கூட இல்லை என்ற எதிர்ப்புகளும் எழுந்திருக்கின்றன. சென்ற வருடமும் இதே குற்றச்சாட்டு எழுந்தபோது, இனி இது நிகழாது எனச் சமாளித்தது ஆஸ்கர் குழு. மீண்டும் அதே கதை. பிரபல நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜேடா ஸ்மித் உள்பட பலர் இந்த வருடம் ஆஸ்கரைப் புறக்கணிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.